தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Erode East By Election: சீமானுக்கும் கமலுக்கும் இது தான் சரியான நேரம்!

Erode East By Election: சீமானுக்கும் கமலுக்கும் இது தான் சரியான நேரம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 19, 2023 12:11 PM IST

அவர்கள் இருவரும் போட்டியிட்டால் கண்டிப்பாக அவர்கள் தான் விஐபி வேட்பாளர்களாகவும் இருப்பார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கு ஏதாவது திட்டமிருந்து, அதற்காக இந்த தேர்தலை அவர்கள் சாதாரணமாக எடுக்க நினைத்தால், அது கண்டிப்பாக அவர்களுக்கு தான் பின்னடைவை தரும்.

மநீம தலைவர் கமல் மற்றும் நதக கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
மநீம தலைவர் கமல் மற்றும் நதக கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

ட்ரெண்டிங் செய்திகள்

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தான் ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. அதே போல அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தான் ஈரோடு கிழக்கு ஒதுக்கப்பட்டது.

இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தான் அந்த வாய்ப்பை திமுக வழங்கப் போகிறது என்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. காரணம், அவர்களின் கூட்டணி இன்னும் அதே நெருக்கத்துடன் இருக்கிறது. 

மற்றொரு புறம் அதிமுக கூட்டணியை பொருத்தவரை, அதிமுகவே இரண்டாக நிற்கிறது. ஒருவேளை அதிமுக போட்டியிட நினைத்தால் கூட இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்கிற பிரச்னை அவர்களுக்கு. அதனால் கட்டாயம் அந்த தொகுதியில் அதிமுக போட்டியிட வாய்ப்பே இல்லை. 

அதே நேரத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள், இன்னும் அதே கூட்டணியில் தான் இருக்கிறார்களா? என்கிற கேள்வியும் உள்ளது. பாமக கிட்டத்தட்ட அதிமுகவிற்கு நேர் எதிராக சென்று விட்டது என்பதை விட, திமுகவிற்கு நெருக்கத்தில் நிற்கிறது. 

அதிமுக-பாஜக வார்த்தைப் போர், உச்சத்தில் இருக்கிறது. ஓபிஎஸ் உடன் நெருக்கத்தில் இருக்கிறார் ஜி.கே.வாசன். ஆனாலும், அவர் இபிஎஸ் எதிர்ப்பில் இல்லை. இடைத்தேர்தல் அறிவிப்புக்குப் பின் இபிஎஸ்.,யை சந்தித்து வந்திருக்கிறார் வாசன். இது ஆதரவு திரட்டும் சந்திப்பு என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

திமுக மீதுசரமாறி குற்றச்சாட்டுகளை வீசி வரும் பாஜக, இந்த தேர்தலில் தன் பலத்தை காட்ட நினைக்கிறது. வெற்றி என்பதை கடந்து, தனித்து நின்று தனது வாக்குவங்கியை நிரூபிக்க முயற்சிக்கிறது பாஜக. அதனால் பாஜக தனி வேட்பாளரை நிறுத்த வாய்ப்பிருக்கிறது. 

ஆக, இந்த தேர்தலில் திமுகவும், அதிமுகவும் நேரடி வேட்பாளர்களை களமிறக்கப் போவதில்லை. கூட்டணி கட்சியினர் தான், களம் காணப் போகிறார்கள். இந்த நேரத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் ஆகியோர் நேரடியாக களம் கண்டால், கண்டிப்பாக அது அவர்களுக்கு பெரிய மாற்றத்தை தரலாம். 

அதிமுக சிதறிக்கிடக்கிறது, திமுக மீது விமர்சனங்கள் குவிந்துள்ளது. என்ன தான் இடைத்தேர்தலில் பணம் புழங்கினாலும், மக்கள் கொஞ்சம் விழிப்புணர்வை பெற்றிருக்கிறார்கள் என்கிற உண்மையும் இருக்கிறது. பணத்தை பெற்றாலும் ஓட்டு போடுவார்களா எனு்கிற் கேள்வியும், கடந்தகாலங்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டியிருக்கிறது.  இதை பயன்படுத்தி தங்கள் கட்சியின் முகமாக இருக்கும் சீமான் மற்றும் கமல் ஆகியோர் நேரடியாக களம் காணலாம். 

கடந்த தேர்தலில், அதே ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் 10 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் வாங்கியிருக்கிறார்கள். இது அதிமுக தோல்விக்கு காரணமான ஓட்டுகளை விட அதிகமாகும்.  இந்த தேர்தலில் வெற்றி காங்கிரஸ் கட்சிக்கா? தமாகவிற்கா? அல்லது பாஜகவிற்கா? என்று தான் வரப்போகிறது. 

இதனால், திமுக, அதிமுக பெரிய அளவில் ஆர்வம் காட்டாது. இதை பயன்படுத்தி நாம்தமிழர் கட்சியும், மக்கள் நீதி மய்யமும் களத்தில் இறங்கலாம். சட்டமன்றத்தில் தங்கள் கட்சியின் சார்பில் பிரதிநிதியை அனுப்ப , அதுவும் தலைவர்களான தாங்களே சட்டமன்றத்தில் நுழைய சீமானுக்கும் கமலுக்கும் இது நல்ல வாய்ப்பு. 

போதாக்குறைக்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தேர்தல் பணியாற்ற தொண்டர்களை இறக்கலாம். தங்கள் கொள்கையை திட்டங்களை மக்களிடம் நேரடியாக எடுத்துச் செல்லலாம். அவர்கள் இருவரும் போட்டியிட்டால் கண்டிப்பாக அவர்கள் தான் விஐபி வேட்பாளர்களாகவும் இருப்பார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கு ஏதாவது திட்டமிருந்து, அதற்காக இந்த தேர்தலை அவர்கள் சாதாரணமாக எடுக்க நினைத்தால், அது கண்டிப்பாக அவர்களுக்கு தான் பின்னடைவை தரும்.

இது மாதிரியான ஒரு நல்ல வாய்ப்பை, நாம் தமிழர் கட்சியும், மக்கள் நீதி மய்யமும் பயன்படுத்த தவறினால், அவர்களின் வருங்கால அரசியல், நிகழ்கால அரசியல் போன்றே இருக்கும். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்