தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ht Explainer : தொழிலாளர்களின் ‘உண்மை ஊதியம்’ 8 ஆண்டுகளாக உயரவில்லை என்ற அதிர்ச்சியை முன்வைக்கும் பொருளியல் வல்லுனர்கள்!

HT Explainer : தொழிலாளர்களின் ‘உண்மை ஊதியம்’ 8 ஆண்டுகளாக உயரவில்லை என்ற அதிர்ச்சியை முன்வைக்கும் பொருளியல் வல்லுனர்கள்!

Priyadarshini R HT Tamil
May 01, 2023 10:43 AM IST

May Day 2023 : கடந்த 8 ஆண்டுகளாக தொழிலாளர்களின் உண்மை ஊதியம் இந்தியாவில் அதிகரிக்கவில்லலை. நாட்டின் பொருளாதார கொள்கைகள் தொழிலாளர்களின் உண்மை ஊதியத்தை அதிகரிக்க வழிவகை செய்யவில்லை.

தொழிலாளர்கள் தினத்தில் உண்மை ஊதியம் உயர குரல் கொடுப்போம்
தொழிலாளர்கள் தினத்தில் உண்மை ஊதியம் உயர குரல் கொடுப்போம்

ட்ரெண்டிங் செய்திகள்

சமீபத்தில் வெளியான நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை 200 பக்கங்களுக்கு மேல் இருந்தாலும், தொழிலாளர்களின் ஊதியம் குறித்து எதுவும் பேசவில்லை. மத்திய நிதி அமைச்சரின் கடந்த மற்றும் இந்தாண்டுகளின் பட்ஜெட்களிலும் ஊதியம் குறித்தான பேச்சு பெருமளவில் இடம்பெறவில்லை. வேலையில்லா திண்டாட்டம் குறித்தே பொருளாதார கொள்கை குறிப்புகள் அதிகம் பேசுகின்றன.

குறைவான வேலை என்பது மட்டுமே ஏழை மக்களின் முக்கிய பிரச்னையாக உள்ளது. ஆனால், அதுகுறித்து பொருளாதார ஆய்வுகள் பெரும்பாலும் பேசுவதில்லை. தொழிலாளர்களின் உண்மை ஊதியம் உயரும்போதுதான் அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் உறுதி செய்யப்படும். உண்மை ஊதியம் உயரும்போது வறுமை ஒழிப்பிற்கு அது மிகப்பெரும் பங்காற்றும்.

பெரிய ஆய்வுகள் ஏதுமின்றி, வேளாண்துறை ஊழியர்களின் உண்மை ஊதியத்தை கிராமங்களுக்கு சென்று விசாரித்தாலே எளிதில் தெரிந்துகொள்ள முடியும் .

பல ஆண்டுகளாக தொழிலாளர் பணியகம் உண்மை ஊதியம் குறித்தான தகவல்களை சேகரித்து வந்தது. ரிசர்வ் வங்கி, தனது சமீபத்திய புள்ளி விவரக் குறிப்பில் 2014-15 - 2021-22, இடைப்பட்ட காலத்தில் தொழிலாளர் பணியகத்தின் உண்மை ஊதியம் குறித்தான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. ஆனால் 4 வேலை துறைகளில் உள்ள ஆண்களின் ஊதிய புள்ளிவிவரம் மட்டுமே வெளியாகியுள்ளது.

எனில் அத்துறைகளில் பெண்களின் நிலை? மற்ற துறைகளில் ஊதிய அளவு? என்ன என்பது தெரியவில்லை.

வேளாண்துறை, கட்டுமானத்துறை, வேளாண் துறை அல்லாத பிற துறைகள், தோட்டத்துறை சார்ந்த புள்ளிவிவரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் தோட்டத்துறையில், சில மாநிலங்களின் குறிப்பிட்ட சில தகவல்கள் மட்டுமே உள்ளது. அதை முழுமையாகவும் எடுத்துக் கொள்ள முடியாது.

2014-15 - 2021-22 இடைப்பட்ட காலத்தில் தொழிலாளர்களின் உண்மை ஊதியத்தின் வளர்ச்சி 1 சதவீதத்துக்கும் கீழ் தான் உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வேளாண்துறை - 0.9 சதவீதம், கட்டுமானத்துறை - 0.2 சதவீதம், வேளாண் துறை அல்லாத பிற துறைகள் - 0.3 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது.

அதிலும் கட்டுமான துறையில் தொழிலாளர்கள் பயன்படுத்தும் பொருட்களின் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிகழும் விலையேற்றத்தை கணக்கில் கொண்டால் வளர்ச்சி எதிர்திசையில் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

ரிசர்வ் வங்கி தனது ஆய்வை 2022உடன் நிறுத்திக் கொண்டாலும், சாம்பூ கதக் போன்ற நிபுணர்களின் மிகச் சமீபத்திய ஆய்வுகள் தொழிலாளர்களின் உண்மை ஊதியம் கடந்த 8 ஆண்டுகளாக தேக்கமடைந்துள்ளதைத் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன.

இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் தொழிலாளர்களின் உண்மை ஊதியம் தேக்கமடைந்துள்ளதாகக் கூறமுடியும்.

வேளாண்துறை தொழிலாளர்களின் ஊதியம், கர்நாடகா - 2.4 சதவீதம், ஆந்திரா - 2.7 சதவீதம், ஒரு வருடத்திற்கு என சற்று உயர்ந்திருந்தாலும், ஹரியானா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில், 2014-15 - 2021-22 இடைப்பட்ட காலத்தில் வேளாண் துறையில் தொழிலாளர்களின் உண்மை ஊதியம் குறைந்துள்ளது.

தொழிலாளர்களின் உண்மை ஊதியம் உரிய கவனம் பெற வேண்டும்.

அதற்கான அனைத்து துறை புள்ளி விவரங்கள் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு திரட்டப்பட வேண்டும்.

ஒரு நாட்டின், அதன் மக்களின் பொருளாதார வளர்ச்சி என்பது, தொழிலாளர்களின் உண்மை ஊதியத்தை உயர்த்துவதாக இருந்தால் மட்டுமே, அது தொழிலாளிகளின் நலனைக் காத்து வளர்ச்சி என்பதை அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியை உள்ளடக்கியதாக இருந்து, ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சியை உறுதிசெய்யும். எனவே அடுத்த பட்ஜெட்டிலாவது தொழிலாளர்களின் உண்மை ஊதியம் இடம்பெற்றால், அது சிறந்த துவக்கமாக இருக்கும். இந்த கருத்துக்கள் அனைத்தும் தமிழக அரசின் பொருளாதார நிபுணர் குழுவில் இடம்பெற்ற ஜீன் ட்ரீஸ் அவர்கள் தெரிவித்துள்ளவை.

தொழிலாளர்களின் உண்மை ஊதியம் பற்றி பேச மறுப்பது அரசின் மடமை என்பதை அரசு, தொழிலாளர் தினத்தில் உணர்ந்து செயல்பட்டால் தொழிலாளர் நலன் மேம்படும். நாடும் சிறந்த பொருளாதார வளர்ச்சியை தொழிலாளர்கள் துணையோடு அடையும். எனவே அரசு தொழிலாளர்கள் மீது போதிய அக்கறை செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர் மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார். தொழிலாளர் நலனே தேச நலன். இனிய மே தினம்!

IPL_Entry_Point

டாபிக்ஸ்