GT vs DC Result: ஒரே வெற்றியால் 6வது இடத்துக்கு முன்னேறிய டெல்லி கேபிடல்ஸ்! சொந்த மண்ணில் குஜராத்துக்கு 2வது தோல்வி
Apr 18, 2024, 01:04 AM IST
மிகவும் எளிய இலக்காக இருந்தாலும் 4 விக்கெட்டுகளை இழந்த பின்னர் தான் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலிலும் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஐபிஎல் 2024 தொடரின் 32வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் குஜராத் டைட்ன்ஸ் 6 போட்டிகளில் 3 வெற்றியுடன் 6வது இடத்திலும், டெல்லி கேபிடல்ஸ் 6 போட்டிகளில் 2 வெற்றியை பெற்று 9வது இடத்தில் இருந்து வந்தது.
குஜராத் அணியில் விருத்திமான சாஹா, டேவிட் மில்லர், சந்தீப் வாரியர் ஆகியோர் அணிகளுக்கு திரும்பியுள்ளனர். டெல்லி கேபிடல்ஸ் அணியில் பார்மில் இல்லாமல் இருக்கும் டேவிட் வார்னருக்கு பதிலாக சுமித் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் பவுலிங் சுருண்ட குஜராத்
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்ன்ஸ் 17.3 ஓவரில் 89 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியது. இந்த சீசனில் 100 ரன்களுக்கு குறைவாக எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த முதல் அணியாக குஜராத் டைட்ன்ஸ் உள்ளது. அதேபோல் இதுதான் குஜராத் அணியின் மிகவும் குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது.
அந்த அணியில் அதிகபட்சமாக ரஷித் கான் 31, சாய் சுதர்சன் 12, ராகுல் திவாட்டியா 10 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.
டெல்லி கேபிடல்ஸ் பவுலிங்கில் முகேஷ் குமார் 3, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கலீல் அகமது, அக்ஷர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
டெல்லி சேஸிங்
மிகவும் எளிதான இந்த இலக்கை 8.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்து டெல்லி கேபிடல்ஸ் இந்த சீசனின் மூன்றாவது வெற்றியை பெற்றது. டெல்லி அணியில் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் 20, ஷாய் ஹோப் 19, ரிஷப் பண்ட் 16 ரன்கள் எடுத்தனர்.
குஜராத் அணியில் அறிமுக போட்டியில் களமிறங்கிய சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஸ்பென்சர் ஜான்சன், ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 6வது இடத்துக்கு முன்னேறியது. அதேபோல் குஜராத் டைட்டன்ஸ் 7வது இடத்துக்கு சென்றது.
நான்கு விக்கெட்டுகளை இழந்த டெல்லி
மிகவும் எளிய இலக்கை விரட்டிய போதிலும் டெல்லி கேபிடல்ஸ், அடித்து ஆட முயற்சித்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் மூன்று ஓவருக்குள் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ப்ருத்வி ஷா, மெக்குர்க் ஆகியோர் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.
பவர்ப்ளேவுக்குள் ஆட்டத்தை முடித்து வெற்றியுடன் நல்ல ரன்ரேட்டையும் பெற்றுவிடலாம் என்ற தீர்மானித்தில் களமிறங்கியபோது டெல்லி அணி அதிரடியாக விளையாடியது. மேலும் இரண்டு விக்கெட்டுகள் என மொத்தம் நான்கு விக்கெட்டுகளை இழந்தது.
விக்கெட் சரிவை தடுத்து கேப்டன் பண்ட், சுமித் குமார் ஆகியோர் ஆட்டத்தை பினிஷ் செய்தனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.