தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Lsg Vs Rr Result: சாம்சன், துருவ் ஜுரல் அதிரடி! முதல் அணியாக ப்ளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்

LSG vs RR Result: சாம்சன், துருவ் ஜுரல் அதிரடி! முதல் அணியாக ப்ளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 27, 2024 11:15 PM IST

விக்கெட் சரிவை தடுத்து சஞ்சு சாம்சன் - துருவ் ஜுரல் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றியும் எளிதானது. தற்போது 16 புள்ளிகளை பெற்ற முதல் இடத்தில் இருப்பதுடன் முதல் அணியாக ப்ளேஆஃப் வாய்ப்பையும் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் சஞ்சு சாம்சன்
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் சஞ்சு சாம்சன் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த இரு அணிகளுக்கு இடையே இந்த சீசனில் நடைபெற்ற முதல் மோதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் என இரு அணிகளுக்கும் மாற்றம் எதுவும் செய்யவில்லை.

லக்னோ ரன் குவிப்பு

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 76, தீபக் ஹூடா 50 ரன்கள் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதான பங்களிப்பை அளிக்கவில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர்களில் சந்தீப் ஷர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ட்ரெண்ட் போல்ட், ஆவேஷ் கான், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங்

197 ரன்களை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் 19 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் அடித்துள்ளது. இதனால் 6 பந்துகள் மீதமிருக்க, 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியால்  16 புள்ளிகளை பெற்று ப்ளேஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 71, துருவ் ஜுரல் 52, ஜோஸ் பட்லர் 34, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்கள் எடுத்தனர்.

லக்னோ பவுலர்களில் யஷ் தாக்கூர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அமித் மிஷ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 

நல்ல தொடக்கம்

ராஜஸ்தான் ராயல்ஸ் ஓபனர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஜோஸ் பட்லர் ஆகியோர் நல்ல தொடக்கத்தை தந்தனர். முதல் விக்கெட்டுக்கு பவர்ப்ளே முடிவதற்குள்ளாகவே 60 ரன்கள் சேர்த்தனர். பட்லர் 18 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து யஷ் தாக்கூர் பந்தில் க்ளீன் போல்டு ஆகி வெளியேறினார்.

அவர் அவுட்டான அடுத்த ஓவரிலேயே 18 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்த ஜெய்ஸ்வால் சிக்ஸருக்கு முயற்சித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்

சாம்சன் - துருவ் ஜுரல் பார்ட்னர்ஷிப்

இம்பேக்ட் வீரராக நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய பார்மில் இருக்கும் ரியான் பிராக் 14 ரன்களில் அவுட்டானார். இதன் பின்னர் விக்கெட் சரிவை தடுக்கும் விதமாக சஞ்சு சாம்சன் - துருவ் ஜுரல் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.  முதலில் நங்கூரமிட்டு ஆடி வந்த இருவரும், பின்னர் அதிரடி மோடுக்கு மாறி கிடைத்த வாய்ப்புகளை பவுண்டரிகளாக ஆக்கினார்கள். 

அத்துடன் இவர்களின் கேட்சையும் லக்னோ வீரர்கள் டிராப் செய்ய அதை நன்கு பயன்படுத்தி ரன் குவிப்பிலும் ஈடுபட்டு அரைசதமடித்தார்கள். துருவ் ஜுரலுக்கு இது முதல் ஐபிஎல் அரைசதமாகும்.

சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் 71, துருவ் ஜுரல் 34 பந்துகளில் 52 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். 

IPL_Entry_Point