SRH vs LSG Result: சேஸிங்கிலும் கில்லி! 9 ஓவரில் லக்னோவை முடித்த சன் ரைசர்ஸ் - சாதனை வெற்றியால் சிஎஸ்கேவும் காலி
May 08, 2024, 11:00 PM IST
முதல் பேட்டிங் மட்டுமில்ல, சேஸிங்கிலும் கில்லி என நிருபித்துள்ளது சன் ரைசர்ஸ். இரண்டாவது பேட்டிங்கிலும் அதிரடி ருத்ர தாண்டவத்தை வெளிப்படுத்தியதோடு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக சாதனை வெற்றியை புரிந்துள்ளது. சன் ரைசர்ஸ் இன்னிங்ஸில் 16 போர்கள், 14 சிக்ஸர்கள் என 30 பவுண்டரிகள் விளாசப்பட்டன.
ஐபிஎல் 2024 தொடரின் 57வது போட்டி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்கும் முன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 12 போட்டிகளில் 6 வெற்றியுடன் 6வது இடத்திலும், சன் ரைசர்ஸ் அணியும் 12 போட்டிகளில் 6 வெற்றியை பெற்று, ரன் ரேட் அடிப்படையில் நான்காவது இடத்திலும் இருந்தது.
இதையடுத்து இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணியில் அபிஷேக் ஷர்மா, மயங்க் அகர்வால், மார்கோ ஜான்சன் ஆகியோருக்கு பதிலாக சன்விர் சிங், ஜெயதேவ் உனத்கட், விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். இலங்கையை சேர்ந்த ஸ்பின்னரான விஜயகாந்த் முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கினார்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலும் யுத்வீர் சிங், ஆஷ்டன் டர்னர், மோக்சின் கான் ஆகியோருக்கு பதிலாக கிருஷ்ணப்பா கெளதம், யஷ் தாக்கூர், குவன்டைன் டி காக் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். கிருஷ்ணப்பா கெளதம் இந்த சீசனின் முதல் போட்டியில் விளையாடினார்.
லக்னோ ரன் குவிப்பு
டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் அடித்தது. பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்த ஆடுகளத்தில் லக்னோ பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க தடுமாறினார்கள்.
அதிகபட்சமாக ஆயிஷ் பதோனி 55, நிக்கோலஸ் பூரான் 48, கேஎல் ராகுல் 29 ரன்கள் அடித்தனர். சன் ரைசர்ஸ் பவுலர்களில் புவனேஷ்வர் குமார் 2, பேட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
சன் ரைசர்ஸ் சேஸிங்
166 ரன்கள் இலக்கை விரட்டிய சன் ரைசர்ஸ் 9.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 167 ரன்கள் எடுத்தது. இதன் 10 விக்கெட் வித்தியாசத்தில் 62 பந்துகள் மீதமிருக்க மிக பெரிய சாதனை வெற்றியை பெற்றது. அத்துடன் 14 புள்ளிகளை பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பின்னுக்கு தள்ளி, மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. இந்த தோல்வியால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 6வது இடத்தில் நீடிக்கிறது.
லக்னோ அணியில் பவுலிங் செய்த அனைவரின் ஓவர்களிலும் சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் அடித்து கிழித்து தொங்கவிட்டனர்.
ஹெட் - அபிஷேக் மிரட்டல் அடி
சன் ரைசர்ஸ் ஓபனர்கள் ட்ராவிஸ் ஹெட் - அபிஷேக் ஷர்மா ஆகியோர் வழக்கமாக தங்களது பாணி அதிரடி தொடக்கத்தை தந்தனர். முதலாவது பேட்டிங்கில் அதிரடியாக விளையாடிய இந்த கூட்டணி, சேஸிங்கில் சொதப்புகிறது என்ற எழுந்த பேச்சை பொய்பிக்கும் விதமாக மாறி மாறி பவுண்டரி, சிக்ஸர்களை அடித்தனர்.
ட்ராவிஸ் ஹெட் 16 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதேபோல் அபிஷேக் ஷர்மா 19 பந்துகளில் அரைசதமடித்தார். ஹெட் 30 பந்துகளிலும் 89 ரன்கள் அடித்து, 8 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் விளாசியிருந்தார்.
அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் 75 ரன்கள் அடித்து 8 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் அடித்திருந்தார். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். சன் ரைசர்ஸ் இன்னிங்ஸில் 148 ரன்கள் பவுண்டரி மூலம் கிடைத்தது. மொத்தம் 16 பவுண்டரி, 14 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. வெறும் 45 நிமிடத்தில் இந்த போட்டி முடிவுக்கு வந்தது. 10 ஓவருக்குள் அடிக்கப்பட்ட மிக பெரிய சேஸிங்காக இந்த போட்டி அமைந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.