அனைத்து பவுலர்களும் விக்கெட் மழை..ஆல்ரவுண்டராக ஜொலித்த நிதிஷ் குமார் ரெட்டி! பெரிய வெற்றியுடன் தொடரை வென்ற இந்தியா
Oct 09, 2024, 10:45 PM IST
இந்திய அணியில் பவுலிங் செய்த அனைத்து பவுலர்களும் விக்கெட்டுகளை வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கிலும், இரண்டாவது இன்னிங்ஸில் பவுலிங்கிலும் கலக்கிய நிதிஷ் குமார் ரெட்டி ஆல்ரவுண்டராக ஜொலித்தார். பெரிய ஸ்கோர் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வங்கதேசத்துக்கு எதிரான தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.
இந்திய சுற்றுப்பயணம் வந்திருக்கும் வங்கதேசம், டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.
இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வரும் நிலையில், குவாலியரில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்கியது. வங்கதேச அணியில் ஷோரிபுல் இஸ்லாம்க்கு பதிலாக தன்சிம் ஹசான் ஷாகிப் சேர்க்கப்பட்டார்.
இந்தியா ரன் குவிப்பு
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி 74, ரிங்கு சிங் 53, பாண்டியா 32 ரன்கள் எடுத்தனர். வங்கதேச பவுலர்களில் ரிசாட் ஹொசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முஸ்தபிசுர் ரஹ்மான், தன்சிங் ஹசான் சாகிப், தஸ்கின் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
வங்கதேசம் சேஸிங்
டி20 தொடரை இழப்பதை தவிர்க்கும் விதமாக அமைந்த முக்கியமான இந்த போட்டியில் 222 ரன்கள் உலக சாதனை சேஸ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் வங்கதேசம் களமிறங்கியது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்றதோடு, டி20 தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்திய பவுலர்களில் பந்து வீசிய அனைவரும் விக்கெட்டுகளை வீழ்த்தினார். மொத்தம் 7 பவுலர்கள் இந்திய அணியில் பவுலிங் செய்தனர். இதில் நிதிஷ் குமார் ரெட்டி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ், அபிஷேக் ஷர்மா, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்யவில்லை.
பேட்டிங்கில் 74 ரன்கள் பவுலிங்கில் 2 விக்கெட்டுகள் எடுத்து ஆல்ரவுண்ட் ஆட்டத்தில் ஜொலித்த நிதிஷ் குமார் ரெட்டி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா தற்போது 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரையும் தன் வசம் ஆக்கியுள்ளது.
மெஹ்மதுல்லா நிதானம்
வங்கதேசம் பேட்டிங்கை பொறுத்தவரை அதிரடியான தொடக்கம் அமைந்தபோதிலும் அடுத்தடுத்து பேட்ஸ்மேன்கள் அவுட்டாக நெருக்கடி ஏற்பட்டது. 46 ரன்களில் டாப் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, மிடில் ஆர்டரில் களமிறங்கிய மெஹ்மதுல்லா பொறுப்புடன் பேட் செய்தார். கொஞ்சம் 3 சிக்ஸர்கள் பறக்கவிட்ட போதிலும், விக்கெட் சரிவை தடுத்து நிதானம் காட்டிய நிலையில் 39 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இவர் அவுட்டான பின்பு மற்ற வங்கதேசம் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஹைதராபாத்தில் வரும் சனிக்கிழமை நடைபெற இருக்கிறது.
டாபிக்ஸ்