Lok Sabha Election 2024: ‘மோடி உடன் கைக்கோர்க்கும் நவீன்!’ தேசிய அரசியலில் அடுத்த ட்விஸ்ட்! ஒடிசா அரசியலில் திருப்பம்!
”சட்டமன்றத் தேர்தல் கூட்டணி பிஜு ஜனதாதளத்திற்கு ஆதரவாகவும், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியை பாஜகவுக்கு ஆதரவாகவும் அமைக்கும்படி கூட்டணி கணக்குகள் இருக்கலாம் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது ”

ஒடிசாவில் நாடாளுமன்றத்தேர்தல் உடன் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி உடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த புதிய கூட்டணிக்கான முயற்சி தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் இல்லமான நவீன் நிவாஸில் பிஜு ஜனதா தள தலைவர்கள் ஒரு நீண்ட கூட்டத்தை நடத்தினர். அதே நேரத்தில் பாஜக தலைவர்கள் தேசிய தலைநகரில் இதேபோன்ற அமர்வை நடத்தி, கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு உட்பட தேர்தல் தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.
மூன்று மணி நேரத்திற்கும் மேலான விவாதங்களுக்குப் பிறகு, பிஜு ஜனதா தளம் துணைத் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான தேபி பிரசாத் மிஸ்ரா பாஜகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை ஒப்புக் கொண்டார். ஆனால் அதன் உருவாக்கத்தை வெளிப்படையாக உறுதிப்படுத்துவதைத் தவிர்த்தார். செய்தியாளர்களிடம் பேசிய மிஸ்ரா, "ஒடிசா மக்களின் நலன்களுக்கு பிஜு ஜனதா தளம் முன்னுரிமை அளிக்கும். ஆம், கூட்டணி விவகாரம் குறித்து விவாதங்கள் நடந்தன என கூறி உள்ளார்.