Raadhika Sarathkumar: விருதுநகரில் ராதிகா சரத்குமார்! மதுரையில் ராம சீனிவாசன்! பாஜக பட்டியல் வெளியானது!
”வட சென்னையில் பால் கனகராஜ், நாமக்கலில் கே.பி.ராமலிங்கம், கரூரில் செந்தில் நாதன், சிதம்பரத்தில் கார்த்தியாயினி, நாகையில் ரமேஷ் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்”
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு பாஜகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமமுக, இந்திய மக்கள் கல்வி உரிமை கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று உள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி நடந்து வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
நேற்றைய தினம் முதற்கட்டமாக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. இதன்படி, விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார்.
நடிகர் சரத்குமார் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்த நிலையில் அவரது மனைவி ராதிகாவுக்கு பாஜக சீட் ஒதுக்கி உள்ளது.
திமுக சார்பில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போது சிட்டிங் எம்பியாக உள்ள மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக சார்பில் தேமுதிகவுக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. விஜய பிரபாகரன் வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரையில் பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் போட்டியிடுகிறார். திருவண்ணாமலையில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார்.
திருவள்ளூரில் பால கணபதி, வட சென்னையில் வழக்கறிஞர் பால் கனகராஜ், நாமக்கலில் கே.பி.ராமலிங்கம், கரூரில் செந்தில் நாதன், சிதம்பரத்தில் கார்த்தியாயினி, நாகையில் எஸ்.ஜி.எம்.ரமேஷ், திருப்பூரில் ஏபி முருகானந்தம், பொள்ளாச்சியில் கே.வசந்தராஜன், தஞ்சாவூரில் கருப்பு முருகானந்தம், சிவகங்கையில் தேவநாதன் யாதவ் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்துறை அமைச்சராக உள்ள நமச்சிவாயம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜகவின் முழுமையான வேட்பாளர் பட்டியல்:-
- தென்சென்னை- தமிழிசை சவுந்தராஜன்
- மத்திய சென்னை - வினோஜ் செல்வம்
- கோயம்புத்தூர் - அண்ணாமலை
- நீலகிரி - எல்.முருகன்
- கிருஷ்ணகிரி - சி.நரசிம்மன்
- நெல்லை - நயினார் நாகேந்திரன்
- கன்னியாகுமரி - பொன் ராதாகிருஷ்ணன்
- வேலூர்- ஏ.சி.சண்முகம்
- பெரம்பலூர்- பாரிவேந்தர்
- தென்காசி - ஜான் பாண்டியன்
- புதுச்சேரி - நமச்சிவாயம்
- விருதுநகர் - ராதிகா சரத்குமார்
- மதுரை - ராமசீனிவாசன்
- திருப்பூர் - ஏபி.முருகானந்தம்
- தஞ்சாவூர் - கருப்பு முருகானந்தம்
- நாகை - ரமேஷ்
- சிதம்பரம் - கார்த்தியாயினி
- திருவள்ளூர் - பாலகணபதி
- வடசென்னை - பால் கனகராஜ்
- திருவண்ணாமலை - அஸ்வந்தாமன்
- நாமக்கல் - கே.பி.ராமலிங்கம்
- பொள்ளாச்சி - வசந்தராஜன்
- கரூர்- விவி.செந்தில் நாதன்
- சிவகங்கை - தேவநாதன் யாதவ்