HT Election Special: கனிமொழியுடன் மோதப்போவது யார்?..பாஜக வேட்பாளர் இவரா? - தூத்துக்குடி தொகுதி களநிலவரம் இதோ..!
Mar 21, 2024, 07:43 PM IST
Thoothukkudi Lok Sabha constituency: கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் முதல் முறையாக தேர்தல் களத்தை சந்தித்த கனிமொழி 3,42,209 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
Lok Sabha Election 2024: ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் 18-வது நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. 7 கட்டங்களாக நடைபெற உள்ள இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டுக்கு மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதாவது ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆளும் கட்சியான திமுக தலைமையிலான ஒரு அணியும், பிரதான எதிர்கட்சியான அதிமுக ஒரு அணியாகவும் இத்தேர்தலை சந்திக்கின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பாமக, அமமுக, தமிழக மக்கள் முன்னேற்ற கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, ஓபிஎஸ் அணி உள்ளிட்டோருடன் இணைந்து தேர்தல் களம் காண்கிறது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவித்து தனித்து களம் காண்கிறது.
நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடுபிடித்துவரும் சூழலில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி மீண்டும் போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில், அவரை எதிர்த்து அதிமுக மற்றும் பாஜக சார்பில் போட்டியிடப் போவது யார் என்ற கேள்வி தொகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை இதுவரை மூன்று தேர்தல்களை மட்டுமே சந்தித்துள்ளது. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு முதல் முறை 2009-ல் நடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.ஜெயதுரை வெற்றி பெற்று முதல்முறையாக நாடாளுமன்றம் சென்றார். அதன்பிறகு, 2014-ல் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி வெற்றி பெற்றார்.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரியுமான கனிமொழி , அதிமுக-பாஜக கூட்டணியில் அப்போதைய தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் போட்டியிட்டனர். இதன் மூலம் இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றது. முதல் முறையாக தேர்தல் களத்தை சந்தித்த கனிமொழி 3,42,209 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திமுக, அதிமுக என மாறி மாறி வெற்றி பெற்றிருந்த நிலையில், இம்முறை தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் கனிமொழியே களம் காண்கிறார். இதனால் திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அவரை எதிர்த்து போட்டியிட பலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த முறை அதிமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட பாஜக, இம்முறை தனி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா தூத்துக்குடியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாநில ஓ.பி.சி அணி துணைத் தலைவர் விவேகம் ரமேஷ் ஆகியோரது பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், திடீர் திருப்பமாக சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவில் இணைந்துள்ளதால் கனிமொழியை எதிர்த்து ஒரு பலமான மற்றும் அவருக்கு கடுமையான போட்டியை கொடுக்கும் விதமாக ஒரு பெண் வேட்பாளரை நிறுத்தினால் தேர்தல் களம் நன்றாக இருக்கும் என பாஜக தலைமை விரும்புவதாக சொல்லப்படுகிறது. அதனால் பாஜக சார்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழியை எதிர்த்து ராதிகா சரத்குமாரை களம் இறக்கும் ஒரு முடிவும் பாஜக தலைமையிடம் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுக சார்பில் போட்டியிட அக்கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதனின் மகள் புவனேஸ்வரி, சென்னையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி எஸ்.ஆர்.வேலுமணி, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோரது இடையே போட்டி நிலவுகிறது. மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று (மார்ச் 20) தொடங்கவிருக்கும் நிலையில், தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து களம் காண போகிறவர் யார் என்ற கேள்விக்கு தெளிவான விடை விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.