Radhika Sarathkumar: ‘விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் எனக்கும் மகன்தான்!’ ராதிகா சரத்குமார் பேட்டி!
Mar 24, 2024, 10:22 PM IST
“விஜய பிரபாகரன் எனக்கும் ஒரு மகன் போலத்தான்; சின்ன பையன் நன்றாக இருக்க வேண்டும்”
விஜயகாந்த் மகன் எனக்கும் மகன் தான் என விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் நடிகையுமான ராதிகா சரத்குமார் கூறி உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
விஐபி தொகுதியாக மாறிய விருதுநகர்!
2008ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு சிவகாசி மக்களவைத் தொகுதிக்கு பதிலாக விருதுநகர் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
இத்தொகுதியில், மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய தொகுதிகளும், விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளும் இடம் பெற்று உள்ளனர்.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி செலிபிரெட்டி தொகுதியாக மாறி உள்ளது. திமுக கூட்டணி சார்பில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் சிட்டிங் எம்பியும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கொறடாவாக உள்ள மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார்.
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் கேப்டன் விஜயகாந்த் மகனான விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார்.
பாஜக சார்பில் நடிகை ராதிகா வேட்பாளராக களம் இறங்கி உள்ளதால் செலிபிரிட்டி தொகுதியாக விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி மாறி உள்ளது.
ராதிகா சரத்குமார் பேட்டி!
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் சிவகாசி கட்சி அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டார் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியை நான் தேர்ந்தெடுக்கவில்லை. பாஜக தலைமையில் இருந்து தேர்ந்தெடுத்து என்னை வேட்பாளராக நிறுத்தி உள்ளனர்.
விருதுநகர் தொகுதி மக்களுக்கு செய்வதற்கு நிறைய உள்ளது . மக்களுக்கு தேவையானதை நான் செய்வேன். விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தொகுதி மக்களுக்கு செயல்பாடு குறைவாக உள்ளது.
விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் எனது மகளுடன் படித்த பையன். எனக்கும் ஒரு மகன் போலத்தான். சின்ன பையன் நன்றாக இருக்க வேண்டும்.
நடக்க இருக்க கூடிய தேர்தல் சட்டமன்றத் தேர்தல் அல்ல பாராளுமன்றத் தேர்தல். நாடு இந்த தேர்தலில் நமக்காக என்ன செய்ய உள்ளது என்பதை தான் பார்க்க வேண்டும். நல்ல திட்டங்கள் தீட்டப்பட வேண்டும், வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்,பட்டாசு தொழிலாளர்கள், பட்டாசு தொழிலை மேம்படுத்த இன்னும் என்ன செய் வேண்டும் என்பதை பார்க்க வேண்டும். எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. இன்னும் நாங்கள் உழைக்க வேண்டும் .
முன்னதாக பொதுமக்களிடம் உரையாற்றிய ராதிகா சரத்குமார், பட்டாசு விபத்தில் இன்னும் ஒரு உயிழப்பு நிகழாமல் தடுத்து நிறுத்த பாடுபடுவேன் என தெரிவித்தார்.