Curry Masala : இந்த மல்டி பர்ப்பஸ் மசாலாப்பொடி மட்டும் போதும்! விதவிதமான வெஜ், நான் வெஜ் வறுவல்கள் செய்து அசத்தலாம்!
Multi Purpose Curry Masala : பொதுவாகவே இந்தப்பொடிக்கு தேவையான பொருட்களை வறுப்பதற்கும், இதைப்பயன்படுத்தி உணவுகள் செய்வதற்கு மண் அல்லது இரும்பு கடாயை பயன்படுத்தினால் அது சுவையை இன்னும் அதிகரிக்கும்.
எப்படியிருந்தாலும் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் அசைவ உணவுகள் செய்து சாப்பிடுபவர்களாக இருக்கிறோம். ஒரே மாதிரி மசாலவை எப்போது செய்து சாப்பிட்டாலும் அது பிடிக்காது. எனவே இந்த சிக்கன் மசாலாவை அரைத்து வைத்துக்கொண்டு, விதவிதமான் சிக்கன் டிஷ் செய்து அசத்தலாம்.
இந்த மசாலாப்பொடியை அரைத்து வைத்துக்கொண்டால் போதும். உங்களுக்கு ஓராண்டு வரும். இதை பயன்படுத்தி சிக்கன் செய்யும்போது சிக்கன் சுவை நிறைந்ததாவும் இருக்கும். குழம்பும் திக்காக இருக்கும். விரைவாகவும் செய்து முடித்துவிடலாம்.
இதை எந்த அசைவ உணவுக்கும் பயன்படுத்தலாம். சிக்கனுக்கு அதிக சுவை தரும். இதைப்பயன்படுத்தி உருளைக்கிழங்கு, சோயா, காளான் கூட வறுத்துக்கொள்ளலாம். இது ஒரு மல்டி பர்பபஸ் மசாலாதான்.
பொதுவாகவே இந்தப்பொடிக்கு தேவையான பொருட்களை வறுப்பதற்கும், இதைப்பயன்படுத்தி உணவுகள் செய்வதற்கு மண் அல்லது இரும்பு கடாயை பயன்படுத்தினால் அது சுவையை இன்னும் அதிகரிக்கும்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள அளவுகளில் செய்தால் ஓராண்டு வரை இதை வைத்துக்கொள்ளலாம். இதுபோல் அதிக அளவுகளில் செய்யும்போது, இந்தப்பொடியை ஒரு பெரிய காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைத்துவிடவேண்டும். அன்றாட தேவைக்கு ஒரு சிறிய டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். மொத்தமாக தினமும் திறந்து மூடினால், அதன் மணமும், சுவையும் மாறிவிடும்.
தேவையான பொருட்கள்
மல்லி விதைகள் – ஒரு கிலோ
விர மிளகாய் – கால் கிலோ
மிளகு – 50 கிராம்
சோம்பு – 50 கிராம்
சீரகம் – 50 கிராம்
அரிசி – 50 கிராம்
ஏலக்காய் – 50 கிராம்
கசகசா – 100 கிராம்
கறிவேப்பிலை – 5 கைப்பிடியளவு
மஞ்சள் தூள் – 50 கிராம்
பிரியாணி இலை – 20
ஸ்டார் சோம்பு – 10 கிராம்
பட்டை – 10 கிராம்
கிராம்பு – 10 கிராம்
மராத்தி மொக்கு – 10 கிராம்
கல் பாசி – 10 கிராம்
கல் உப்பு – தேவையான அளவு
செய்முறை
இரும்பு கடாயை சூடாக்கி ஒவ்வொன்றையும் தனித்தனியாக குறைவான தீயில் வறுக்க வேண்டும். வரமிளகாயை வறுக்கும்போது மட்டும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கடாயில் சூடு அதிகமானால், அடுப்பை அணைத்துவிட்டு சிறிது நேரம் ஆறியபின் மற்ற பொருட்களை சேர்த்து வறுக்க வேண்டும். கசகசாவை வறுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.
அனைத்து பொருட்களையும் வறுத்து ஒரு தாம்பூலத்தில் சேர்த்து வெயிலில் வைக்க வேண்டும். கல் உப்பையும் வறுத்து சேர்க்க வேண்டும்.
இதை மில்லில் அரைத்து பொடியாக்கி, நன்றாக ஆறவைத்து, ஒரு காற்றுப்புகாத பாத்திரத்தில் அடைத்துவைத்துக்கொண்டு ஓராண்டு வரை பயன்படுத்தலாம்.
நீங்கள் இதன் அளவுகளை குறைத்துக்கொண்டு, 6 மாதம், 3 மாதம், ஒரு மாதம் என எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் வரும் அளவுக்கு அரைத்துக்கொள்ளலாம்.
இதைப்பயன்படுத்தி நீங்கள் சிக்கன் செய்தால் அது மிகவும் சுவை நிறைந்ததாவும், எளிதாகவும் செய்யக்கூடிய வகையில் இருக்கும். எந்த அசைவ குழம்பு மற்றும் குருமாவுக்கும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம். இதை சிக்கன் மற்றும் மட்டன் என இரண்டுக்கும் உபயோகித்துக்கொள்ளலாம். இதை வான்கோழி, பன்றி இறைச்சி, மாட்டு இறைச்சி செய்யவும் பயன்படுத்திக்கொள்லாம். ஆனால் இதை மீன் செய்வதற்கு பயன்படுத்த முடியாது.
இதைப்பயன்படுத்தி சிக்கன் அல்லது மட்டன் மசாலா செய்வது எப்படி?
கறி – அரை கிலோ (மட்டன் அல்லது சிக்கன்)
பெரிய வெங்காய – 2 (நீளவாக்கில் நறுக்கியது)
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
தக்காளி – 1 (நறுக்கியது)
மிளகாய் பொடி – ஒரு ஸ்பூன்
மல்லிப் பொடி – 3 ஸ்பூன்
மஞ்சள் பொடி – கால் ஸ்பூன்
மல்டி பர்ப்பஸ் மசாலாப் பொடி – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய்ப் பால் அல்லது தேங்காய் அல்லது முந்திரி மசாலா – தேவையான அளவு
மிளகுத் தூள் – 3 சிட்டிகை
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
முழு கரம் மசாலா
கறிவேப்பிலை
மல்லித்தழை
செய்முறை
முழு கரம் மசாலா மற்றும் கறிவேப்பிலை தாளித்து, அதில் வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு மசாலா சேர்த்து வதக்கி கறியையும் சேர்த்து, மல்டி பர்ப்பஸ் மசாலாப் பொடி, மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு, தேங்காய்ப்பால் அல்லது தேங்காய் மசாலா ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக வேக வைத்து இறக்கி மல்லித்தூள், மிளகுத்தூள் தூவி முடிவைத்து சிறிது நேரம் கழித்து திறந்து கிளறினால் சூப்பரான சுவையில் மணமணக்கும் கறிக்குழம்பு தயார். இதை சாதம், பிரியாணி, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.