Tamil News  /  Tamilnadu  /  Dindigul Goat Fight Permission Case Adjourned For Next Week By Madurai High Court
கிடா சண்டை போட்டி - கோப்புபடம்
கிடா சண்டை போட்டி - கோப்புபடம்

கிடா சண்டை போட்டிக்கு அனுமதி கிடைக்குமா? - வழக்கை ஒத்திவைத்தது ஐகோர்ட்!

30 January 2023, 17:16 ISTKarthikeyan S
30 January 2023, 17:16 IST

Goat Fight Event Case: கிடா முட்டு சண்டை போட்டி நடத்துவதற்கு அனுமதி கோரிய வழக்கை ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் அம்பை நாயக்கனூர் கிராமத்தில் கிடா முட்டு சண்டை போட்டி நடத்துவதற்கு அனுமதி கோரிய வழக்கை ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சவுக்கத் அலி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "திண்டுக்கல் மாவட்டம் அம்பை நாயக்கனூர் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக கிடா சண்டை போட்டி நடத்தி வருகிறோம். எங்கள் கிராமத்தில் நடைபெறும் கிடா சண்டை போட்டிக்கு மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிடாக்கள் பங்கேற்கும். அரசு விதித்துள்ள அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே போட்டி நடைபெறும். இங்கு எந்த விதமான சூதாட்டமும் நடைபெறாது.

தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை போன்று கிடா சண்டை போட்டியினை நடத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே நடத்தப்படுகிறது. இதற்கு அனுமதி கோரி அதிகாரியிடம் மனு அளித்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, 25.02.2023 அன்று காலை 08:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை கிடா சண்டை போட்டி நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும்." என அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில், கிடா சண்டை போட்டிக்கு அனுமதி வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் பெற்று தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், வழக்கினை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்