அரக்கர்கள் அட்டூழியங்களை ஒழிக்க நடக்கும் தேவர் - அசுரர் போர்!கார்த்திகேயன் சூரசம்ஹாரம் - இந்த வார சிவசக்தி திருவிளையாடல்
கைலாயம் செல்ல மறுப்பு தெரிவித்து பின்னர் அரக்கர்களின் அட்டூழியங்களை ஒழிக்க தேவர் - அசுரர் போர் நடத்தி கார்த்திகேயன் சூரசம்ஹாரம் செய்யும் காட்சிகள் வரும் வாரம் சிவசக்தி திருவிளையாடல் தொடரில் இடம்பெறவுள்ளன

தமிழ் டிவி சீரியல்களில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஆன்மிக தொடராக சிவசக்தி திருவிளையாடல், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், மிகப் பிரமாண்டமாகவும் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் மிகுந்த சுவாரஸ்யத்தோடும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது. ஜூன் மாதம் முதல் ஒளிப்பரப்பாகி வரும் இந்த ஆன்மிக புராண தொடர், ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற தொடராக இருந்து வருகிறது. இந்த தொடரில் வரும் வாரம் என்ன நடக்க இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
கைலாயம் செல்ல மறுக்கும் கார்த்திகேயன்
கார்த்திகை பெண்களிடம் வளரும் கார்த்திக்கேயன், தனது உண்மையான பெற்றோர்கள் சிவன் - பார்வதியோடு கைலாயம் செல்ல மறுக்கிறான். கார்த்திகை பெண்களும் அனுப்ப மறுக்கிறார்கள். கார்த்திக்கேயன் பிறந்த உத்தேசமே தாரகாசுரனை வதம் செய்து அரக்கர்களின் அட்டூழியங்களை ஒடுக்குவதற்குத்தான். அது நிறைவேற வேண்டுமென்றால், கார்த்திக்கேயன் கைலாயம் வர வேண்டும். தேவசேனாதிபதியாகப் பொறுப்பேற்க வேண்டும். தேவர் - அரசுரர் யுத்தத்தில் ஈடுபட வேண்டும். பிரம்மனிடம் தாரகாசுரன் வேண்டிக்கொண்டதன்படி, அவன் சிவமைந்தன் கார்த்திக்கேயன் கையால் இறக்க வேண்டும் என்ற உத்தேசங்கள் எல்லாம் கார்த்திக்கேயனுக்கும் கார்த்திக்கைப் பெண்களுக்கு உணர்த்தப்படுகின்றன.
கார்த்திக்கேயனும் தேவசேனாதிபதியாகப் பொறுப்பேற்று தேவர், அசுரர் போரை நடத்துகிறான். அசுரமாதா திதி செய்த சதியால் அசுரர்கள் கார்த்திக்கேயனைச் சூழ்ந்து தாக்கி, அவனை மயக்கமடைய வைக்கிறார்கள். சிவன் தனது வீரபத்திரர் அவதாரத்தைப் போர்க்களத்துக்கு அனுப்பி கார்த்திக்கேயனுக்கு உதவுகிறார்.
சூரசம்ஹாராமாக கொண்டாடப்படும் தேவர் - அசுரர் போர்
பிறகு தேவசேனாதிபதி கார்த்திக்கேயனும் வீரபத்திரனும் இணைந்து அசுரர்களைச் சம்ஹாரம் செய்கின்றனர். தேவர் -அரசுர் போர் சூரசம்ஹாரமாக உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. பிறகு கார்த்திக்கேயன் வாக்களித்தது போல அசுரர்களைச் சம்ஹாரம் செய்தபிறகு கைலாயத்தில் தங்காமல் தமது வளர்ப்புத் தாய்களான கார்த்திகை பெண்களோடு சென்றுவிட்டானா? அவரைக் கைலாயத்திலேயே தங்கவைக்க சிவனும் பார்வதியும் என்ன செய்தார்கள்? அசுரர் சம்ஹாரத்தோடு கார்த்திக்கேயனின் பிறப்பின் உத்தேசம் நிறைவடைந்ததா அல்லது இன்னும் உள்ளதா? சிவனின் திருவிளையாடல்களில் இன்னும் என்னென்ன திகீர் திருப்பங்கள் நடக்க காத்திருக்கின்றன? சிவசக்தியின் உள்நோக்க உத்தேசங்கள் என்னென்ன? போன்ற பல சுவாரஸ்யமான விஷயங்களை கொண்டு வரும் வாரம் எபிசோடு காட்சிகள் இடம்பெறவுள்ளன
சிவசக்தி திருவிளையாடல் முன்கதை
பிரஜாபதி தட்சண் செய்த தவத்தால் அவருக்கு மகளாக ஆதிபராசக்தி `தாட்சாயிணி சதி`யாக அவதரிக்கிறார். சிவன்மீது காதல்கொள்ளும் சதி, பிரஜாபதி தட்சண் தடைகளைத் தகர்த்தெரிந்து சிவனைக் கரம்பிடிக்கிறார். ஆனால், தட்சண் செய்யும் ஒரு யாகம், தாட்சாயிணி - சிவன் வாழ்வில் ஆறாத்துயரத்தை நிகழ்த்துகிறது.
சதி தன் உடலை அக்னிக்கு இரையாக்குகிறார். இதனால் கோபம் அடையும் சிவன் வீரபத்ரராக உருவெடுத்து பிரஜாபதி தட்சன் ஆணவத்தை அடக்கி, தலையைக் கொய்கிறார். இன்னும் கோபம் அடங்காத சிவன் பிரபஞ்சத்தை அழிக்கும் அளவுக்குச் செல்கிறார். அதை நாராயணர் தடுக்கிறார். சிவன் ஆழ்ந்த தவத்துக்குள் மூழ்குகிறார்.
இந்த பிரபஞ்ச சுழற்சிக்கு சிவன் - சக்தியின் சேர்க்கை தேவை என்பதை உணர்ந்த நாராயணர், பிரம்மன் மற்றும் தேவர்கள் ஆதி சக்தியை வேண்ட, அவள் இமயமலை அரசன் ஹிம்மான் - மைனாதேவி தம்பதிக்கு மகளாக பார்வதி என்ற பெயரில் உருவெடுக்கிறார். சிவபக்தியில் வளர்ந்து, திருமண வயதை அடையும் பார்வதி சிவனை திருமணம் செய்ய முடிவெடுக்கிறாள். ஆனால் சிவன் செய்யும் தவம் அதற்குத் தடையாக இருக்கிறது. நாராயணர் ஏற்பாட்டில் மன்மதனும் ரதியும் சிவன் தவத்தைக் கலைக்கிறார்கள். தவம் கலைந்ததில் கோபத்தில் சிவன் தன் நெற்றிக்கண் திறந்து மன்மதனை எரிக்கிறார்.
காதல் கணவனை இழந்த ரதி, "தான் இப்போது மன்மதனை இழந்து நிற்க காரணம், பார்வதி நீதான். உனக்கும் சிவனுக்கு திருமணம் நடந்தாலும் குழந்தை பாக்யம் கிடைக்காது” என்று சபித்துவிடுகிறார். ஒரு புறம் சிவன் மீதான காதல், மறுபுறம் ரதியின் சாபம், பார்வதி கலங்கிப் போகிறார். சதியின் மறைவை மறக்க முடியாமல் தவிக்கும் சிவனை - பார்வதியோடு சேர்த்துவைக்க நாராயணரும் மற்ற தேவர்களும் படாத பாடு படுகிறார்கள்.
அதே நேரத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தால் அரக்கர்களுக்கு நல்லதல்ல, எனவே இதைத் தடுக்க வேண்டும் என்று தாரகாசுரன் சுக்ராச்சாரியாரின் உதவியுடன் பல சதித்திட்டங்களை நிறைவேற்றுகிறான். ஒரு கட்டத்தில் மனம் மாறும் சிவன், பார்வதி தான் ஆதிபராசக்தி என்பதை உணர வேண்டும் என்பதற்காகப் பல சோதனைகள் தருகிறார்.
அரக்கன் தாரகாசுரனின் சதிகளைத் தகர்த்து, கடும் தவம் செய்து பார்வதி சிவனின் மனதில் இடம் பிடிக்கிறார். ஆனால் பார்வதியின் தாய் மைனாதேவி "ரதியின் சாபத்தினால் சிவனுக்கும் பார்வதிக்கு திருமணம் நடந்தால், பார்வதிக்கு குழந்தை பாக்யம் கிடைக்காது. அப்படியிருக்கும் போது ஒரு தாயாக பார்வதியை சிவனுக்கு எப்படி திருமணம் செய்து வைப்பது" என்று தன் வாதத்தை முன்வைக்கிறார்.
நாராயணர் மற்றும் தேவர்களால் மைனாதேவியின் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். ஆதிபராசக்திதான் பார்வதியாகப் பிறந்திருக்கிறாள். அவன் சிவனைத் திருமணம் செய்துகொள்வதே பிரபஞ்சத்தின் விருப்பம் என்பது மைனாதேவிக்கு உணர்த்தப்படுகிறது. அவளும் சம்மதிக்கிறாள்.
திருமணத்தின்போது சிவனின் விருந்தினர்களை அசுர அரசன் தாரகாசுரன் சிறைப்பிடிக்க, அவர்களை மீட்கப்போகும் சிவன் சிவ தனுசுவை அளித்து, தனக்குப் பிறக்க இருக்கும் மைந்தன் உயிரையும் பணயம்வைத்து விருந்தினர்களைக் காக்கிறார். சிவன் பார்வதியின் அம்சமாக கார்த்திகைப் பெண்களிடம் பிறக்கிறார் சிவமைந்தன் கார்த்திக்கேயன்.
சிவமைந்தன் கார்த்திக்கேயனைக் கொல்ல தாரகாசுரன் உள்ளிட்ட அசுரக் கூட்டமும், அவனைப் பாதுகாக்க சிவனும் பார்வதியும் களத்தில் நிற்கிறார்கள்.
