RCB: இனி ஒவ்வொரு போட்டியும் நாக்அவுட் தான்! ப்ளே ஆஃப் வாய்ப்பை பெற ஆர்சிபி இதை செய்தால் மட்டும் போதும்
சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக கட்டாயமாக வென்றாக வேண்டிய போட்டியில் வெற்றியை பெற்று ப்ளேஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது ஆர்சிபி அணி. இனி அந்த அணி விளையாடும் ஒவ்வொரு போட்டியும் நாக்அவுட் போன்றே அமைந்துள்ளது. ஒரே தோல்வியை பெற்றாலும் ப்ளேஆஃப் வாய்ப்பை இழக்கும் முதல் அணியாக மாறிவிடும்.

ஐபிஎல் 2024 தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதோடு, அதிர்ஷ்டம் இல்லாத அணியாகவும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு இருந்து வருகிறது. இதையடுத்து 6 தொடர் தோல்விகளுக்கு பின்னர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 2 வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து கடைசி இடத்தில் இருந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணி ப்ளேஆஃப் சுற்றில் விளையாடும், இதில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணி குவாலிபயர் 1 போட்டியிலும், மூன்று மற்றும் நான்காவது இடத்தை பிடிக்கும் அணி எலிமினேட்டர் போட்டியிலும் விளையாடும். குவாலிபயர் 1 போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிபோட்டிக்கு தகுதி பெறும். எலிமினேட்டரில் வெற்றி பெறும் அணி குவாலிபயர் 1 போட்டியில் தோல்வியடையும் அணியுடன் குவாலிபயர் 2 போட்டியில் விளையாடும். இந்த போட்டியில் ஜெயிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
ஆர்சிபி அணியின் ப்ளேஆஃப் வாய்ப்பு
பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற குறைந்தது 7 போட்டிகளிலாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற நிலையில், இனி எஞ்சியிருக்கும் 5 போட்டிகளிலும் கண்டிப்பாக வென்றால் மட்டுமே ஆர்சிபி அந்த வாய்ப்பை பெற முடியும். அதில் முதல் இரண்டு இடங்களை கண்டிப்பாக பெற முடியாது. இருப்பினும் 3 அல்லது 4வது இடத்தை பிடித்து எலிமினேட்டர் போட்டியில் விளையாடலாம்.