Anshuman Gaekwad Died: புற்றுநோய் பாதிப்பு..! இந்திய அணி முன்னாள் பேட்ஸ்மேன், பயிற்சியாளர் அன்ஷுமான் கெய்க்வாட் மறைவு
Aug 01, 2024, 04:21 PM IST
நீண்ட காலமாக புற்றுநோய் பாதிப்பு காரணமாக சிகிச்சையில் இருந்து போராடி வந்த இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட் காலமானார் . அவருக்கு வயது 71
இந்திய கிரிக்கெட் அணியில் 1974 முதல் 1987 வரை டெஸ்ட், ஒரு நாள் போட்டியில் விளையாடியவர் அன்ஷுமான் கெய்க்வாட் . டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான இவர் ரத்த புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் நேற்று (புதன்கிழமை) இரவு காலமானார்.
நோய் பாதிப்பு தன்மை தீவிரமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கெய்க்வாட் மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள், முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
ஜெய்ஷா இரங்கல்
பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கெய்க்வாட் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்தார். “திரு அவுன்ஷுமான் கெய்க்வாட்டின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஒட்டுமொத்த கிரிக்கெட் தோழமைக்கும் அவரது இறப்பு இதயத்தை உடைத்துள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
1975 முதல் 1987 வரை 40 டெஸ்ட் மற்றும் 15 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி பிரதிநிதித்துவப்படுத்திய கெய்க்வாட், டெஸ்ட் போட்டிகளில் 1985 ரன்களும், ஒரு நாள் போட்டியில் 269 ரன்கள் என மொத்தம் 2254 சர்வதேச ரன்கள் எடுத்துள்ளார்.
பிசிசிஐ பண உதவி
முன்னதாக, ரத்த புற்றுநோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட்க்கு ஆதரவு அளிக்கும் வகையில் ரூ. 1 கோடி அளிப்பதாக பிசிசிஐ உறுதியளித்தது. இந்த சவாலான நேரத்தில் உதவி வழங்குவதற்காக தனிப்பட்ட முறையில் அவரது குடும்பத்தினரும் பிசிசிஐ நிர்வாகிகள் அணுகினர்.
அதன்பின்னர் வெளியிட்ட செய்தி குறிப்பில், கெய்க்வாட்டின் குடும்பத்துக்கு பிசிசிஐ விரிவான ஆதரவை உறுதியளித்துள்ளது. அவர் விரைவில் குணமடைவார் என நம்பிக்கையும் தெரிவித்தது.
லண்டனில் சிகிச்சை
அன்சுமன் கெய்க்வாட் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை இந்திய அணியின் முன்னாள் வீரரான சந்தீப் படேல் வெளிப்படுத்தினார். கெய்க்வாட் ஒரு வருடத்துக்கும் மேலாக அதை எதிர்த்துப் போராடி வருகிறார் எனவும், அதன் சிகிச்சைக்காக லண்டனில் இருந்தார். கெய்க்வாட் தனக்கு நிதி உதவி தேவை என்று தெரிவித்ததாகவும் கூறினார்.
இந்த தகவலையடுத்து, கெயக்வாட் உடன் இணைந்து விளையாடியவரும், இந்திய அணிக்கு முதல் உலகக் கோப்பை பெற்று கொடுத்த கேப்டனுமான கபில்தேவ், முன்னாள் வீரர்களான மொஹிந்தர் அமர்நாத், சுனில் கவாஸ்கர், சந்தீப் பாடில், திலீப் வெங்சர்க்கார், மதன் லால், ரவி சாஸ்த்ரி, கிரிதி ஆசாத் உள்ளிட்டோருடன் இணைந்து அன்சுமன் கெய்வாட்க்கு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.
வலியை உணர்கிறேன்
இதுதொடர்பாக கபில்தேவ் பிரபல ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "இது மிகவும் வருத்தமளிக்கிறது. நான் அன்ஷுவுடன் விளையாடியதால், நானும் அவரது வலியை உணர்கிறேன். அவரை இந்த நிலையில் பார்க்க சகிக்க முடியவில்லை. யாரும் இதுபோல் கஷ்டப்படக் கூடாது. வாரியம் அவரை கவனித்துக்கொள்ளும் என்று எனக்குத் தெரியும்
நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அன்ஷுவுக்கு எந்த உதவியும் உங்கள் இதயத்திலிருந்து வர வேண்டும்.
இந்திய அணிக்காக பேட்டிங் செய்யும்போது சில ஆக்ரோஷமான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தனது முகம் மற்றும் மார்பில் அடிகளை அன்ஷு வாங்கினார். அவருக்காக நாம் எழுந்து நிற்க வேண்டிய நேரம் இது. கிரிக்கெட் ரசிகர்கள் அவரை ஏமாற்ற மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். அவர் குணமடைய அவர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்
இந்திய அணியின் பயிற்சியாளர்
டிராவிட்டுக்கு முன் இந்திய அணியின் தடுப்பு சுவர் போல் விளங்கிய இந்திய பேட்ஸ்மேனான கெய்க்வாட் அணிக்கு பல வெற்றிகளில் பங்களிப்பை வழங்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு அன்ஷுமான் கெய்க்வாட் இரண்டு முறை தலைமை பயிற்சியாளராக இருந்தார். 1997 முதல் 1999 வரையிலும், பின்னர் 2000ஆவது ஆண்டிலும் செயல்பட்டார்.
இவரது பயிற்சி காலத்தில் இந்தியா டைட்டன் கோப்பை முத்தரப்பு தொடர், கோககோலா சுதந்திர தின கோப்பை முத்தரப்பு தொடர், ஷார்ஜாவில் நடைபெற்ற கோககோலா முத்தரப்பு தொடர் போன்ற சில முத்தரப்பு தொடர்களை வென்றுள்ளது.
அதேபோல் 2000ஆவது ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பைனல் வரை சென்று ரன்னர்அப் ஆனது. கென்யா அணியுடனும் இணைந்து சில காலம் பணியாற்றிய கெய்க்வாட் பிசிசிஐயின் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் (சிஏசி) உறுப்பினராகவும் இருந்தார், அதில் இருந்து அவர் 2019இல் ராஜினாமா செய்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்