25 வயதில் திடீர் மாரடைப்பு: சுருண்டு விழுந்த இளம் மருத்துவர் மரணம்!
Young Doctor Dies: நண்பரின் துக்க நிகழ்வில் பங்கேற்றுவிட்டு சென்ற 25 வயதே ஆன இளம் மருத்துவர், திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, பல்லாவரத்தில் நண்பரின் துக்க நிகழ்வில் பங்கேற்றுவிட்டு சென்ற 25 வயதே ஆன பொள்ளாச்சியைச் சேர்ந்த இளம் மருத்துவர், திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் பாலாஜி நாராயணன். 25 வயதே ஆன இவர் ரஷ்யா சென்று மருத்துவம் படித்தார். தற்போது கோவாவில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் திலீப்குமார் என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
திலீப்பின் 30-ஆம் நாள் துக்க நிகழ்வில் பங்கேற்ப்பதற்காக நேற்று காலை சென்னை வந்த பாலாஜி நாராயணன், பல்லாவரத்தில் உள்ள நண்பரின் வீட்டுக்கு சென்று துக்கம் விசாரித்துள்ளார். துக்க நிகழ்ச்சியை முடித்து விட்டு மாலை விருகம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அடுக்குமாடி குடியிருப்பில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது பாலாஜி திடீரென மயக்கம் அடைந்து தரையில் சுருண்டு விழுந்தார்.
பதறிப்போன அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், இளம் மருத்துவர் பாலாஜி நாராயணனன் கடும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றிய தகவல் அறிந்த விருகம்பாக்கம் காவல்துறையினர், பாலாஜி நாராயணனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பரின் துக்க நிகழ்வில் பங்கேற்றுவிட்டு சென்ற இளம் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்தது அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாரடைப்பு:
மாரடைப்பு என்பது உயிருக்கு ஆபத்தான ஒரு மருத்துவ அவசரநிலை ஆகும், இதில் இதயத்துக்குப் போதுமான ரத்த ஓட்டம் இல்லாததால் உங்கள் இதய தசை பாதிப்படையத் தொடங்குகிறது. பொதுவாக உங்கள் இதயத்துக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் தமனிகளில் உண்டாகும் அடைப்பால் ஏற்படுகிறது. மாரடைப்பு நீடித்த இதய பாதிப்பை ஏற்படுத்தலாம். ஒரு சுகாதார நிபுணர் ரத்த ஓட்டத்தை விரைவாக மீட்டெடுக்கவில்லை என்றால் மரணம் ஏற்படலாம். மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளவர்கள் ஒரு இதய மருத்துவ நிபுணரிடம் பேசுவது முதல் படியாகும், ஏனெனில் அவர்கள் முடிந்தவரை பல ஆபத்து காரணிகளைக் குறைக்க, கட்டுப்படுத்த அல்லது தடுக்க உங்களுக்கு உதவ முடியும்.