Ind vs SL 1st T20 Preview: இரு அணிகளுக்கும் புதிய கேப்டன், பயிற்சியாளர்..! மூன்று முக்கிய வீரர்கள் இல்லை
Jul 27, 2024, 06:00 AM IST
இரு அணிகளுக்கும் புதிய கேப்டன், பயிற்சியாளர் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் தங்களது முதல் மோதலை எதிர்கொள்ள இருக்கிறார்கள். இலங்கை அணியில் காயம் காரணமாக மூன்று முக்கிய வீரர்கள் இல்லை
டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இதன்பின்னர் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட டி20, மூன்று போட்டிகள் கொண்டு ஒரு நாள் ஆகிய தொடர்களில் விளையாடுகிறது.
முதலில் டி20 தொடர் நடைபெற இருக்கும் நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு பல்லேகலேவில் இன்று நடக்கவுள்ளது.
புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள்
இந்தியா டி20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சூர்யகுமார் யாதவ், புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் கெளதம் கம்பீர் ஆகியோருக்கான முதல் போட்டியாக இது அமைகிறது. ]
இதேபோல் இலங்கை அணிக்கும் புதிய கேப்டனாக சரித் அசலங்காவும், புதிய இடைக்கால பயிற்சியாளராக சனத் ஜெய்சூர்யாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் புதிய பொறுப்புடன் முதல் போட்டியில் களமிறங்க இருக்கிறார்கள்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்து டி20 உலகக் கோப்பையை வென்று சாம்பியன் அணியாக இந்தியா களமிறங்குகிறது. அதேவேளையில் டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறி மோசமான தோல்வியை இலங்கை சந்தித்த நிலையில், கம்பேக் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் விளையாட இருக்கிறது.
புதிய வீரர்களுக்கு வாய்ப்பு
இந்தியா தனது முழு பலத்துடன் களமிறங்காமல் சீனியர் வீரரான ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு ஓய்வு அளித்துள்ளது. ஸ்பின்னர் குல்தீப் யாதவ் டி20 அணியில் இடம்பெறவில்லை. அதேபோல் சீனியர் வீரர்கள் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா போன்றோர் ஓய்வு பெற்றிருக்கும் நிலையில் புதிய வீரராக ரியான் பிராக் வாய்ப்பை பெற்றுள்ளார். அதேபோல் கூடுதல் ஸ்பின்னர்களாக வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய பேட்டிங்கில் டாப் ஆர்டருக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் மிடில் ஆர்டரில் ரியான் பிராக், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோரும் உள்ளார்கள்.
பவுலிங்கை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சுக்கு முகமது சிராஜ், கலீல் அகமது, அர்ஷ்தீப் சிங், ஸ்பின் பவுலிங்கில் வாஷிங்டன் சுந்தர், அக்டர் படேல் ஆகியோர் இருக்கிறார்கள்.
காயத்தால் ஏற்பட்ட பின்னடைவு
இலங்கை அணியில் காயம் காரணமாக முக்கிய வீரர்கள் துஷ்மந்தா சமீரா, நுவான் துஷாரா ஆகியோர் விலகியிருந்தனர். இவர்களை தொடர்ந்து மூன்றாவது வீரராக பினுரா பெர்ணாண்டோவும் காயத்தால் விலகியுள்ளார். வீரர்கள் தொடர் விலகல் அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
இருப்பினும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்று அணியில் இடம்பிடித்த வீரர்கள் நல்ல பார்மில் இருந்து வருகிறார்கள்.
சிஎஸ்கே அணியின் ஸ்டிரைக் பவுலராக இருந்து வரும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிப்பார் என நம்பலாம்.
பிட்ச் நிலவரம்
பல்லேகலே மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களை விட ஸ்பின்னர்கள் நன்கு சாதித்துள்ளனர். அதற்கு ஏற்றார் போல் சமீபத்தில் இங்கு நடந்த லங்கா ப்ரீமியர் லீக் போட்டிகளிலும் ஸ்பின்னர்களே ஜொலித்துள்ளனர்.
எனவே பேட்ஸ்மேன்களை காட்டிலும், ஸ்பின் ஜாலம் நிகழ்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - இலங்கை இதுவரை
இதுவரை இவ்விரு அணிகளும் 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 19, இலங்கை 9 முறை வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவு கிடைக்கவில்லை.
இலங்கை மண்ணில் இதுவரை 8 டி20 போட்டிகளில் இந்தியா விளையாடியுள்ளது. இதில் 5 வெற்றிகளை பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
கடைசியாக 2021இல் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணியும், டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணியும் வென்றிருந்தன. இலங்கை தனது சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 2021 சுற்றுப்பயணத்தில் தான் முதல் முறையாக டி20 தொடரை வென்றுள்ளது.
இந்த ஆண்டில் இந்தியா விளையாடியிருக்கும் 16 டி20 போட்டிகளில் 15இல் வென்றுள்ளது. தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு புதிய அணியாக இந்தியா மீண்டும் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்