தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Hbd Charles Dickens: காத்துக் கிடந்த வாசகர்கள்..தன் எழுத்துக்களால் வாழும் 'இலக்கிய ஜாம்பவான்' சார்லஸ் டிக்கன்ஸ்!

HBD Charles Dickens: காத்துக் கிடந்த வாசகர்கள்..தன் எழுத்துக்களால் வாழும் 'இலக்கிய ஜாம்பவான்' சார்லஸ் டிக்கன்ஸ்!

Karthikeyan S HT Tamil
Feb 07, 2024 06:25 AM IST

உலகில் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவருமான சார்லஸ் டிக்கன்ஸ் (Charles Dickens) பிறந்த தினம் இன்று (பிப்.07). இந்த சிறப்பு நாளில் அவரைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ..!

ஆங்கில நாவல் ஆசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ் பிறந்தநாள் இன்று (பிப்.07)
ஆங்கில நாவல் ஆசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ் பிறந்தநாள் இன்று (பிப்.07) (Gettyimages)

ட்ரெண்டிங் செய்திகள்

படிப்பதில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்ட சார்லஸ் 4 வயதிலேயே அம்மாவிடம் புத்தகங்கள் படிக்கக் கற்றுக்கொண்டார். கையில் எது கிடைத்தாலும் படிப்பார். புத்தகம் வைத்திருக்கும் யாரைப் பார்த்தாலும், அவர்களிடம் இருந்து அந்த புத்தகத்தை எப்படியாவது வாங்கி படித்துவிடுவார். இவ்வாறு அவரது குழந்தை பருவம் நகரும் போது, வரவுக்கு மீறி செலவு செய்த தந்தை, கடனாளியாகி சிறை செல்ல நேர்ந்தது. அப்போது சார்லஸுக்கு வயது 12.

குடும்பம் வறுமையில் சிக்கியது. இவர் ஆர்வத்தோடு படித்த நூல்கள் மட்டுமல்லாது, இவரது படுக்கையைக்கூட விற்று சாப்பிடும் நிலைக்கு குடும்பம் தள்ளப்பட்டது. புத்தகங்கள் படிப்பதில் திறமையை வளர்த்துக்கொண்டாலும், குடும்பச் சூழ்நிலையால் தொடர்ந்து படிக்க முடியாமல் போக சிறு வயதிலேயே காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார் சார்லஸ். அந்த தொழிற்சாலையில், தான் சந்தித்த இன்னல்கள், பலவிதமான மனிதர்களின் விரக்தி குறித்து தினமும் இரவில் குட்டி டைரியில் எழுதி வந்தார். 

சிறுவயதிலேயே கதைகள் எழுதும் ஆர்வம் பெருக்கெடுத்தது. தந்தை விடுதலையான பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பள்ளியில் சேர்ந்தார். அங்கு சக மாணவர்கள் இவரைக் குற்றவாளியின் மகன் என கிண்டல் செய்தபோதிலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தனக்கு கிடைத்த அனுபவத்தை மட்டும் மறக்காமல் நாட்களை கடத்துகிறார்.

நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்தாலும் பின்னாட்களில் ஒரு வாரப் பத்திரிகையில் பிழை திருத்தும் பணியில் சேர்ந்தார். சிறுவயதிலேயே கதைகள் எழுதும் ஆர்வம் அதிகமிருந்ததால், தான் எழுதி வைத்திருந்த குறிப்புகளின் உதவியோடு சுவாரஸ்யமாக எழுதத் தொடங்கினார். பல அனுபவங்களைக் கொண்டு எழுதப்பட்ட இவரின் நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், என அனைத்தும் உலக அளவில் பிரபலமடைந்தன. 

16 வயதில் நாவல் எழுதத் தொடங்கிய டிக்கின்ஸ், 'பிக்விக் பேப்பர்ஸ்' என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள் எழுதினார். இவை பெரும் வரவேற்பைப் பெற்றன. ஆங்கில இலக்கிய உலகில் இவரது ஒரு கட்டுரைக்காகவே அடுத்த இதழ் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் இலக்கிய ரசிகர்களும், வாசகர்களும் காத்துக்கிடந்தது அதுவே முதல்முறை. உலகம் முழுவதும் பிரபலமானார்.

சொந்த அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இவரது மாஸ்டர் பீஸ் நாவலான 'ஆலிவர் ட்விஸ்ட்', இன்றும் உலக அளவில் போற்றப்படும் அற்புதப் படைப்பாகும். இதுதவிர ஏராளமான சமூக, வரலாற்று நாவல்கள், 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள் என இலக்கிய உலகில் கொடிகட்டி பறந்தார். இவரது அனைத்துப் படைப்புகளும் உலகம் முழுவதும் பிரபலமடைந்தன. எதைச் செய்தாலும் அதில் நேர்த்தி இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பார் சார்லஸ். அதற்காக ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பச் செய்யவும் அவர் தயங்கியதில்லை.

எழுதுவதன் மூலம் தான் சம்பாதித்த பணத்தை, குழந்தை தொழிலாளர்கள், பெண்களின் நலனுக்காக செலவிட்டார். எழுத்துலகில் பிதாமகான திகழ்ந்த சார்லஸ் டிக்கன்ஸ் தன்னுடைய 58-வது வயதில் (1870) மறைந்தார். இலக்கிய உலகில் ஜாம்பவனாக திகழ்ந்த டிக்கின்ஸ் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது எழுத்துக்கள் இன்னும் உயிர்ப்புடனே இருக்கின்றன. அவரது பிறந்தநாளான இன்று (பிப்.07) சார்லஸ் டிக்கின்ஸின் புகழ்பெற்ற நாவல்களையும், நூல்களையும் நினைவில் கொள்வோம்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்