KKRvsMI:பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி - 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!
May 12, 2024, 06:02 PM IST
KKRvsMI: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது
KKRvsMI: கொல்கத்தா: மழையால் பாதிக்கப்பட்ட போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஐ.பி.எல் தொடரில் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த நேற்றைய 60ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. மழையின் காரணமாக போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
அதில் டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங்கினை தேர்வு செய்தது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
முதலில் வந்த தொடக்க வீரர்களான பில் சால்ட் 6 ரன்களுடனும் சுனில் நரைன் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர். மூன்றாவதாக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 21 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து சாவ்லாவின் பந்தில் அவுட்டானார்.
அதன்பின் வந்த கொல்கத்தா அணியின் கேப்டன் 7 ரன்களில் கம்போஜ் பந்தில் அவுட்டானார். பின் ஐந்தாவதாக களமிறங்கிய நிதிஷ் ராணா கொஞ்சம் நிதானமாக ஆடினார். அவர் 23 பந்தில் 33 ரன்கள் எடுத்திருந்தபோது திலக் வர்மாவின் பந்தில் ரன் அவுட் ஆனார். பின் வந்த அண்ட்ரே ருஸ்ஸெல், 24 ரன்கள் எடுத்தபோது சாவ்லாவின் பந்திலும், ரிங்கு சிங், 20 ரன்கள் எடுத்தபோது பும்ராவின் பந்திலும் அவுட்டாகினர். பின் வந்த ராமன்தீப் சிங் 17 ரன்களும், மிட்செல் ஸ்டார்க் 2 ரன்களும் எடுத்தபோது 16 ஓவர்கள் நிறைவுபெற்றது. இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் ஜஸ்ரித் பும்ரா, பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். நுவன் துஷரா, அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதன்மூலம் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது.
சேஸிங்கில் மும்பை இந்தியன்ஸ் அணி:
மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களான இஷான் கிஷான் 22 ரன்களில் 40 ரன்கள் எடுத்திருந்தபோது, சுனில் நரைனின் பந்தில் அவுட்டானார். அதன்பின், ரோஹித் சர்மா 19 ரன்கள் எடுத்திருந்தபோது வருண் சக்ரவர்த்தியின் பந்தில் பெவிலியன் திரும்பினார். அதன்பின் வந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் 11 ரன்கள் எடுத்து அவுட்டானார். நான்கவதாக களமிறங்கிய திலக் வர்மா 17 பந்துகளுக்கு 32 ரன்கள் விளாசியபோது, ஹர்சித் ராணாவின் பந்தில் பெவிலியன் திரும்பினார்.
மிடில் ஆர்டரில் ஐந்தாவதாக களமிறங்கிய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வருண் சக்கரவர்த்தியின் பந்தில் 2 ரன்களுடன் அவுட் ஆனார். பின், டிம் டேவிட் ரன் எதுவும் எடுக்காமல் ருஸ்ஸெல்லின் பந்தில் டக் அவுட் ஆனார். நேஹல் வதேரா 3 ரன்கள் எடுத்தபோது ரன் அவுட் செய்யப்பட்டார். அடுத்தடுத்த விக்கெட்டுகளால் மும்பை அணி நிலைகுலைந்தது. இறுதியாக, நமன் திர் 17 ரன்களும், அனுஷுல் கம்போஜ் 2 ரன்களும், பியூஸ் சாவ்லா ஒரு ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியில் 16 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களை மட்டுமே எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியைத் தழுவியது.
கொல்கத்தா அணியின் சார்பில் 17 ரன்கள் கொடுத்து வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் மேன் ஆஃப் தி மேட்ச் இவருக்கு வழங்கப்பட்டது. மேலும், ஹர்ஷித் ராணா மற்றும் ஆண்ட்ரு ருஸ்ஸெல் 34 ரன்கள் கொடுத்து தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சுனில் நரைன் ஒரு விக்கெட்டை எடுத்தார்.
இதன்மூலம், இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற கேகேஆர்(கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) அணி 2 சுற்றுகள் மீதமுள்ள நிலையில் 18 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு கேகேஆர் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.
டாபிக்ஸ்