தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Rahul Dravid: பிசிசிஐ கூடுதலாக ரூ. 2.5 கோடி பரிசுத்தொகை..! மறுப்பு தெரிவித்த ராகுல் டிராவிட் - பின்னணி காரணம்

Rahul Dravid: பிசிசிஐ கூடுதலாக ரூ. 2.5 கோடி பரிசுத்தொகை..! மறுப்பு தெரிவித்த ராகுல் டிராவிட் - பின்னணி காரணம்

Jul 10, 2024, 05:50 PM IST

google News
பிசிசிஐ கூடுதல் போனஸ் பரிசுத்தொகை பெற மறுப்பு தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், மற்ற ஆதரவு பணியாளர்கள் பெறும் ரூ. 2.5 கோடி மட்டுமே பரிசுத்தொகை பெறவுள்ளார்.
பிசிசிஐ கூடுதல் போனஸ் பரிசுத்தொகை பெற மறுப்பு தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், மற்ற ஆதரவு பணியாளர்கள் பெறும் ரூ. 2.5 கோடி மட்டுமே பரிசுத்தொகை பெறவுள்ளார்.

பிசிசிஐ கூடுதல் போனஸ் பரிசுத்தொகை பெற மறுப்பு தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், மற்ற ஆதரவு பணியாளர்கள் பெறும் ரூ. 2.5 கோடி மட்டுமே பரிசுத்தொகை பெறவுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் 13 ஆண்டு கால ஐசிசி கோப்பை வறட்சியை போக்கியத்தில் முக்கிய பங்காற்றியவர் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட். சமீபத்தில் வெஸ்ட்இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2024 தொடரை வென்ற இந்திய அணி, இரண்டாவது டி20 கோப்பையை வென்று சாம்பியன் ஆனது.

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இந்திய அணி வீரர்கள் மட்டுமன்றி, பயிற்சியாளர் உள்ளிட்ட இந்திய அணியின் ஆதரவு பணியாளர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் பிசிசிஐ பரிசு மழையை அறிவித்துள்ளது.

அதன்படி, டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்ட ராகுல் டிராவிட்டுக்கு அனைவருக்கும் அறிவித்த பரிசுத்தொகையுடன் கூடுதலாக ரூ. 2.5 கோடி போனஸ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

டிராவிட் மறுப்பு

பிசிசிஐயின் கூடுதல் போனஸ் தொகையை வாங்க மறுப்பு தெரிவித்துள்ள டிராவிட், தனக்கென்று தனியாக போனஸ் தொகை வேண்டாம் எனவும், ஆதரவு பணியாளர்களுக்கு அளிக்கப்படும் பரிசுத்தொகை தனக்கு தந்தால் போதுமானது எனவும் தெரிவித்துள்ளார்.

ராகுல் டிராவிட்டின் இந்த முடிவுக்கு மதிப்பு அளிப்பதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர், பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மகாம்ப்ரே, பீல்டிங் பயிற்சியாளர் டி திலீம் ஆகியோருக்கும் வழங்கப்படும் பரிசுத்தொகை அளவு டிராவிட்டுக்கும் வழங்கப்படுகிறது.

இந்திய அணிக்கு ரூ. 125 கோடி பரிசு தொகை

முன்னதாக, டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ ரூ. 125 கோடி பரிசுத்தொகை அறிவித்தது. அதில் இந்திய அணியில் இடம்பிடித்த வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு ரூ. 5 கோடி வழங்கப்பட இருந்தது. அதேபோல் ஆதரவு பணியாளர்களுக்கு ரூ. 2.5 கோடியும், அணியின் தேர்வாளர்கள், அணியினருடன் பயணித்தவர்களுக்கு ரூ. 1 கோடியும் வழங்குவதாக இருந்தது.

தற்போது டிராவிட் கூடுதல் தொகை பெற மறுப்பு தெரிவித்துள்ளார் அந்த தொகை பகிர்ந்து அளிக்கப்படும் என தெரிகிறது.

மீண்டும் இதை செய்த ராகுல் டிராவிட்

இந்தியா யு19 அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தபோது, 2018 உலகக் கோப்பையை இந்திய இளம்படை வென்றது. அப்போது பயிற்சியாளரான டிராவிட்டுக்கு ரூ. 50 லட்சம், மற்ற ஆதரவு பணியாளர்களுக்கு ரூ. 20 லட்சம் மற்றும் வீரர்களுக்கு ரூ. 30 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.

இந்த பார்முலாவுக்கு மறுப்பு தெரிவித்த டிராவிட், அனைவருக்கும் பரிசுத்தொகை சமமாக பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்றார். இதன்மூலம் அனைவருக்கும் ரூ. 25 லட்சம் பரிசுத்தொகை அளிக்கப்பட்டது.

தற்போது இந்திய சீனியர் அணி டி20 உலகக் கோப்பை வென்ற பின்னர் மீண்டும் இதை செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் அணியில் வீரராக அனைத்து வழிகளிலும் சிறப்பான பங்களிப்பை வெளிக்காட்டியவர் ராகுல் டிராவிட். ஒரு வீரராக வெல்ல முடியாத உலகக் கோப்பையை பயிற்சியாளராக ஆன பிறகு இந்தியாவுக்காக வென்று கொடுத்து சாதித்து காட்டியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை 2024 வெற்றி கொண்டாட்டத்தின் போது சீனியர் வீரரான விராட் கோலி, அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் டிராவிட்டிடம் கோப்பையை கொடுத்து முன்னிலை படுத்தினர்.

ரோஹித் ஷர்மா எமோஷனல்

டி20 உலகக் கோப்பை வென்று முடித்த கையோடு விடுமுறையை கொண்டாட குடும்பத்தினருடன் வெளிநாடு சென்றிருக்கும் ரோஹித் ஷர்மா, ராகுல் டிராவிட் குறித்து எமோஷனலாக இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நீங்கள் இந்த விளையாட்டில் துணிச்சல் மிக்கவர். ஆனால் நீங்கள் உங்கள் பெருமைகள் மற்றும் சாதனைகள் அனைத்தையும் வாசலில் விட்டுவிட்டு, பயிற்சியாளராக எங்களுடன் உறவாடினீர்கள். உங்களிடம் எதையும் சொல்லும் அளவுக்கு நாங்கள் அனைவரும் வசதியாக உணர்ந்தோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை