தமிழ் செய்திகள்  /  Elections  /  Lok Sabha Election 2024: Aiadmk Has Fielded Actress Gautami To Compete With Actor Kamal Haasan

Kamal Hassan Vs Gautami: கமலை இறக்கிய திமுக.. அடுத்த நொடியே கௌதமியை இறக்கும் அதிமுக!

Kathiravan V HT Tamil
Mar 30, 2024 02:42 PM IST

”நடிகர் கமல்ஹானுக்கு போட்டியாக நடிகை கௌதமியை தேர்தல் பிரச்சார களத்தில் அதிமுக இறக்கி உள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஏப்ரல் 4ஆம் தேதி அன்று தென் சென்னையில் நடிகை கௌதமி தனது பரப்புரையை தொடங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது”

நடிகர் கமல்ஹாசன் - நடிகை கௌதமி
நடிகர் கமல்ஹாசன் - நடிகை கௌதமி

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று கடைசிநாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

மக்கள் நீதி மய்யம்

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் தனித்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியானது, நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு முழு ஆதரவை வழங்கி உள்ளது. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் கையெழுத்திட்டுள்ளார். 

நடிகர் கமல்ஹாசன் பரப்புரை!

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையை நடிகர் கமல்ஹாசன் நேற்றைய தினம் (மார்ச் 29) ஈரோட்டில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார். திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார். 

அரசியலும், மதமும் கலந்தால் நாடு உருப்படாமல் போகும் என்பதற்கு ஐரோப்பா கண்டமே உதாரணம். அதற்கு பிறகு அவர்கள் அரசியலும், மதமும் கலக்க கூடாது என்ற முடிவை எடுத்தனர். மதிய உணவுத்திட்டம், காலை உணவுத்திட்டம், இல்லத்தரசிகளுக்கு ஊதியம் ஆகிய திட்டங்கள் இங்கு செயல்படுத்தப்படுகின்றன. மதிய உணவு மற்றும் காலை உணவுத் திட்டத்தை ஏன் வடநாட்டில் செய்யவில்லை, இங்கு 29 பைசாவை வைத்துக் கொண்டு இதை செய்கிறோம். ஆனால் நீங்கள் தமிழ்நாட்டுக்கு தரும் 29 பைசாவை எப்படி 20 பைசாவாக ஆக்கலாம் என்று யோசிக்காதீர்கள். 

நம் பிள்ளைகள் நாளை கல்வி கற்றவர்களாக மாற காலை உணவு தரும் அரசு வேண்டுமா? இல்லை நுழைவுத் தேர்வை கஷ்டம் ஆக்கி படித்தவனையே படிக்காதவன் ஆக்கும் அரசு வேண்டுமா?

பெண்களுக்கு உதவி தொகை தரும் அரசு வேண்டுமா? இல்லை பில்கிஸ் பானு குற்றவாளிகளை நடமாடவிடும் அரசு தேவையா? 

விவசாயம் காக்கும் அரசு வேண்டுமா? அல்லது விவசாயிகள் மீது போர்த்தொடுக்கும் அரசு வேண்டுமா? என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்று கமல்ஹாசன் பேசினார். 

கமலுக்கு போட்டியாக களத்தில் குதித்த கௌதமி!

இன்றைய தினம் சேலத்திலும் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி திருச்சி, ஏப்ரல் 3ஆம் தேதி சிதம்பரம், ஏப்ரல் 6ஆம் தேதி சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஏப்ரல் 7ஆம் தேதி சென்னை, ஏப்ரல் 10ஆம் தேதி மதுரை,  ஏப்ரல் 11ஆம் தேதி தூத்துக்குடி, ஏப்ரல் 14 ஆம் தேதி திருப்பூர், ஏப்ரல் 15ஆம் தேதி கோவை, ஏப்ரல் 16ஆம் தேதி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் நடிகர் கமல்ஹானுக்கு போட்டியாக நடிகை கௌதமியை தேர்தல் பிரச்சார களத்தில் அதிமுக இறக்கி உள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஏப்ரல் 4ஆம் தேதி அன்று தென் சென்னையில் நடிகை கௌதமி தனது பரப்புரையை தொடங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 5ஆம் தேதி வட சென்னையிலும், ஏப்ரல் 7ஆம் தேதி கோவை, ஏப்ரல் 8ஆம் தேதி திருப்பூர், ஏப்ரல் 9ஆம் தேதி பொள்ளாச்சி, ஏப்ரல் 10ஆம் தேதி நீலகிரி, ஏப்ரல் 12ஆம் தேதி திருச்சி, ஏப்ரல் 13ஆம் தேதி கரூர், ஏப்ரல் 14ஆம் தேதி நாமக்கல், ஏப்ரல் 15ஆம் தேதி சேலம் ஆகிய தொகுதிகளில் பரப்புரை செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

WhatsApp channel