இந்த சீஸனில் தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-தோல்விக்கான காரணத்தை பகிர்ந்த அஸ்வின்
Jul 15, 2024, 10:22 AM IST
Chepauk Super Gillies: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தியது. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய சிறிது நேரத்தில் மழை குறுக்கிட்டுதால் ஆட்டம் 7 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது.
ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 சீஸனில் கோயம்புத்தூரிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி இந்த சீஸனில் 2வது வெற்றியைப் பதிவு செய்தது.
முன்னதாக, டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய சிறிது நேரத்தில் மழை குறுக்கிட்டுதால் ஆட்டம் 7 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் அணிக்கு அதிகபட்சமாக அவர்களது கேப்டன் ரவிச்சந்திரன் ஆட்டமிழக்காமல் 20 பந்துகளில் 45* ரன்கள் அடித்தார்.
முதல் இன்னிங்ஸில்..
முதல் இன்னிங்ஸின் முதல் ஓவரை மெய்டனாக வீசி அதில் 2 விக்கெட்கள் எடுத்து அபிஷேக் தன்வார் அசத்தினார். இது தான் இந்த டி.என்.பி.எல்லில் நிகழ்த்தப்பட்ட முதல் மெய்டன் விக்கெட் ஓவராகும். அஷ்வினைத் தவிர திண்டுக்கல் அணியின் முக்கிய பேட்டர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்களை இழந்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸில் அபிஷேக் தன்வார் மற்றும் ஜி பெரியசாமி தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இந்த சீஸனில் 2வது வெற்றியைப் பதிவு செய்ய 4 முறை டி.என்.பி.எல் சாம்பியன்களான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 65 என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது. 2வது
இன்னிங்ஸின் முதல் பந்திலேயே டி. சந்தோஷ் குமார்(0) விக்கெட்டை சந்தீப் வாரியர் கைப்பற்றினார். அதன் பின் 2வது விக்கெட்டிற்கு ஜெகதீசன் மற்றும் பாபா அபராஜித் இணைந்து 65* ரன்கள் பார்ட்னர்ஷிப்பாக அமைத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தனர். இதன் மூலம் இந்த சீஸனில் தொடர்ச்சியாக 2வது வெற்றியை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பதிவு செய்தது.
அஸ்வின் பேட்டி
தோல்விக்குப்பின் பேசிய திண்டுக்கல் டிராகன்ஸ் கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின் பேசுகையில், “7 ஓவர்கள் போட்டியில் 85-90 ரன்கள் அடித்திருக்க வேண்டும். இருந்தாலும் எங்கள் அணி வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாட முற்பட்டு தங்களது விக்கெட்களை இழந்தனர். இந்தப் போட்டியில் தோற்றாலும் அடுத்து வரும் ஆட்டங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுள்ளது”, என்று அஷ்வின் தெரிவித்தார்.
ஆட்டநாயகன் விருதை வென்ற அபிஷேக் தன்வர் பேசுகையில், “என்னுடைய பலத்திற்கு நான் பந்துவீசினேன் வேறு எதைப் பற்றியும் நான் யோசிக்கவில்லை. இது எனது சொந்த மண் இங்கு புதியப் பந்து நன்கு ஸ்விங்காகும் என்று எனக்குத் தெரியும்”, என்று அவர் கூறினார்.
வெற்றிக்குப்பின் பேசிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் பாபா அபராஜித் பேசுகையில், “இந்தப் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. மைதான ஊழியர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் இவ்வளவு விரைவாக ஒரு போட்டி நடத்த காரணமாக இருந்ததற்காக, மீண்டும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருந்ததால் ஆட்டத்தை விரைவாக முடிக்க எண்ணினோம்”, என்று அவர் தெரிவித்தார்.
போட்டிக்கான விருதுகள்:
1."இந்தப் போட்டியின் கேம்பா கிரேட் இந்தியன் ஸ்ட்ரைக்கர் விருதை” திரு ரவிச்சந்திரன் அஷ்வின் வென்றார்.
2.”பூம் பூம் பூமர் கோல்டன் விக்கெட் விருதை” திரு அபிஷேக் தன்வர் வென்றார்.
3.”இந்தப் போட்டியின் பூமர் வுமன் அதிக டாட் பந்துகளுக்கான விருதை” திரு. ராஹில் ஷா வென்றார்.
4.”இந்தப் போட்டியின் இன்சூரன்ஸ் தேகோ சேஃப் ஹேண்ட்ஸ் விருதை” திரு ஆண்ட்ரே சித்தார்த் வென்றார்.
5.”இந்தப் போட்டியின் பிரிட்டிஷ் எம்பயர் பேக்கேஜ்டு டிரிங்கிங் வாட்டர் ஹை வோல்டேஜ் வீரருக்கான விருதை” திரு நாராயண் ஜெகதீசன் வென்றார்.
6.”இந்தப் போட்டியின் ஐஓபி மோஸ்ட் டிபென்டபிள் வீரருக்கான விருதை” திரு ரவிச்சந்திரன் அஷ்வின் வென்றார்.
7.”இந்தப் போட்டியின் ஷேரான் பிளை சூப்பர் 6இல் அதிக சிக்ஸர் அடித்த வீரருக்கான விருதை” திரு ரவிச்சந்திரன் அஷ்வின் வென்றார்.
8. “ஸ்ரீராம் அதிக ஃபோர்கள் அடித்த வீரருக்கான விருதை” திரு. ரவிச்சந்திரன் அஷ்வின் பெற்றார்.
9.”ஸ்ரீராம் கேபிட்டல் ஆட்டநாயகன் விருதை” திரு அபிஷேக் தன்வர் வென்றார்.
சேப்பாக் மற்றும் திண்டுக்கல் இடையேயான போட்டியின் போது மழை குறுக்கிட்டது
அபிஷேக் தன்வர் தனது துல்லியமான பந்துவீச்சின் மூலம் திண்டுக்கல் பேட்டர்களை திணறடித்தார்
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு தனது அதிரடியான பேட்டிங் மூலம் கேப்டன் அஷ்வின் ரன் சேகரித்தார்
நாராயண் ஜெகதீசன் சேப்பாக் அணியின் வெற்றியை தனது பொறுப்பான பேட்டிங் மூலம் உறுதி செய்தார்
சேப்பாக் அணியின் கேப்டன் பாபா அபராஜித் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்
இந்தப் போட்டியைக் காண சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் வருகை தந்தார்
போட்டியின் முன்னோட்டம்:
ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 சீஸனில் கோயம்புத்தூரிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் இன்று (ஜூலை 15) நடைபெறவுள்ள போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியும் மோதுகிறது. இவ்விரு அணிகளின் கடைசி 5 மோதல்களில் நெல்லை ராயல் கிங்ஸ் 3 வெற்றிகளும் மதுரை அணி 1 வெற்றியும் பெற்றுள்ளது. 2024 டி.என்.பி.எல்லில் இதுவரை நெல்லை அணி 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளும் 1 தோல்வியும் பெற்றுள்ளது. மதுரை அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 1 வெற்றியும் 2 தோல்விகளைப் பெற்றுள்ளது. ப்ளேஆஃப்ஸ் பந்தயத்தில் முதல் 4 இடங்களுக்குள் தங்கள் இடத்தை உறுதி செய்திட இவ்விரு அணிகளுக்கும் நாளைய வெற்றி மிகவும் அவசியம்.
இன்றையப் போட்டி
சீகம் மதுரை பேந்தர்ஸ் vs நெல்லை ராயல் கிங்ஸ்
நேரம்: இரவு 7.15 மணிக்கு
இடம்: கோயம்புத்தூரிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானம்
டாபிக்ஸ்