தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Udhayanidhi Meets M.k.alagiri Unity In The Karunanidhi Family Again

‘குடும்பம்னா குறை இருக்கும் தான்… ஆனா நமக்குனு இருக்கிறது ஒரே குடும்பம் தான்’

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 17, 2023 09:13 AM IST

Udhayanidhi Meets M.K.Alagiri: உதயநிதி தனது தந்தையை சந்தித்ததை பொங்கல் பண்டிகை என குறிப்பிட்டு ஹார்ட் போட்டு ட்விட் செய்துள்ளார் தயா அழகிரி. இதை வெறும் ட்விட்டாக நகர முடியாது; இணைப்பு தான் பொங்கல் பண்டிகை என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் தயா அழகிரி.

மதுரையில் மு.க.அழகிரி இல்லத்தில் அவரை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மதுரையில் மு.க.அழகிரி இல்லத்தில் அவரை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழக அரசியலில் இது புருவத்தை உயர்த்திப் பார்க்கும் சம்பவமாகவே அமைந்தது. மு.க.அழகிரியின் செயல்பாடுகளை சட்டமன்ற தேர்தலுக்கு முன், பின் என்று பிரிக்கலாம். திமுக தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்குப் பின், கட்சியை வழிநடத்தும் போட்டியில், அழகிரிக்கும், இன்றைய திமுக தலைவராகவும் முதல்வராகவும் உள்ள ஸ்டாலினுக்கும் போட்டி எழுந்தது.

உண்மையை சொல்ல வேண்டுமானால், கருணாநிதி மறைவுக்கு முன்பே, இந்த போர் தொடங்கிவிட்டது. ஆனால், அதில் வெற்றி பெற்றவர் ஸ்டாலின் தான். மதுரையை தவிர வேறு எங்கும் பெரிய அளவில் அழகிரிக்கு ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால், ஸ்டாலினை பெரும்பான்மை தொண்டர்கள் ஏற்றுக்கொண்டனர். சட்டமன்ற தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சியையும் பிடித்தது. ஸ்டாலின் முதல்வரானார்.

அதன் பின் மு.க.அழகிரி அமைதியானார். குடும்ப உறுப்பினர்கள் கூடி அவரை சமாதானப்படுத்தினார்கள் என்றும் கூறப்பட்டது. எது எப்படியே, ஸ்டாலின் எதிர்ப்பிலிருந்து அழகிரி பின்வாங்கினார். இணக்கமானாரா? என்பது புதிராகவே இருந்தது.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி நேற்று மதுரை வந்து, அழகிரியை சந்தித்தது பரபரப்பை உண்டாக்கியது. குடும்பமாக, அரசியலாக எல்லா விதத்திலும் இது ஒரு வித நெருக்கமாகவே பார்க்கப்படுகிறது.

‘குடும்பம்னா குறை இருக்கும் தான்… ஆனா நமக்குனு இருக்கிறது ஒரே குடும்பம் தான்’ என்கிற வசனத்தை சமீபத்தில் வெளியான வாரிசு படத்தில் விஜய் பேசியிருப்பார். அந்த வசனம் பிரபலமாகவும் ஆனது. உண்மையில் மதுரை அழகிரி இல்லத்தில் நேற்று நடந்த உதயநிதி சந்திப்பிற்கும், விஜய் பேசிய வாரிசு வசனத்திற்கும் நிறையவே சம்மந்தம் இருப்பதாக தோன்றுகிறது.

மனகசப்பில் ஒதுங்கி நிற்கும் அழகிரியை குடும்பத்தோடு இணைக்கும் பொறுப்பை, உதயநிதி ஏற்றிருக்கிறார் என்றே தெரிகிறது. இன்று கட்சியிலும், ஆட்சியிலும் முக்கிய பங்கு வகிக்கும் உதயநிதியின் இந்த சந்திப்பு, வெறுமனே குடும்பத்தோடு முடிக்க முடியாது; அதை தாண்டி அரசியலிலும் கவனிக்கப்பட வேண்டிய விசயம்.

உதயநிதி தனது தந்தையை சந்தித்ததை பொங்கல் பண்டிகை என குறிப்பிட்டு ஹார்ட் போட்டு ட்விட் செய்துள்ளார் தயா அழகிரி. இதை வெறும் ட்விட்டாக நகர முடியாது; இணைப்பு தான் பொங்கல் பண்டிகை என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் தயா அழகிரி. பிரிந்து நிற்கும் அழகிரி குடும்பம், கருணாநிதி வாரிசுகள் குடும்பத்தில் இணைந்து விட்டால், அதன் பின் திமுகவின் துணிவு அரசியலும் ஒரு படி மேலே நகரும் என்பதையும் மறுக்க முடியாது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்