ADMK:‘ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டுக்கு எதிரே பால் காய்ச்சினார் சசிகலா!
“தாம் வசித்த போயஸ் கார்டன் பகுதியில் மீண்டும் குடியேறினால் தமது கையை விட்டு சென்ற அதிகாரம் மீண்டும் கிடைக்கும் என சசிகலா நினைக்கிறாராம்”
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான போயஸ்கார்டன் வேதா இல்லம் எதிரே கட்டிய புதுவீட்டில் சசிகலா பால் காய்ச்சி குடியேறி உள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனை அடுத்து பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்ட நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை ஆனார்.
ஜெயலலிதா உடன் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக போயஸ் கார்டனில் இருந்த வேதா நிலையம் இல்லத்தில் சசிகலா இருந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு பிறகு அது அரசுக்கட்டுப்பாட்டுக்கு சென்றது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்கிற்கு வேதா நிலையம் இல்லம் சென்றது.
இதனால் போயஸ் கார்டன் பகுதியிலேயே வேதா நிலையம் இல்லத்திற்கு எதிரிலேயே புதிய வீடு கட்டும் பணிகள் கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்தே நடந்து வந்தது.
சிறைவிடுதலைக்கு பிறகு நேரடி அரசியலில் சசிகலா உடனடியாக இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாக கூறி ஆன்மீக பயணம் கிளம்பினார்.
பின்னர் 2021ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது ஆதரவாளர்களை சந்தித்து வந்தார்.
பிரிந்து கிடக்கும் அதிமுகவை இணைப்பதே எனது நோக்கம் என்று கூறி அரசியல் பணிகளை சசிகலா மேற்கொண்டு வருகிறார். தாம் வசித்த போயஸ் கார்டன் பகுதியில் மீண்டும் குடியேறினால் தமது கையை விட்டு சென்ற அதிகாரம் மீண்டும் கிடைக்கும் என சசிகலா நினைக்கிறாராம்.
இதனை அடுத்து சுபமுகூர்த்த சுபதினமான இன்றைய தினம் போயஸ் கார்டனில் கட்டப்பட்டுள்ள புதிய இல்லத்தில் சசிகலா பால்காய்ச்சி குடியேறி உள்ளார்.