RCB vs GT Result: ஒரே வெற்றியால் மூன்று அணிகளை தட்டி தூக்கிய ஆர்சிபி! உருவாகும் ப்ளேஆஃப் வாய்ப்பு
May 04, 2024, 11:40 PM IST
வெற்றி மட்டும் போதாது நல்ல ரன்ரேட்டும் தேவை என்பதற்கு ஏற்ப அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்சிபி 38 பந்துகள் எஞ்சி இருக்க ஆட்டத்தை பினிஷ் செய்தது. இந்த வெற்றியால் விர்ரென 7வது இடத்துக்கும் முன்னேறியுள்ளது.
ஐபிஎல் 2024 தொடரின் 52வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் குஜராத் டைட்டன்ஸ் 10 போட்டிகளில் 4 வெற்றியை பெற்று 8 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும், ஆர்சிபி அணி 10 போட்டிகளில் 3 வெற்றியுடன், 6 புள்ளிகளை பெற்று கடைசி இடத்திலும் இருந்தது.
ஆர்சிபி அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இது அமைந்திருந்தது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளேஆஃப் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலையில் இருந்தது.
இந்த போட்டியில் குஜராத் அணியில் ஜோஷ் லிட்டில், மனவ் சுதர் சேர்க்கப்பட்டிருந்தனர். மனவ் சுதர் தனது முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கினார். ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
குஜராத் பேட்டிங் சொத்ப்பல்
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டூ பிளெசிஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளயும் இழந்து 147 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ஷாருக்கான் 37, ராகுல் திவாட்டியா 35, டேவிட் மில்லர் 30 ரன்கள் எடுத்தனர். ஆர்சிபி பவுலர்களில் முகமது சிராஜ், யஷ் தயாள் விஜய்குமார் வைஷாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டை எடுத்தனர். கேமரூன் க்ரீன், கரன் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
குஜராத் அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பொறுப்பான பேட்டிங்கால் ஓரளவு ரன்களை குவித்தது.
ஆர்சிபி சேஸிங்
பேட்டிங் சொர்க்கபுரியான சின்னசாமி மைதானத்தில் 148 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய ஆர்சிபி அணி 13.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் 38 பந்துகள் மீதமிருக்க மிக பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியால் கடைசி இடத்தில் இருந்து மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளை பின்னுக்கு தள்ளி 7வது இடத்துக்கு முன்னேறியது. இந்த சீசனில் முதல் முறையாக இந்த இடத்தை ஆர்சிபி அணி பிடித்துள்ளது. இதனால் ப்ளேஆஃப் வாய்ப்பும் ஆர்சிபிக்கு உருவாகியுள்ளது.
குஜராத் பவுலர்களில் ஜோஷ் லிட்டில் 4, நூர் அகமது 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த தோல்வியால் குஜராத் டைட்டன்ஸ் அணி 9வது இடத்துக்கு சென்றுள்ளது.
கோலி - டூ பிளெசிஸ் அதிரடி தொடக்கம்
கட்டாய வெற்றி மட்டுமில்லாமல் நல்ல ரன் ரேட்டையும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நெருக்கடி ஆர்சிபி அணிக்கு இருந்து வருவதால், அதற்கு ஏற்ப அதிரடியான தொடக்கத்தை ஆர்சிபி ஓபனர்களான விராட் கோலி - கேப்டன் டூ பிளெசிஸ் ஆகியோர் தந்தனர்.
ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டிய இவர்கள் குஜராத் பவுலர்களின் பந்து வீச்சை தெறிக்கவிட்டனர். ஒரு பக்கம் டூ பிளெசிஸ் பவுண்டரிகளாக அடித்து விரட்ட, விராட் கோலி சிக்ஸர்களாக பறக்கவிட்டார்.
முதல் விக்கெட்டுக்கு இருவரும் 5.5 ஓவரில் 92 ரன்கள் சேர்த்தனர். மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டூ பிளெசிஸ் அரைசதமடித்ததுடன், 23 பந்துகளில் 64 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இவரை தொடர்ந்து வில் ஜேக்ஸ் 1, ராஜத் பட்டிதார் 2, மேக்ஸ்வெல் 4, கேமரூன் கிரீன் 1 என அடுத்தடுத்து அவுட்டானதால் ஆட்டத்தில் பரபரப்பு நிலவியது.
சிறப்பாக பேட் செய்து வந்த கோலியும் 27 பந்துகளில் 42 ரன்கள் அடித்த நிலையில் நடையை கட்டினார்.
தினேஷ் கார்த்திக் பினிஷ்
இந்த நேரத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் தனது பாணியில் அதிரடி சிறிய கேமியோ இன்னிங்ஸுடன் ஆட்டத்தை பினிஷ் செய்தார். தினேஷ் கார்த்திக் 12 பந்துகளில் 21 ரன்கள் அடித்து 3 சிக்ஸர்களை பறக்கவிட்டதுடன், ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இவருடன் இணைந்து ஸ்வனில் சிங் 9 பந்துகளில் 15 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.