RR vs PBKS Innings Break: சம்பிரதாய போட்டி! பேட்டிங்கில் கலக்கிய ரியான் பிராக், ரவிச்சந்திரன் அஸ்வின்
May 16, 2024, 04:32 PM IST
ராஜஸ்தான் ராயல்ஸ் ப்ளேஆஃப் தகுதி பெற்றிருக்கும் நிலையில், பஞ்சாப் கிங்ஸ் ப்ளேஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியிருக்கும் நிலையில் iஆக இது அமைந்துள்ளது. ரியான் பிராக், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரின் ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் 144 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் 2024 தொடரின் 65வது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் அணியின் இரண்டாவது உள்ளூர் மைதானமாக கவுகாத்தி இருப்பதுடன், இந்த சீசனில் இங்கு நடைபெறும் முதல் போட்டியாக இது உள்ளது.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 போட்டிகளில் 8 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் 12 போட்டிகளில் 4 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் டாம் கோஹ்லர்-காட்மோர், ரோவ்மன் பவல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் அணியில் நாதன் எல்லீஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும் நிலையில், பஞ்சாப் கிங்ஸ் ப்ளேஆஃப் வாய்ப்பை இழந்திருக்கும் நிலையில் இந்த போட்டி சம்பிரதாய ஆட்டமாக நடைபெறுகிறது.
இந்த சீசனில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் மோதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே பஞ்சாப் கிங்ஸ் பழி தீர்க்கும் போட்டியாக உள்ளது.
ராஜஸ்தான் பேட்டிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் அடித்துள்ளது.
அதிகபட்சமாக ரியான் பிராக் 48, அஸ்வின் 28, சஞ்சு சாம்சன் 18 ரன்கள் அடித்தனர். பஞ்சாப் பவுலர்களில் சாம் கரன், ஹர்ஷல் படேல், ராகுல் சஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லீஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
பிராக் - அஸ்வின் பார்டனர்ஷிப்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஓபனர் ஜெயஸ்வால் 4, மற்றொரு ஓபனர் டாம் கோஹ்லர்-காட்மோர், சஞ்சு சாம்சன் 18 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரியான் பிராக் - ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் 50 ரன்கள் சேர்த்தனர். அஸ்வின் 28 ரன்கள் அடித்து அவுட்டானார்.
பிராக் நிதானம்
இதைத்தொடர்ந்து பொறுமையாக பேட் செய்து ரன்கள் குவித்து வந்தார் பிராக். இதற்கிடையே துருவ் ஜுரல் 0, ரோவ்மன் பவல் 4, இம்பேக்ட் வீரராக வந்த டோனோவன் ஃபெரேரா 7 என பெரிதாக ரன் குவிப்பில் ஈடுபடாமல் பெவிலியன் திரும்பினர்.
ஒற்றை ஆளாக அணியின் ரன்ரேட்டை உயர்த்தி வந்த பிராக், ஆட்டத்தின் கடைசி ஓவரில் 48 ரன்கள் எடுத்து அவுட்டானார். சிறிய கேமியோ ஆட்டத்தை வெளிப்படுத்திய ட்ரெண்ட் போல்ட் 12 ரன்கள் அடித்து ரன்அவுட்டானார்.
இந்த போட்டியில் பஞ்சாப் பவுலர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசினர். 2 ரன்கள் மட்டுமே உதிரிகளாக விட்டுக்கொடுத்தனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.