HT MP Story: ’காங்கிரஸை கவிழ்க்குமா அதிமுக!’ கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி கள நிலவரம்!
Apr 13, 2024, 06:30 AM IST
”ராஜகோபாலாச்சாரியின் மகன் சி.ஆர்.நரசிம்மன், சி.சுப்பிரமணியம், வாழப்பாடி ராமமூர்த்தி, கே.ராஜாராம், கே.பி.முனுசாமி, சுகவனம் உள்ளிட்டோர் இந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்ற முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்”
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெற உள்ள 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் மேகங்கள் தென்படத் தொடங்கிவிட்டது. நாடு விடுதலை அடைந்தது முதல் கடந்த 2019ஆம் ஆண்டு ஆண்டு வரையிலான நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றை HT Elections Story தொடர் மூலம் உங்கள் நினைவுக்கு கொண்டு வந்தோம். அந்த வரிசையில் HT MP Story என்ற தொடர் மூலம் தமிழ்நாட்டில் உள்ள எம்பிக்களின் பின்னணி குறித்து அலசுவோம்.
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது.
மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி!
2009 தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாக கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி உள்ளது. அதற்கு முன்னர். ஓசூர், தளி, காவிரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, பர்கூர், பாலக்கோடு ஆகிய தொகுதிகளை உள்ளடக்கியதாக கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி இருந்தது.
9 முறை வென்ற காங்கிரஸ்!
இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 9 முறையும், திமுக 5 முறையும், அதிமுக 3 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளது.
கவனம் பெற்ற எம்.பிக்கள்!
ராஜகோபாலாச்சாரியின் மகன் சி.ஆர்.நரசிம்மன், சி.சுப்பிரமணியம், வாழப்பாடி ராமமூர்த்தி, கே.ராஜாராம், கே.பி.முனுசாமி, சுகவனம் உள்ளிட்டோர் இந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்ற முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.
அமோக வெற்றி பெற்ற காங்கிரஸ்
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார் 611,298 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி 4,54,533 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சியின் மதுசூதனன் 28,000 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஸ்ரீகாருண்ய சுப்பிரமணியம் 16,995 வாக்குகளையும் பெற்று இருந்தனர். நோட்டாவுக்கு 19,825 வாக்குகள் கிடைத்து இருந்தது.
தற்போது யார்?
தற்போது நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ கோபிநாத் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். அதிமுக சார்பில் ஜெயப்பிரகாஷ், பாஜக சார்பில் சி.நரசிம்மன் நரசிம்மன், நாம் தமிழர் கட்சி சார்பில் வித்யா ராணி உள்ளிட்டோர் வேட்பாளர்களாக களம் இறங்கி உள்ளனர்.
களம் யாருக்கு?
தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பலமும், தேர்தல் அனுபவமும் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்துக்கு பலம் சேர்ப்பதாக அமையும். அதிமுகவின் கட்டமைப்பும், திமுக அரசின் மீதான அதிருப்திகளும் அதிமுக வேட்பாளர் ஜெயப்பிரகாஷுக்கு சாதகமானதாக அமையும். மோடி ஆதரவு எண்ணம் கொண்டோரின் வாக்குகள் பாஜக வேட்பாளருக்கு சாதகமானதாக இருக்கும். வீரப்பன் மகள் என்ற அடையாளம், முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆகியவை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா வீரப்பனுக்கு சாதகமானதாக அமையும்.