Jos Buttler: மூன்றாவது முறையாக அப்பா ஆன இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர் - மகனின் பெயர் தெரியுமா?
Jun 14, 2024, 08:16 PM IST
Jos Buttler: மூன்றாவது முறையாக அப்பா ஆனார் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர். அவரது மகனுக்கு ’சார்லி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Jos Buttler: இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரரும், அந்த அணியின் கேப்டனுமான ஜோஸ் பட்லர், ஆண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.
சமீப காலமாக, ஆண்களுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக ஆடி வரும் இங்கிலாந்து அணியினை வழிநடத்தி வரும் அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் அவரது மனைவிக்கும் அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு ’’சார்லி’’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
யார் இந்த ஜோஸ் பட்லர்?:
இங்கிலாந்தின், சமர்செட் அருகிலுள்ள டான்டன் பகுதியில், செப்டம்பர் 8ஆம் தேதி 1990ஆம் ஆண்டு பிறந்தவர், ஜோசப் சார்லஸ் பட்லர் என்னும் ஜோஸ் பட்லர்.
ஜோஸ் பட்லர், டான்டன் நகரிலுள்ள டான்டன் கிங்ஸ் கல்லூரியில் படிக்கும்போதே, கிரிக்கெட் வீரராக வெளியில் தெரிய ஆரம்பித்தார்.
ஜோஸ் பட்லர், இங்கிலாந்தின் 13 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி, 15 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி, 17 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி என அனைத்து பிரிவுகளிலும் உள்ள கிரிக்கெட் அணியின் கீழ், விளையாடியவர். முதன்முறையாக தனது 15 வயதிலேயே, 2006ஆம் ஆண்டு, சீனியர் கிரிக்கெட் வீரர்களுடனான குழுவில் கலந்துகொண்டு, கிளாஸ்டன்பரியில் நடந்த போட்டியில், 15 ரன்களை மட்டுமே கொடுத்து, விக்கெட் கீப்பராக மூன்று கேட்சுகளைப் பிடித்தார்.
சோமர்செட்டின் இளைஞர் அணியினர் நடத்திய கிரிக்கெட் போட்டியிலும், 71 ரன்களை எடுத்து பேட்ஸ்மேனாகவும் தன்னை வலுப்படுத்திக் கொண்டார்.
50 ஓவர் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், 2012ஆம் ஆண்டு, பிப்ரவரி 21ஆம் தேதி, பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து ஆடிய போட்டியில், முதன்முதலாக விக்கெட் கீப்பராக களமிறங்கினார். ஜோஸ் பட்லர் சிறந்த விக்கெட் கீப்பர் மட்டுமல்லாது, தலைசிறந்த வலது கை பேட்ஸ்மேனும் ஆவார். இவர் 181 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு, இதுவரை 5,022 ரன்களை எடுத்துள்ளார். பேட்டிங் ஆவரேஜ், 39.54 என வைத்துள்ளார். அதன்பின், கடைசியாக கடந்தாண்டு அதே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், நவம்பர் 11ஆம் தேதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இறுதியாக ஆடியிருந்தார், ஜோஸ் பட்லர்.
அதேபோல், இந்தியாவுக்கு எதிராக 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம், 27ஆம் தேதி நடந்த டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து டெஸ்ட் வீரராக நுழைந்த ஜோஸ் பட்லர், 2022ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி, டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வுபெற்றார்.
அதில் ஜோஸ் பட்லர், 57 டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொண்டு, 2 ஆயிரத்து 907 ரன்கள் வரை குவித்து வைத்திருந்தார்.
மேலும், 2011ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 31ஆம் தேதி, இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியின் வீரராக ஜோஸ் பட்லர் களமிறங்கி, தொடர்ந்து விளையாடி வருகிறார்.
ஜோஸ் பட்லர், 2019ஆம் ஆண்டு கலந்துகொண்டு விளையாடிய ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி, உலகக்கோப்பையை வென்றது. அதேபோல், ஜோஸ் பட்லரின் கேப்டன்ஸியில், இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வென்றது.
ஜோஸ் பட்லருக்கு மகன் பிறப்பு:
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், மீண்டும் கேப்டனாக இங்கிலாந்து அணிக்குத் தலைமைத் தாங்கி வருகிறார், ஜோஸ் பட்லர். மேலும், தற்போது, டாப் 8 அணிகள் பட்டியலில் இங்கிலாந்து அணி தகுதிபெற்றுள்ளது.
இந்நிலையில், ஜோஸ் பட்லர், 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி, லூஸி வெப்பர் என்னும் பெண்ணை மணமுடித்தார். இத்தம்பதிகளுக்கு ஜார்ஜியா ரோஸ் என்கிற பெண் குழந்தையும், மர்கட் என்னும் மற்றொரு குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் இன்று (ஜூன் 14) ஜோஸ் பட்லர் தம்பதிகளுக்கு, இன்று மகன் பிறந்துள்ளார். அவருக்கு சார்லி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்