ஐபிஎல் கிரிக்கெட்டில் மூன்று முறை ஹாட்ரிக் எடுத்த பவுலர்..இந்திய கிரிக்கெட்டில் மேட்ச் வின்னிங் ஆல்ரவுண்டர்
Nov 24, 2024, 06:40 AM IST
இந்திய கிரிக்கெட்டில் மேட்ச் வின்னிங் ஆல்ரவுண்டராகவும், 2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றியாளராகவும், ஐபிஎல் கிரிக்கெட்டில் மூன்று முறை ஹாட்ரிக் எடுத்த பவுலர் என்ற பெருமையும் பெற்றவராகவும் இருப்பவர் அமித் மிஸ்ரா.
இந்திய கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை போட்டிகளிலும் விளையாடிய ஸ்பின் ஆல்ரவுண்டர் அமித் மிஸ்ரா. 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தவராகவும் உள்ளார். 2003 முதல் 2017 வரை 14 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பயணம்
டெல்லியை சேர்ந்த அமித் மிஸ்ரா, வலது கை லெக் பிரேக் ஸ்பின்னராகவும், வலது கை பேட்ஸ்மேனாகவும் இருந்துள்ளார். ராஞ்சி கோப்பையில் ஹரியானா அணிக்காக விளையாடிய இவர், இந்தியாவுக்காக முதன் முதலில் 2003ஆம் ஆண்டில் தென்ஆப்பரிக்காவுக்கு டிவிஎஸ் கோப்பை முத்தரப்பு தொடரில் தேர்வு செய்யப்பட்டார்.
இதன் பின்னர் 5 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். 2008 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உள்ளூர் பார்டர் கவாஸ்கர் தொடரில் கும்ப்ளேவுக்கு மாற்று வீரராக சேர்க்கப்பட்டார். தனது தேர்வு நியாயப்படுத்தும் விதமாக முதல் இன்னிங்ஸில் 5, இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த தொடரில் கும்ப்ளே ஓய்வை அறிவிக்க, மிஸ்ரா அணியில் பிரதான ஸ்பின்னராக இடம்பிடித்தார்.
இதைத்தொடர்ந்து இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது பவுலராக மட்டுமல்லாமல், பேட்ஸ்மேனாகவும் 84 ரன்கள் எடுத்து தனது திறமையை வெளிப்படுத்தினர்.
வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கம்பேக்
வெள்ளை பந்து கிரிக்கெட்டை பொறுத்தவரை 2003இல் முதல் போட்டி விளையாடிய மிஸ்ரா, அதன் பின்னர் 6 ஆண்டு இடைவெளிக்கு பின், 2009இல் தென் ஆப்பரிக்காவில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கம்பேக் கொடுத்தார். 2013இல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒரே தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர் என்கிற முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத் சாதனையை சமன் செய்தார்.
இதற்கிடையே இந்திய டி20 அணியிலும் விளையாடும் வாய்ப்பை பெற்ற மிஸ்ரா, குறிப்பிடத்தகும் விதமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளார். 2016/17 நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற தொடரில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியா மிஸ்ரா, தொடர் நாயகன் விருதையும் கைப்பிற்றினார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 10 ஓவர்கள் வீசி 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய மிஸ்ராவின் பவுலிங், 10 ஓவர்கள் பந்து வீசிய பவுலர்களில் சிறந்த சிக்கனமான பவுலிங்காக அமைந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் முதல் ஹாட்ரிக்
ஐபிஎல் கிரிக்கெட்டை பொறுத்தவரை முதல் மூன்று சீசன்கள் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார். அதன் பிறகு 2011, 12 டெக்கான் சார்ஜர்ஸ், 2013, 14 சன் ரைசர்ஸ், 2018 முதல் 2021 வரை டெல்லி கேபிடல்ஸ் அணிக்க்காக விளையாடியுள்ளார். 2023 முதல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
ஐபிஎல் முதல் சீசனிலேயே டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி, ஐபிஎல் போட்டிகளில் முதல் ஹாட்ரிக் வீழ்த்திய ஸ்பின்னர் என்ற பெருமை பொற்றார். இரண்டாவது முறையாக 2011 சீசனில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடியபோதும், மூன்றாவது முறையாக 2013 சீசனில் சன் ரைசர்ஸ் அணிக்காக, புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராகவும் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் மூன்று முறை ஹாட்ரிக் வீழ்த்திய பவுலர் என்ற தனித்துவ சாதனை புரிந்தார். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்களில் நான்காவது இடத்தில் உள்ளார்.
அணியில் சேர்க்கப்படுவதும், நீக்கப்படுவதுமாக இருந்த மிஸ்ரா நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் தவித்து வந்தார். இருப்பினும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி கொண்டு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை தந்த மேட்ச் வின்னராக ஜொலித்த மிஸ்ரா 2017இல் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை பெற்றார்.
2013இல் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக தோனி தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை புரிந்தது. அந்த சாம்பியன் அணியில் ஒருவராக இருந்த மிஸ்ரா, 2014 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டிலும் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார். இந்திய கிரிக்கெட்டில் கவனிக்கத்தக்க ஸ்பின் ஆல்ரவுண்டராக கலக்கிய அமித் மிஸ்ராவுக்கு இன்று பிறந்தநாள்
டாபிக்ஸ்