Virat Kohli and Gambir Fight: சத்தியமா சொல்றேன்..! கம்பீருன் பிரச்னை வராது - பிசிசிஐக்கு உறுதியளித்த கோலி
Jul 19, 2024, 05:54 PM IST
கௌதம் கம்பீருடனான தனது கடந்தகால மோதல்கள் தற்போதைய இந்திய டிரஸ்ஸிங் அறையில் பிரச்னைகளை உருவாக்காது என விராட் கோலி கூறியுள்ளாராம். சத்தியமா சொல்றேன், கம்பீருடன் பிரச்னை வராது என பிசிசிஐக்கு உறுதியளித்துள்ளார் கோலி.
கௌதம் கம்பீருடனான களத்தில் ஏற்பட்ட தனது கடந்தகால சண்டைகள், பயிற்சியாளர் மற்றும் வீரருக்கான உறவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று விராட் கோலி பிசிசிஐக்கு உறுதியளித்துள்ளாராம்.
கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் ஏகோபித்த முடிவுக்கு பிறகு இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளராக கம்பீரின் நியமனத்தை பிசிசிஐ உறுதிப்படுத்தியபோது, இந்திய அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் கோலியுடன், கம்பீருக்கு இருந்த கசப்பான கடந்த காலம், அதற்கு இரு வீரர்களின் ரசிகர்களுடையை ரியாக்ஷன் பிசிசிஐக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
கோலியிடம் ஆலோசிக்கவில்லை
டிராவிட்டுக்கு பின்னர் புதிய பயிற்சியாளராக கம்பீரை நியமிப்பது தொடர்பாக இந்திய அணி முன்னாள் கேப்டன், சீனியர் வீரர் விராட் கோலியை ஆலோசிக்கவில்லை என தகவல்கள் வெளியாகின. இந்த விஷயத்தில் கம்பீரே சரியான திசையில் சிலவற்றை முன்மொழிந்துள்ளாராம்.
அதில் ஒன்றாக கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா போன்ற வீரர்கள் கட்டாயம் அணியில் இருக்க வேண்டும் என்பது இருந்துள்ளது.
கம்பீரின் முன்மொழிவுக்கு ஏற்ப ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் தங்களது இருப்பை உறுதி செய்துள்ளனர். பனிச்சுமை நிர்வகித்தல் காரணமாக பும்ராவுக்கு பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது.
உறவை பாதிக்காது
கம்பீருடன் பணிபுரிவதில் கோலி வசதியாகவே இருக்கிறார். இது குறித்து சம்பந்தப்பட்ட பிசிசிஐ அதிகாரிகளிடம் அவரும் தெளிவாக தெரிவித்திருக்கிறாராம். கடந்த காலங்களில் ஐபிஎல் போட்டிகளின் போது இருவருக்கும் இடையே கேமரா முன் நிகழ்த்தப்பட்ட கசப்பான மோதல் போன்ற வரலாறு இருந்தபோதிலும், தற்போது டிரஸ்ஸிங் ரூமில் தங்களது தொழில்முறை உறவைப் பாதிக்காது என்று கோலி கூறியுள்ளாராம்.
பார்படாஸில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. டெல்லியை சேர்ந்த கம்பீர், கோலி என இருவரும் நாட்டின் நலனுக்காக செயல்படுகிறார்கள். எனவே முந்தைய கருத்து வேறுபாடுகளிலிருந்து முன்னேறத் தயாராக இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உறுதியளித்தாராம் கோலி.
ஐபிஎல் தொடரில் சமாதானம்
கடந்த ஐபிஎல் 2024 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் பழைய கசப்பு உணர்வுகளை போக்கும் விதமாக கம்பீர் - கோலி ஆகியோர் இலகுவான போக்கை வெளிப்படுத்தினர். இதனால் இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டதாக அப்போது தகவல்கள் வெளியாகின.
நாங்கள் குழந்தைகள் அல்ல
பூமா நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பேசிய கோலி, "எனது நடத்தை பலரையும் ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. நவீன் உல் ஹக்-ஐ கட்டியணைத்தேன். மற்றொரு நாளில் என்னை கட்டிப்பிடித்த கெளதம் கம்பீரை கட்டியணைத்தேன்.
இந்த விஷயத்தில் நீங்கள் போட்ட மசாலாக்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டது. நாங்கள் இன்னும் குழந்தைகள் கிடையாது." என்றார்.
மசாலா கொடுப்பது அல்ல எங்கள் உறவு
அதேபோல், ஐபிஎல் தொடருக்கு பின் நடந்த உரையாடல் ஒன்றில் கெளதம் கம்பீரும், "விராட் கோலி உடனான எனது உறவு, இந்த நாடு அறியத் தேவையில்லை. அவர் பற்றி எனது கருத்து எதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது. தன்னை வெளிப்படுத்தி அந்தந்த அணிகளின் வெற்றிக்கு உதவ என்னைப் போலவே அவருக்கும் உரிமை உண்டு. பொதுமக்களுக்கு மசாலா கொடுப்பது அல்ல எங்கள் உறவு" என்றார்.
இதற்கு முன்னர் 2011 ஒரு நாள் உலகக் கோப்பை தொடரின்போது வீரர்களாக ஒரே அணிக்கு விளையாடிய கெளதம் கம்பீர் - கோலி தற்போது பயிற்சியாளர் - வீரர்ராக தங்களது முதல் பயணத்தை இலங்கை அணிக்கு எதிரான தொடரில் தொடங்கவுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்