TM Krishna Issue: 'கர்நாடக இசையில் சாதியத்தை ஒழிக்க நினைக்கிறார்' - டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஆதரவுக்குரல் கொடுத்த சின்மயி!
TM Krishna Issue: டி.எம்.கிருஷ்ணா சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வானதில் இருந்து இசைத் துறையினர் பலர் அவருக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், சின்மயி ஆதரவு தெரிவிக்கிறார்.

TM Krishna Issue: கர்நாடக இசைத்துறையில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி விருது’ வழங்க அறிவிப்பு வெளியானநிலையில், பலர் அவருக்கு எதிராக எதிர்ப்புக் குரல் கொடுத்தநிலையில், பின்னணிப் பாடகர் சின்மயி, டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
கர்நாடக இசை உலகில் மிக உயரிய விருதாக, ‘சங்கீத கலாநிதி விருது’ கருதப்படுகிறது. சென்னை மியூஸிக் அகாடமி சார்பில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு, கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு, ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்குவோம் என சென்னை மியூஸிக் அகாடமி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
டி.எம்.கிருஷ்ணா என்று அழைக்கப்படும் தொடூர் மடபுசி கிருஷ்ணா, கலை மற்றும் இசைத் துறையில் பல சாதனைகளை செய்துள்ளார். கர்நாடக இசைப்பாடகர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் என பல திறமைகளைக் கொண்டவர்.
இந்நிலையில் கடவுள் மறுப்பாளரும் பகுத்தறிவுவாதியுமான பெரியார் ஈ.வே.ராமசாமியை புகழ்ந்து, கர்நாடக இசையில் பாடிய, டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு, கர்நாடக இசைக்கலைஞர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், சமீபத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பலரும் கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
இதுதொடர்பாக டி.எம்.கிருஷ்ணா சமீபத்தில் அளித்த பேட்டியில், கர்நாடக இசை உலகில் சாதி தான் ஆதிக்கம் செலுத்துகிறது என்று வெளிப்படையாகப் பேசினார். அதேபோல், கர்நாடக இசைக்கச்சேரிகளில் பயன்படுத்தப்படும் மிருதங்கத்தில் இந்துக்கள் தெய்வமாக வணங்கும் மாட்டின் தோல் தான் பயன்படுத்தப்படுகிறது என்றும் விளக்கமாகப் பேசினார். இதனால் இந்த விளக்கம், கர்நாடக இசை உலகில் இன்னும் புகைச்சலைக் கிளப்பிக் கொண்டு இருக்கிறது.
டி.எம். கிருஷ்ணாவுக்கு ’சங்கீத கலாநிதி விருது’ வழங்க ’மெட்ராஸ் மியூசிக் அகாடமி’ அறிவித்த நிலையில், திரையுலகில் இருக்கும் பாடகர்களும் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்திய திரைப் பின்னணி பாடகி சின்மயி, பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஆதரவாக, சமூக வலைதளத்தில், கருத்து பதிவிட்டிருந்தார்.
கர்நாடக இசைத்துறையில் உள்ள பாடகர்களில் டி.எம்.கிருஷ்ணா சாதிக்கு எதிரானவர் என்று திரைப் பின்னணிப் பாடகர் சின்மயி கூறுகிறார்.
இதுதொடர்பாக சின்மயி வெளியிட்ட பதிவில், "கர்நாடக இசைக் கலைஞர்கள் தங்கள் தனிப்பட்ட பிரச்னைகளையும், கர்நாடக இசையுடன் தொடர்புடைய பொதுவான சாதி வெறியைத் தகர்த்தெறிய கூறுவதால், டி.எம்.கிருஷ்ணா மீதும் தனிப்பட்ட வெறுப்புடன் இருக்கின்றனர். அதனை இந்த விவகாரத்தில் கலக்கிறார்கள்.
கர்நாடக இசைக்கலைஞர்கள், கர்நாடக இசையின் வாயிற்காவலர்களாக இருக்க விரும்புகிறார்கள். ஒரு குறிப்பிட்ட சாதி மற்றும் சமூகம் அதாவது பிராமண சமூகம் மட்டுமே கர்நாடக இசையை உறுதியுடன் பயிற்சி செய்ய வேண்டும் என்று அவர்கள் சொல்ல விரும்புகிறார்கள்.
பிராமண சமூகம் தான், கர்நாடக இசைக்கு தொண்டாற்றி வருகிறது என்பதல்ல. தேவதாசி சமூகத்திடமிருந்து கர்நாடக இசையினை கடத்தி வந்து, பக்தியுடன் இருக்கும் பிராமண சமூகத்தைத் தவிர வேறு யாரும் இதைச் செய்ய முடியாது என்று கூறி, பிற சாதியினர் இத்துறையில் உள்ளே வராத வகையில் வாயிற்காவலர்கள்போல் செயலாற்றிப் பார்த்துக்கொண்டனர். எனவே, கர்நாடக இசையை கற்பிப்பதற்கும் அதனைக் கற்றுக்கொள்வதற்கும் பல தடைகள் உள்ளன.
எனவே, இந்த பிராமண சமூகம் குறித்தும், சாதி ஒழிப்பு குறித்தும், சாதிய வெறி குறித்தும், உடன் வரும் பிற சக கலைஞர்களை நடத்தும் விதம் குறித்தும், பிற சமூகங்களைச் சேர்ந்த கலைஞர்களுக்கு இழைக்கப்படும் கீழ்த்தரமான நடத்தைகள் குறித்தும் குரல் கொடுத்தவர்களில் டி.எம்.கிருஷ்ணாவும் ஒருவர். சில வருடங்களாக அவர் இதைச் செய்து வருகிறார்" என்றார்.
மேலும் மீ டூ குற்றச்சாட்டுகள் குறித்து கர்நாடக இசைக் கலைஞர்கள் மௌனம் சாதிப்பதாகவும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களை அவமானப்படுத்துவதாகவும் மீ டு குற்றச்சாட்டுகளை வெளியில் அம்பலப்படுத்தி வரும் திரைப் பின்னணிப் பாடகி சின்மயி சாடினார்.
திரைப் பின்னணிப் பாடகி சின்மயி, சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழில் கவிஞராக இருக்கும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதன்பின், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மணிரத்னம் ஆகியோர், வைரமுத்துவை தன் படங்களில் பாடல் எழுதப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்