வையப்பமலை சுப்ரமணியசுவாமி கோயில்!
May 31, 2022, 02:10 PM IST
வையப்பமலையில் காட்சி அருளும் சுப்ரமணியசுவாமி குறித்து இங்கே காண்போம்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறு குன்றுடன் கூடிய பகுதிதான் இந்த வையப்பமலை. மலையின் பெயரே ஊருக்கும் அமைந்திருக்கிறது.
சமீபத்திய புகைப்படம்
இங்குதான் அழகிய திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறார் முருகப்பெருமான். படிகளில் ஏறும் முன் கீழே சன்னதி கொண்டுள்ள விநாயகப் பெருமானைத் தரிசிக்க வேண்டும். படிகளில் ஏறும் வழியில் சப்தகன்னியர் சன்னிதி அதனருகே உயர்த்திப் பிடித்த அரிவாளுடன் கருப்பண்ணசுவாமி, கொடிமரம் ஆகிய அமைப்புடன் அமைந்திருக்கிறது இந்த ஆலயம்.
மேலே கோயிலுக்குச் சென்றவுடன் சிவாலய காவலராக விளங்கும் வயிரவ மூர்த்தி, ஆதித்யாதி நவக்கிரகங்களின் தனிச்சன்னிதி தவிர மார்க்கண்டேயனின் உயிர்காக்க காலசம்ஹாரனாக வெளிப்பட்ட சிவபிரான் அமிர்தகடேஸ்வரர் என்கிற திருநாமத்துடன் லிங்கத் திருமேனியாகத் தரிசனம் அளிக்கிறார்.
இங்கு அம்பிகை அபிராமி வள்ளியாகச் சன்னதி கொண்டிருக்கிறார். இத்தனை சன்னதிகளையும் உடல் கொண்ட கோயிலின் மூலவராக விளங்குகிறார் ஸ்ரீ சுப்பிரமணியர். முருகனுக்கான விசேஷமாகச் சொல்லப்படும் 16 கோலங்களில் இந்த சுப்பிரமணியர் திருக்கோலமும் ஒன்று.
குமாரதந்திரம் மற்றும் ஸ்ரீ தத்துவ நிதி ஆகிய நூல்கள் பெருமானின் இந்த திருக்கோலத்தை மிகச் சிறப்பானதாகக் குறிப்பிடுகின்றன. மூலஸ்தானத்தில் இரண்டு கரத்தினராக இடையில் கையை ஊன்றியவராகக் காட்சி அளிக்கிறார் சுப்பிரமணியர்.
மங்கலங்கள் பெருகுதல், அறிவு, சாதுரியம், வெற்றி இவற்றைச் சுப்பிரமணியராக விளங்கும் முருகப்பெருமானை வழிபடுவதால் அவை அனைத்தும் நமக்கும் கிடைக்கின்றன என்கின்றன தத்துவங்கள்.