KKR vs PBKS Innings Break: 18 சிக்ஸர், 22 பவுண்டரிகள் அடித்த கொல்கத்தா பேட்டர்கள் - ஈடன் கார்டனில் அதிக ரன்கள் குவிப்பு
Apr 27, 2024, 01:51 AM IST
சால்ட் - நரேன் இணைந்து அதிரடியான தொடக்கத்தை தந்ததுடன் 138 ரன்கள் முதல் விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கடைசி கட்டத்தில் மற்ற பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட ஈடன் கார்டன் மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோரை கொல்கத்தா அணி எடுத்துள்ளது. இந்த இன்னிங்ஸில் 18 சிக்ஸர், 22 பவுண்டரிகளை அடித்துள்ளது.
ஐபிஎல் 2024 தொடரின் 42வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 போட்டிகளில் 5 வெற்றியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் 8 போட்டிகளில் 2 வெற்றியுடன் 9வது இடத்தில் இருந்து வருகிறது.
இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் துஷ்மந்தா சமிரா, பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் பவுலிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் குவித்துள்ளது.
கொல்கத்தா அணியின் அதிகபட்சமாக பில் சால்ட் 75, சுனில் நரேன் 71, வெங்கடேஷ் ஐயர் 39, ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன்கள் அடித்தனர்.
பஞ்சாப் பவுலர்களில் அர்ஷ்தீப் ஷிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சாம் கரன், ஹர்ஷல் படேல், ராகுல் சஹார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்ததினர். ஸ்பின்னர் ராகுல் சஹார் தவிர மற்ற பவுலர்களின் பந்து வீச்சை கொல்கத்தா பேட்ஸ்மேன் அடித்து துவம்சம் செய்தனர்.
ராகுல் சஹார் 4 ஓவரில் 33 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார். ஸ்டிரைக் பவுலரான ககிசோ ரபாடா 3 ஓவர்களில் 52 ரன்கள் வாரி வழங்கினார்.
அதிரடி தொடக்கம்
கொல்கத்தா அணிக்கு சால்ட் - நரேன் இணைந்து அதிரடியான தொடக்கத்தை தந்தனர். பஞ்சாப் பவுலர்களின் பந்து வீச்சை நாலபுறமும் சிதறடித்து இருவரும் அரைசதமடித்தனர். முதல் விக்கெட்டுக்கு சால்ட் - நரேன் இணைந்து 138 ரன்கள் சேர்த்தனர். சால்ட் 37 பந்துகளில் 75 ரன்கள் அடித்து அவுட்டானார். இவர் தனது இன்னிங்ஸில் 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களை அடித்தார்.
சுனில் நரேன் 32 பந்துகளில் 71 ரன்கள் அடித்தார். அவர் தனது இன்னிங்ஸில் 9 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடித்தார்.
அதிரடி கேமியோ இன்னிங்ஸ்
இதன் பின்னர் பேட் செய்ய வந்த ஆண்ட்ரே ரசல், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் பெரிதாக ரன் குவிப்பில் ஈடுபடாவிட்டாலும் அதிரடி கேமியோ ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்றனர்.
ஷ்ரேயாஸ் ஐயர் 10 பந்துகளில் 28 ரசல் 12 பந்துகளில் 24 ரன்கள் அடித்து மிரட்டினார்கள். கடைசி ஓவர் வரை பேட் செய்த வெங்கடேஷ் ஐயர் 23 பந்துகளில் 39 ரன்கள் அடித்தார்.
கொல்கத்தா இன்னிங்ஸில் மொத்தம் 18 சிக்ஸர்கள், 22 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. அத்துடன் ஈடன் கார்டன் மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச டி20 ஸ்கோராகவும் இது அமைந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.