கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி, விரதமுறைகள் என்ன, பூஜை முறைகள் என்ன மற்றும் சந்தேகங்களுக்கான பதில்கள்!
Nov 01, 2024, 02:27 PM IST
கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி, விரதமுறைகள் என்ன, பூஜை முறைகள் என்ன மற்றும் சந்தேகங்களுக்கான பதில்கள் குறித்துப் பார்ப்போம்.
கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி, விரதமுறைகள் என்ன, பூஜை முறைகள் என்ன மற்றும் சந்தேகங்களுக்கான பதில்கள் குறித்துப் பார்ப்போம்.
சமீபத்திய புகைப்படம்
இதுதொடர்பாக ஆன்மிகப் பேச்சாளர் இரா.விஜயகுமார், குகன் அருள் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’முதலில் விரதம் என்பது என்னவென்றால், சாப்பிடாமல் இருப்பது என நினைத்துக்கொள்கின்றனர். நீங்கள் வயிறு முழுக்க சாப்பிட்டீர்கள் என்றால் தூக்கம் தான் வரும். இதனால் இறைவனை நினைக்கத் தோன்றாது. மந்தத்தன்மையை உண்டாக்கிவிடும். அதனால் தான் நமது சமயத்தில் உணவுக்கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தார்கள்.
உணவுக்கட்டுப்பாடு என்று வரும்போது நிறையபேர் மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பது என நினைத்துக் கொள்கிறார்கள். விரதம் என்னவென்றால் அதி தீவிரமாக நினைத்துக்கொண்டே இருப்பது.
கந்த சஷ்டியில் எதை நினைக்க வேண்டும்:
இன்னும் தெளிவாகச் சொன்னால், 365 நாட்கள் எதை நாம் நினைத்துக்கொண்டு இருந்தோமோ, அதை நினைக்காமல், நாம் நினைக்காமல் தவறவிட்டவற்றை நினைப்பது. இன்னும் தெளிவாகச் சொன்னால், காசு, தொழில், குடும்பம் என்று எதையாவது நினைத்துக்கொண்டே இருப்போம்.
முருகனை நினைக்கிறோமா என்றால் இல்லை. அதாவது 10-ல் ஒன்றாக வைத்து நினைத்துக்கொண்டு இருப்போம். அப்படி இல்லாமல், வேறு எதைப் பற்றியும் நினைக்காமல், முழு நாளுமே முருகனைப் பற்றியே நினைத்துக்கொண்டு இருந்தால் சஷ்டி விரதம் என்று பொருள். அதற்கு உரிய முக்கியமான நாள் வேண்டும். அடுத்து உணவுக்கட்டுப்பாடு, உடம்பையும் மனதையும் கட்டுப்படுத்த நிச்சயம் வேண்டும். உணவைத் தவிர்த்துவிடுகிறேன் என்றால், எப்படி நமது உடலுக்கு ஏற்றவாறு உணவைத் தவிர்ப்பது.
நான் நன்கு ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றால் நீர் மட்டும் எடுத்துக்கொண்டு இருப்பது ஒரு வகை. இல்லையென்றால், பழம் மட்டும் எடுத்துக்கொண்டு அந்த விரதத்தைத் தொடர்வது ஒரு வகை. இதெல்லாம் என்னால் முடியாது, ஒரு வேளை மட்டும் உணவைத் தவிர்த்துவிடுகிறேன் என இருந்தாலும் சரி. ரொம்ப முக்கியமானது இறைவனை மனப்பூர்வமாக நினைத்தே வழிபாடு செய்வது. அதற்குரிய நாள் தான் விரதம் என்று பெயர்.
முருக வழிபாட்டின் முக்கியத்துவம்:
இறைவனை முழு மனதோடு நினைப்பது, பூஜை செய்வது, அதற்குப் பின் தானம் செய்வது இதெல்லாம் தான் விரதத்துக்குள் அடங்கும். சாப்பாடை மட்டும் சாப்பிடாமல் இருந்துவிட்டு, வேறு நபர்களுடன் எல்லாம் பேசுவது, டிவி பார்ப்பேன், இன்ஸ்டா பார்ப்பேன் என்பது எல்லாம் விரதம் கிடையாது.
சாப்பாட்டைத் தவிர்ப்பது உடல் சீராகுமே ஒழிய, முருகனின் அருள் கிடைக்குமா என்றால் கேள்விக்குறிதான். விரதம் என்பது இறைவனை எப்போதும் நினைப்பது, உபவாசம் என்னும் உணவினைத் தவிர்த்து இருத்தல் எனலாம்.
இந்த முறை மகா கந்த சஷ்டி விரதம் நவம்பர் 2ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி சூரசம்ஹாரம் வரை தொடர்கிறது. அடுத்து நவம்பர் 8ஆம் தேதி திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கும்.
மொத்த கந்த சஷ்டியின் விரத நாட்கள் என்பது ஏழு நாட்கள் ஆகும். சில பேர் சூரசம்ஹாரம் முடிஞ்சதும் விரதத்தை விடுபவர்களும் இருக்கிறார்கள். அதனால், ஆறு நாட்களில் விரதமிருக்கலாமா, ஏழு நாட்களில் விரதமிருக்கலாமா என்பதை நீங்கள் தேர்வு செய்துகொள்ளுங்கள்.
கந்த சஷ்டி வழிபாட்டில் விரதம் முறை?:
தேர்வு செய்தபின், எப்படி பூஜை செய்வது என்பது மிக முக்கியம். கலசம் வைத்து வழிபடுவது அல்லது முருகனின் படத்தை வைத்து வழிபடுவது. ஆனால், கண்டிப்பாக காலை மற்றும் மாலை முருகனை வழிபட வேண்டும்.
அடுத்து தான், உணவை எடுத்துக்கொள்ளும் முறை. சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பார்கள். அதாவது, சஷ்டி விரமிருக்கும் நபர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
ஆறு நாட்களும் எந்த வித உணவும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது ஒரு முறை, ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் இளநீரை எடுத்துக்கொண்டு இருப்பது ஒரு வகை.
இல்லையென்றால் நாளில் ஒரு வேளையில் மட்டும் உணவை எடுத்துக்கொள்வது ஒரு வகை. இன்னும் சிலர் பாலை முருகனுக்கு நைவேத்தியம் செய்துவிட்டு, உணவாக எடுப்பார்கள் அது ஒரு வகை. இருப்பதிலேயே கடுமையானது ஒவ்வொரு நாளைக்கு ஒரு குறு மிளகு வீதம், படிப்படியாக மிளகினை அதிகரித்து உண்பது ஒரு வகை. இதில் உங்கள் உடலுக்குத் தகுந்த உணவுமுறையை எடுத்துக்கொள்ளுங்கள்.
அதன்பின், பூஜையில் மனதைச் செலுத்தி வழிபடவேண்டும் என்பது தான் பிரதானம். வீட்டில் கலசம் வைத்து வழிபட முடியவில்லை என்றால், முருகனின் படத்தை வைத்து வழிபடலாம். இப்படி வழிபட முடியாதவர்கள், சூரசம்ஹாரம் நடக்கும் நாளன்று மட்டும் இப்படி விரதமிருக்கலாம்.
சுத்தமில்லாத நாட்கள் வரும்போது, அந்த நாளும் விரதமிருக்கலாம். மனதுக்குள் பூஜை செய்துகொள்ளுங்கள். அதன்பின் சரியான பின், திரும்பி பூஜையைத் தொடரலாம். வெளியூர் போனாலும் வழிபாடு நடத்த வேண்டும்.
மிக நெருங்கிய சொந்தங்களாக இருந்தால், துக்க நிகழ்ச்சிக்குப் போகலாம். மிகமிக முக்கியம் முழுவதும் முருகனை நினைத்துக்கொண்டு இருந்தால் அதற்கான முழுப்பலன்கள் கிடைக்கும்’’ என மகா கந்த சஷ்டி முறை குறித்து, ஆன்மிகப் பேச்சாளர் விஜயகுமார் தெரிவித்தார்.
நன்றி: குகன் அருள் யூட்யூப் சேனல்
டாபிக்ஸ்