SRH vs PBKS Preview: புதிய கேப்டன், இரண்டு வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்கும்பஞ்சாப் கிங்ஸ்! சன் ரைசர்ஸ்க்கு வாய்ப்பு
May 19, 2024, 06:10 AM IST
SRH vs PBKS Preview: புதிய கேப்டன், இரண்டு வெளிநாட்டு வீரர்களுடன் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்க இருக்கிறது. மழைக்கான வாய்ப்பு 30 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சன் ரைசர்ஸ் அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பாக இந்த போட்டி அமைந்துள்ளது.
ஐபிஎல் 2024 தொடரின் 69வது போட்டி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் இன்று நடைபெறுகிறது. இவ்விரு அணிகளுக்கும் இது கடைசி போட்டியாக அமைந்துள்ளது.
சன் ரைசர்ஸ் அணி 13 போட்டிகளில் 7 வெற்றியுடன் 15 புள்ளிகளை பெற்று ப்ளேஆஃப்புக்கு தகுதி பெற்றுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் 13 போட்டிகளில் 5 வெற்றியுடன், 10 புள்ளிகளை பெற்று 9வது இடத்தில் இருக்கிறது.
இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் மோதலில் சன் ரைசர்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இரண்டே வெளிநாட்டு வீர்ரகளுடன் விளையாட இருக்கும் பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் காயம் காரணமாக இந்த சீசனில் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். மீதமுள்ள 8 போட்டிகளில் சாம் கரன் கேப்டனாக செயல்ப்ட்டார்.
தற்போது இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் நாடு திரும்பியிருக்கும் நிலையில், பஞ்சாப் அணியில் இடம்பிடித்திருந்த ஜானி பேர்ஸ்டோ, சாம் கரன் ஆகியோர் நாடு திரும்பியுள்ளனர்.
எனவே எஞ்சியிருக்கும் ரிலி ரோசவ், நாதன் எல்லீஸ் ஆகிய இரண்டு வெளிநாட்டு வீர்ரகளுடன் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கவுள்ளது. அதேபோல் இந்த போட்டியில் கேப்டனாக ஜித்தேஷ் ஷர்மா செயல்படவுள்ளார், அதேபோல் ரிஷ் தவான், அதர்வா தைடே ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள் என தெரிகிறது.
இலங்கை ஸ்பின்னர் விஜயகாந்த் வியாஸ்காந்துக்கு வாய்ப்பு
சன் ரைசர்ஸ் அணி ப்ளேஆஃப் சுற்றில் எலிமினேட்டர் போட்டியில் விளையாட இருக்கும் நிலையில், இளம் ஸ்பின்னரான இலங்கையை சேர்ந்த ஜயகாந்த் வியாஸ்காந்துக்கு இன்றைய போட்டியில் மற்றொரு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பேட்டிங்கிலும் மயங்க் அகர்வால் அல்லது ராகுல் திரிபாதி ஆகியோரில் ஒருவர் வாய்ப்பை பெறலாம்.
அத்துடன், இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சன் ரைசர்ஸ் அணி வீழ்த்த வேண்டும். அடுத்து நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியை தழுவ வேண்டும். இது நடந்தால் சன் ரைசர்ஸ் 17 புள்ளிகளுடன் ப்ளேஆஃப் சுற்றில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறலாம். எனவே சன் ரைசர்ஸ் அணிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
பிட்ச் நிலவரம்
இந்த சீசனில் அதிக ஸ்கோர் அடிக்கப்படும் மைதானமாக ஹைதராபாத் இருந்து வருகிறது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் நன்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக ஆடுகளம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மழைக்கான வாய்ப்பு 30 சதவீதம் வரை இருக்கும் என்பதால் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மாலை நேர போட்டியாக இந்த ஆட்டம் 3.30 மணிக்கு தொடங்குகிறது
சன் ரைசர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் இதுவரை
இந்த இரு அணிகளும் 22 முறை இதுவரை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சன் ரைசர்ஸ் 15, பஞ்சாப் கிங்ஸ் 7 போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ளனது. சன்ரைசர்ஸ் அதிகபட்ச ஸ்கோராக 212, பஞ்சாப் கிங்ஸ் அதிகபட்ச ஸ்கோராக 211 என உள்ளது.
சன் ரைசர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியில் வெற்றியை பெற்றிருப்பதால் முழு தன்னம்பிக்கையுடன் இந்த போட்டியில் களமிறங்கும் என எதிர்பார்க்கலாம்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.