KKR vs PBKS Result: "Singh is king", ஐபிஎல்லில் அதிகபட்ச சேஸ் - வரலாற்று சாதனை புரிந்த பஞ்சாப்! ஈடன் கார்டனில் சரவெடி
கொல்கத்தா ஈடன் கார்டனில் திரும்பிய இடம்மெல்லாம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள் சரவெடி போல் வெடித்து ரன் வேட்டையில் ஈடுபட்டனர். ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது பஞ்சாப் கிங்ஸ்.
ஐபிஎல் 2024 தொடரின் 42வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 போட்டிகளில் 5 வெற்றியுடன் இரண்டாவது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் 8 போட்டிகளில் 2 வெற்றியுடன் 9வது இடத்தில் இருந்தது.
இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் துஷ்மந்தா சமிரா, பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
கொல்கத்தா அதிரடி
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் குவித்தது.
கொல்கத்தா அணியின் அதிகபட்சமாக பில் சால்ட் 75, சுனில் நரேன் 71, வெங்கடேஷ் ஐயர் 39, ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன்கள் அடித்தனர்.
பஞ்சாப் பவுலர்களில் அர்ஷ்தீப் ஷிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சாம் கரன், ஹர்ஷல் படேல், ராகுல் சஹார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்ததினர். ஸ்பின்னர் ராகுல் சஹார் தவிர மற்ற பவுலர்களின் பந்து வீச்சை கொல்கத்தா பேட்ஸ்மேன் அடித்து துவம்சம் செய்தனர்.
பஞ்சாப் பதிலடி
262 ரன்கள் எடுத்தால் வெற்றி என இதுவரை யாராலும் அடித்திராத மிக பெரிய இலக்கை விரட்டியது பஞ்சாப் கிங்ஸ். அதற்கு ஏற்ப முதல் ஓவரில் இருந்தே அதிரடியை வெளிப்படுத்த தொடங்கியது. இதனால் 18.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்து ஐபிஎல் வரலாற்றிலேயே மிக பெரிய சேஸிங்கை செய்து சாதனை புரிந்துள்ளது. 8 பந்துகள் மீதமிருக்க 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றியை பெற்றுள்ளது.
கொல்கத்தா பவுலர்களில் சுனில் நரேன் மட்டும் கட்டுக்கோப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
பேர்ஸ்டோ - பிரப்சிம்ரன் சிங் அதிரடி
சேஸ் செய்தால் வரலாற்று சாதனையாக அமையும் என்கிற இலக்கை விரட்ட ஆரம்பம் முதலே பேர்ஸ்டோ - பிர்ப்சிம்ரன் ஜோடி அதிரடி காட்ட தொடங்கினார்கள். கொல்கத்தா பவுலர்களில் ஈடன் கார்டனின் மூளை முடுக்குகளில் பவுண்டரி, சிக்ஸர்களை அடித்து விரட்டினர்.
அரைசதமடித்த பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள் அடித்து விட்டு அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 5.6 ஓவரில் 93 ரன்கள் என இருந்தது.
பேர்ஸ்டோ கலக்கல் பேட்டிங்
இந்த சீசனில் நிலையான பார்ம் இல்லாமல் தவித்து வந்த பேர்ஸ்டோ தனது இயல்பான பார்மை இந்த போட்டியில் மீட்டெடுத்தார். அதிரடியை தொடர்ந்த அவர் அரைசதத்தை கடந்து தொடர்ந்து ரன்குவிப்பில் ஈடுபட்டார். 45 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த அவர் 48 பந்துகளில் 8 பவுண்டரி, 9 சிக்ஸருடன் 108 ரன்கள் எடுத்தார்.
கடந்த இரு போட்டிகளில் சொதப்பிய ரில் ரோசவ் இந்த ஆட்டத்தில் தன் பங்குக்கு சிறிய கேமியோ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 16 பந்துகளில் 26 ரன்கள் அடித்தார்.
சஷாங்க் சிங் ருத்ரதாண்டவம்
இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் மீட்பாளராக இருந்து வரும் சஷாங்க் சிங் தனது பார்மை தொடர்ந்து அதிரடி காட்டினார். இதனால் பஞ்சாப் அணியை ஸ்கோர் வெற்றியை நோக்கி விரைவாக சென்றது. இவரது அதரிடியால் 8 பந்துகள் மீதமிருக்க பஞ்சாப் அணி டி20 வரலாற்றிலேயே அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை புரிந்தது.
சஷாங்க் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். தனது இன்னிங்ஸில் 8 சிக்ஸர்களை அவர் பற்ககவிட்டார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.