ADMK vs BJP: ’அதிமுக சார்பில் ஓபிஎஸ் பேசுவார்!’ ஈபிஎஸ் ஊரில் வேலையை காட்டிய பாஜக! வெடித்தது சர்ச்சை!
”அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று நிரந்தர தடை விதித்துள்ள நிலையில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் பேசுவர் என பாஜக நிர்வாகி அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது”
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சேலம் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்தவெளி வாகனத்தில் வந்து கலந்து கொண்டார். கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் பாமக தலைவர் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமாக தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேக தலைவர் பாரிவேந்தர், தமமுக தலைவர் ஜான் பாண்டியன், புதியநீதிக்கட்சித் தலைவர் ஏசி சண்முகம் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.
அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று நிரந்தர தடை விதித்துள்ள நிலையில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் பேசுவர் என பாஜக நிர்வாகி அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பின்னர் பேசிய ஓபிஎஸ், வரலாற்று சிறப்பு மிக்க தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடக்கும் கூட்டத்திற்கு பாரத பிரதமர் மோடி ஐயா வருகை புரிந்து சிறப்புரை ஆற்ற உள்ளார். இந்திய திருநாட்டை கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக மோடி அளித்தார். இந்தியா பல்வேறு மொழி, இனம், கலாச்சாரம் நிறைந்தது, இந்த நாட்டில் இந்திய பிரதமராக பொறுப்பேற்று வரலாற்று சிறப்பு மிக்க ஆட்சியை மோடி அவர்கள் கொடுத்துள்ளார் என பேசினார். அவர் பேசிக் கொண்டே இருக்கும்போதே பேச்சை நிறுத்தி கொள்ள சொல்லி பாஜக சார்பில் கூறப்பட்டதால் நன்றி வணக்கம் கூறி ஓபிஎஸ் பேச்சை முடித்துக் கொண்டார்.
அதிமுக பெயரை பயன்படுத்த தடை விதிப்பு
அதிமுகவின் கட்சி பெயர், கொடி, சின்னத்தை ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த மனுவில், ‘அதிமுகவின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்துவது தேர்தல் ஆணையம் மற்றும் உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ள உத்தரவுகளுக்கு எதிரானது. இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்’ என கோரி இருந்த நிலையில் அதிமுக கட்சி, சின்னம், பெயரை பயன்படுத்த நிரந்தர தடை விதித்து நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் பாஜக சார்பில் பிரதமர் பங்கேற்ற சேலம் பொதுக்கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசுவார் என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதியான நாளை மறுநாள் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும்.மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன