HT Cricket Special: அசைக்க முடியாத சாதனை - உடைந்த தாடையுடன் பேட்டிங்! இந்திய அணியின் சிறிய வேகப்பந்து வீச்சாளர், பேட்டர்
Jun 20, 2024, 01:16 PM IST
ரஞ்சி கிரிக்கெட்டில் அசைக்க முடியாத சாதனை நிகழ்த்தியவராகவும், உடைந்த தாடையுடன் பேட்டிங் செய்து இந்திய அணிக்கு வெற்றி தேடி தந்த வீரராகவும் இருந்தவர் ரமாகாந்த் தேசாய். இந்திய அணியின் சிறிய வேகப்பந்து வீச்சாளர், பேட்டர் என்று இவர் அழைக்கப்பட்டார்.
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர்களில் முக்கியமானவர் ரமாகாந்த் தேசாய். சொல்லப்போனால் இவர் வேகப்பந்து வீச்சாளராக மட்டுமில்லாமல் சிறந்த லோயர் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் ஜொலித்துள்ளார்.
5.4 அடி என சராசரி உயரம் கொண்ட பவுலராக இருந்த ரமாகாந்த் எந்த மாதிரியான பிட்சில் பவுன்சர்களால் பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் பவுலராக இருந்துள்ளார். இவரது உயரம் காரணமாக Tiny (சிறிய) என்ற பட்டப்பெயரில் அழைக்கப்பட்ட இவர் இந்தியாவுக்காக 1959 முதல் 1968 வரை என 10 ஆண்டுகள் விளையாடியுள்ளார்.
ரஞ்சியில் அசைக்க முடியாத சாதனை
உள்ளூர் கிரிக்கெட்டான ரஞ்சி போட்டிகளில் அசைக்க முடியாத சாதனை ஒன்றை ரமாகாந்த் தேசாய் நிகழ்த்தியுள்ளார். அப்போது பாம்பே (மும்பை) அணிக்காக விளையாடிய தேசாய், 7 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது இன்று வரையில் பாம்பே அணியில் அசைக்க முடியாத சாதனையாக இருந்து வருகிறது.
இவர் பாம்பே அணிக்காக விளையயாடிய 11 ஆண்டுகளில் ஒரு முறை கூட தோல்வி அடைந்தது இல்லை. 1968-69 ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டிக்கு பின்னர் பரிசளிப்பு விழாவில் தனது ஓய்வை அளித்து சர்ப்ரைஸ் அளித்தார். காரணம் அவருக்கு அப்போது 29 வயதுதான். இன்னும் ஏராளமான கிரிக்கெட் விளையாடுவதற்கான வாய்ப்பு இருந்தபோதிலும் விடைபெற்றார்.
உடைந்த தாடையுடன் பேட்டிங்
சர்வதேச கிரிக்கெட்டிலும் பல மறக்க முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரமாகாந்த் தேசாய். 1960-61இல் இந்தியா சுற்றுப்பயணம் வந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அத்துடன் பாம்பேயில் நடைபெற்ற போட்டியில் 10வது பேட்ஸ்மேனாக களமிறங்கி 85 ரன்கள் எடுத்தார். இது இந்திய அணியின் சாதனையாக உள்ளது. நானா ஜோஷியுடன் இணைந்து 9வது விக்கெட்டுக்கு 149 ரன்கள் சேர்த்ததும் சாதனையாக இருக்கிறது.
தொடர்ந்து 1967-68இல் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது டுனெடினில் நடந்த போட்டியில் நியூசிலாந்து வீரர் டிக் மோட்ஸ் வீசிய பந்து, தேசாய் தாடை மீது தாக்கி காயம் ஏற்பட்டது. இதனால் எலும்பு முறிவும் ஏற்பட்டது. இருப்பினும் பேட்டிங்கை தொடர்ந்து கடைசி விக்கெட்டுக்கு பிஷன் பேடியுடன் இணைந்து 57 ரன்கள் சேர்த்தார். இந்த போட்டியில் 32 ரன்கள் அடித்த தேசாய், இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
தனது கிரிக்கெட் கேரியரில் 28 போட்டிகளில் 74 விக்கெட்டுகளை கைப்பற்றி, இவர் விளையாடிய காலகட்டத்தில் இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராகவும், முக்கிய லோயர் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தார்.
சச்சின் டென்டுல்கர் கேப்டன்சி
1996 முதல் 1997 வரை இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக செயல்பட்டார் ரமாகாந்த் தேசாய். சச்சின் டென்டுல்கர் கேப்டன் ஆனதற்கும், அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கும் காரணமாக இருந்தது இவர்தான். இதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உயிரிழந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியில் 1960 காலகட்டத்தில் தவிர்க்க முடியாத வேகப்பந்து வீச்சாளர் கம் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஜொலித்த ரமாகாந்த் தேசாய் பிறந்தநாள் இன்று.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்