Shahrukh Khan: ‘வெற்றிக்கான காரணம் இதுதான்..’ ஆட்டநாயகன் விருது வென்ற கோவை கேப்டன் ஷாருக் கான் பேட்டி
Jul 08, 2024, 09:55 AM IST
லைகா கோவை கிங்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றியைப் பெற்றது. திருப்பூர் அணிக்கு தனி ஒருவனாகப் போராடிய துஷார் ரஹேஜாவின் அபாரமான ஆட்டம் தோல்வியில் முடிந்தது
ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 சீஸனில் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷனில் நேற்று நடைபெற்ற டபுள் ஹெட்டரின் 2வது போட்டியில் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி இந்த சீஸனில் தொடர்ச்சியாக 2வது வெற்றியைப் பதிவு செய்தது.
முன்னதாக, நேற்றைய டபுள் ஹெட்டரின் 2வது போட்டியில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் கேப்டன் ஷாருக் கான் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். முதலில் விளையாடிய கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 160 ரன்களை எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஷாருக் கான் வெறும் 32 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார்(4 ஃபோர்கள் மற்றும் 4 சிக்ஸர்கள்). அவருக்கு துணையாக சச்சின் 30 ரன்கள் அடித்தார்.
திருப்பூர் அணியின் பெளலிங்
திருப்பூர் அணியின் பெளலிங்கைப் பொறுத்தவரை சுழற்பந்துவீச்சாளர் அஜித் ராம் 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்த, அவருக்கு துணையாக சேலம் மண்ணின் மைந்தன் நடராஜன் 2 முக்கிய விக்கெட்களை திருப்பூர் அணிக்காக கைப்பற்றினார். இந்த சீஸனில் முதல் வெற்றியைப் பெற ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸிற்கு 20 ஓவர்களில் 161 ரன்கள் தேவைப்பட்டது.
திருப்பூர் தங்களது இன்னிங்ஸை தொடங்கிய முதல் பந்திலேயே ஓப்பனர் ராதாகிருஷ்ணன் (0) விக்கெட்டை இழந்து அதிர்ச்சிகரமான தொடக்கத்தைப் பெற்றது. அதற்கு அடுத்து களமிறங்கிய அமித் சாத்விக் (12), கேப்டன் விஜய் ஷங்கர் (16) மற்றும் அனிருத் (4) ஆகியோர் தங்களது விக்கெட்களை சீரான இடைவெளியில் இழந்தாலும் ஓப்பனர் துஷார் ரஹேஜா அற்புதமாக விளையாடி அரைசதம் விளாசினார்.
மொஹம்மது அலியுடன் (35 ரன்கள்) 5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த துஷார் ரஹேஜா 52 ரன்கள் எடுத்து ஆட்டத்தை ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் பக்கம் கொண்டு வந்தார். வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 12 ரன்கள் தேவைப்பட்ட போது ஷாருக் கான் 19வது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து மொஹம்மது அலி விக்கெட்டை எடுத்து ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தினார்.
திருப்பூர் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட அந்த ஓவரை வீசிய முஹமது அடுத்தடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றி லைகா கோவை கிங்ஸை 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.
தனி ஒருவனாக போராடிய வீரர்
திருப்பூர் அணிக்கு தனி ஒருவனாக போராடிய துஷார் ரஹேஜா 57 பந்துகளில் 81 ரன்கள் அடித்தும் அந்த அணியில் இந்த சீஸனின் முதல் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. மீண்டுமொரு முறை கேப்டன் ஷாருக் கானின் தெளிவான திட்டமும் புத்திசாலித்தனமான பந்துவீச்சும் கோவைக்கு தொடர்ச்சியாக 2வது வெற்றியைப் பெற்றுத் தந்தது
தோல்விக்குப்பின் பேசிய ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸின் கேப்டன் விஜய் ஷங்கர், “இந்த மாதிரியான போட்டியில் நாம் செய்யும் தவறு பெரும் பின் விளைவுகளை ஏற்படுத்தும். கடைசி ஓவரில் 10 ரன்கள் என்பது இரு அணி பக்கமும் செல்வதற்கான வாய்ப்புள்ளது. இருந்தாலும் இந்த தோல்வி சற்று ஏமாற்றமளிக்கிறது”, என்று தெரிவித்தார்.
இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் கோவையின் கேப்டன் ஷாருக் கான் பேசுகையில், “எங்களது திட்டத்தை நாங்கள் சரியான பயன்படுத்துகிறோம். அதனால் வெற்றி கிடைக்கிறது. இன்று சிறிது தடுமாற்றத்தை சந்தித்தாலும் இறுதியில் மீண்டும் சரியான பாதைக்கு திரும்பி வெற்றியைப் பதிவு செய்துவிட்டோம்”, என்று ஷாருக் கூறினார்.
தோல்விக்குப்பின் பேசிய ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸின் அனிருத், “கண்டிப்பாக நாங்கள் இதை சேஸ் செய்திருக்க முடியும். ஆனால் அதை செய்ய தவறிவிட்டோம். இது ஏமாற்றத்தை அளித்தாலும் இது முதல் போட்டி. எனவே இதிலிருந்து மீண்டு அடுத்தப் போட்டியை நோக்கி நகரவேண்டும்”, என்று தெரிவித்தார்.
கடைசி ஓவரை சிறப்பாக வீசி கோவையின் வெற்றிக்கு வித்திட்ட முஹமது பேசுகையில், “கேப்டன் ஷாருக் என் மீது வைத்திருந்த நம்பிக்கையால் தான் என்னால் கடைசி ஓவரை சிறப்பாக வீச முடிந்தது. தொடர்ச்சியாக 2 வெற்றிகளைப் பெற்றது மகிழ்ச்சியாகவுள்ளது”, என்று தெரிவித்தார்.
போட்டி 6: இன்று இரவு சேலம் கிரிக்கெட் பவுண்டேஷனில் நடைபெறும் போட்டியில் அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிராக SKM சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி மோதுகிறது. திருச்சிக்கு எதிராக இந்த சீஸனின் முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றியும் மதுரை அணிக்கு எதிராக முதல் போட்டியில் சேலம் அணி தோல்வியையும் சந்தித்துள்ளது. நாளை இரு அணிகளுக்கு லீக் சுற்றில் மிக முக்கியமான ஆட்டம் என்பதால் நாளைய மோதல் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றையப் போட்டி:
திண்டுக்கல் டிராகன்ஸ் v SKM சேலம் ஸ்பார்ட்டன்ஸ்
நேரம்: இரவு 7.15 மணிக்கு
டாபிக்ஸ்