Hardik Pandya: பஞ்சாப் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி! அபராதம் செலுத்தும் ஹர்திக் பாண்ட்யா
Apr 19, 2024, 05:10 PM IST
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 9 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ். முதல் வெளியூர் வெற்றியை பெற்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2024 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன், குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை தொடர்ந்து குறித்த நேரத்தில் பந்து வீசாமல் போன காரணத்துக்காக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்த்ரா சிங் சர்வதேச மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 9 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இதையடுத்து இந்த போட்டியில் குறித்த நேரத்தில் பந்து வீசி முடிக்காமல் ஐபிஎல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டுள்ளார் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா.
பாண்ட்யாவுக்கு அபராதம்
முதல் முறையாக அவர் இந்த குற்றத்தில் ஈடுபட்டதால் ரூ. 12 லட்சம் அபராதம் விதித்திருப்பதாக ஐபிஎல் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த தவறை பாண்ட்யா எதிர்வரும் போட்டிகளில் மீண்டும் வெளிப்படுத்தினால் கூடுதல் அபராத தொகையுடன், அணியினருக்கும் அபராதம் விதிக்கப்படும்.
இந்த சீசனில் குறைவான ஓவர் ரேட்டுக்காக (அதாவது குறித்த நேரத்தில் பந்து வீசி முடிக்காத கேப்டன்) அபராதம் பெறும் 5வது கேப்டனாகியுள்ளார் ஹர்திக் பாண்ட்யா
பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய மும்பை இந்தியன்ஸ்
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 78 ரன்கள்.
பேட்டிங்கை போல் பவுலிங்கில் கலக்கிய மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் டாப் ஆர்டரை 2.1 ஓவரில் காலி செய்தது. இருப்பினும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய அசுடோஷ் ஷர்மா, சஷாங்க் சிங் ஆகியோரின் அதிரடியால் அந்த அணி வெற்றிக்கு அருகில் வந்து 9 ரன்னில் தோல்வியை தழுவியது.
மும்பை இந்தியன்ஸ் பவுலிங்கில் ஜஸ்ப்ரீத் பும்ரா, கோட்ஸி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இந்த வெற்றியால் மும்பை இந்தியன்ஸ் இதுவரை 7 போட்டிகளில் 3 வெற்றியை பெற்று, 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. பஞ்சாப்புக்கு எதிராக மும்பை பெற்றிருக்கும் வெற்றி, இந்த சீசனில் வெளியூர் மைதானத்தில் பெறும் முதல் வெற்றியாக அமைந்துள்ளது.
பஞ்சாப் அணி 7 போட்டிகளில் 2 வெற்றியை மட்டும் பெற்று, 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்துக்கு சென்றுள்ளது. கடைசி இடத்தில் 7 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டும் பெற்றும் ஆர்சிபி அணி உள்ளது.
இரண்டு முறை அபராதம்
குறித்த நேரத்தில் பந்து வீசாமல் போன காரணத்துக்காக டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட், இரண்டு முறை அபராதம் செலுத்தியுள்ளார். இவரைத் தொடர்ந்து குஜராத் கேப்டன் சுப்மன் கில், ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஒரு முறை அபராதம் செலுத்தியுள்ளனர்.
இதேபோல் கொல்கத்தா பவுலர் ஹர்ஷித் ராணா, சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் விக்கெட்டை வீழ்த்திய பின் கிஸ் கொடுத்து வழியனுப்பியது ஐபிஎல் நடத்தை விதிமீறலாக கருத்தப்பட்டு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.