17 Years Of Koodal Nagar: பொருளாதார, சாதிய ஏற்றத்தாழ்வுகளை அம்பலப்படுத்தும் ‘கூடல் நகர்’
கூடல் நகர் திரைப்படம் வெளியாகி 17 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.
தமிழில் மிடில் கிளாஸ் கிராம மக்களின் கதையை தனது படங்கள் மூலம் பதிவு செய்யும் இயக்குநர் சீனு ராமசாமியின் முதல் படைப்பு, கூடல் நகர். இந்தப் படத்தில் பரத், பாவனா, சந்தியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். பரத், முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இப்படத்துக்கு ஏற்ற கச்சிதமான இசையை சபேஷ் - முரளி செய்திருந்தனர்.
கூடல் நகர் திரைப்படத்தின் கதை என்ன?: மதுரையின் புறநகர்ப் பகுதியான கூடல் நகரை கதைக்களமாகக் கொண்டு, இப்படம் நகர்கிறது. கூடல் நகரில் வசிக்கும் இரட்டையர்களில் சூரியன், நூலகத்தில் புத்தகத்தை இரவல் தரும் பணியில் உள்ளார். உள்ளூர் எம்.எல்.ஏவும் ரவுடியுமான நமச்சிவாயத்தின் மகள் மணிமேகலை ஒரு புத்தகப் பிரியை. அடிக்கடி, புத்தகத்தை மாற்ற நூலகத்திற்கு வரும்போது சூரியனுக்கும் மணிமேகலைக்கும் இடையே பழக்கமாகி,பின் காதல் ஆகிறது. இரட்டையர்களில் இன்னொருவர் சந்திரன். சூரியனின் தம்பி. பிணவறை உதவியாளர் ஆகவுள்ளார். எம்.எல்.ஏ.நமச்சிவாயத்தின் தேர்தல் பரப்புரைக்கு உதவக்கூடியவர். சந்திரன், தமிழ்ச்செல்வி என்ற பெண்ணுடன் காதலில் விழுகிறார். பின் இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கின்றனர்.
சுமுகமாக சென்றுகொண்டு இருந்த சூரியன் மற்றும் சந்திரனின் வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்குகிறது. மகள் மணிமேகலையின் காதல் விவகாரம், எம்.எல்.ஏ நமச்சிவாயத்துக்கு தெரியவந்து, சூரியனை கொல்ல அடியாட்களை ஏவுகிறார். ஆனால், உருவ ஒற்றுமையில் குழம்பிப்போன அந்த ரவுடி கும்பல், சந்திரனை தாக்குகிறது. நிலைமையின் வீரியத்தை உணர்ந்த சந்திரன், மணிமேகலையிடம் சென்று தனது அண்ணன் சூரியனை மறக்கும்படி கெஞ்சுகிறார்.
ஆனால், சூரியனும் மணிமேகலையும் ஊரை விட்டு ஓடிப்போக திட்டமிட்டு பஸ் ஏறச் செல்கின்றனர். அப்போது, நமச்சிவாயத்தின் தொண்டர்கள், சூரியனைக் கொன்றுவிட்டு, மணிமேகலையை அழைத்துக்கொண்டு வீட்டிற்குச் செல்கின்றனர்.
இதைப்பற்றி எதனையும் அறியாத சந்திரன், பிணவறைக்கு வரும் தனது சகோதரனின் சவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து கதறுகிறான். தனது சகோதரனின் சாவுக்குக் காரணமான, நமச்சிவாயத்தை யாருமில்லா நேரம் பார்த்து கொல்ல நினைக்கிறார், சந்திரன். அதன்பின், நமச்சிவாயம் இருக்கும் இடத்துக்குச் செல்லும் சந்திரன், அப்போது ஆட்கள் இருப்பதை அறிந்து, தனது அரசியல் எதிரிகள், தன்னுடைய அண்ணனைக் கொன்றுவிட்டதாக கதறிவிட்டுச் செல்கிறான், சந்திரன்.
அடுத்த நாள் மணிமேகலையும் தன் உயிரை மாய்த்துக்கொள்கிறார். இறுதிவரை நல்லவர் போல் நடிக்கும் சந்திரன், சூரியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிணவறைக்குச் செல்கிறார். அப்போது தமிழ்ச்செல்வி பிணவறையின் கதவைத் தாழிடுகிறார். இறுதியில் பிணம்போல் படுத்துக்கிடக்கும் சந்திரன், நமச்சிவாயத்தைக் கொல்கிறார். அங்கிருந்த ரவுடிகளை பொதுமக்கள் அடித்து விரட்டுகின்றனர்.அதன்பின்னர், சந்திரன் மற்றும் தமிழ்ச்செல்வி ஆகிய இருவர் கைதாவதாக படம் முடிகிறது.
படத்தில் சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரட்டை வேடங்களில் பரத் நடித்துள்ளார். மணிமேகலையாக பாவனாவும், தமிழ்ச்செல்வியாக சந்தியாவும் நடித்துள்ளனர். எம்.எல்.ஏ. நமச்சிவாயமாக மகாதேவன் நடித்துள்ளார். தவிர, இளவரசு, மீரா கிருஷ்ணன், மனோ பாலா, பெரிய கருப்புத்தேவர், தேனி முருகன் ஆகியோரும் சிறுசிறுவேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கான இசையினை சபேஷ் - முரளி செய்திருந்தனர். இப்படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ‘தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வி என்ன உனக்குத் தருவேன்’ என்னும் பாடல் பலரின் ஆல்டைம் ஃபேவரைட்டாக இருக்கிறது.
இப்படத்தில் தான், முதன்முதலில் நடிகை சந்தியா கமிட் ஆனதாகக் கூறப்படுகிறது. ஆனால், இப்படத்தின் தயாரிப்புப் பணிகளில் ஏற்பட்ட தொய்வு காரணமாக, சந்தியா இரண்டாவதாக கமிட் ஆன ’காதல்’ படம் முதலில் ரிலீஸாகி, தற்போது வரை ’காதல் சந்தியா’ என அறியப்படுகிறார்.
பொருளாதார ஏற்றத்தாழ்வினை, சாதியக் கூறுகளை உள்ளது உள்ளபடி காட்டிய படம், கூடல் நகர். படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆனாலும், அதனை இப்போது டிவியில் போட்டாலும் பார்க்கலாம்.
டாபிக்ஸ்