HT Election SPL: வாகை சூடப்போவது யார்?..முந்தும் வேட்பாளர் யார்? - திருநெல்வேலி மக்களவை தொகுதி கள நிலவரம்!
Tirunelveli Lok Sabha constituency: மக்களவைத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் தற்போதைய கள நிலவரம் பற்றி பார்ப்போம்.

Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், ஒவ்வொரு தொகுதியின் களநிலவரம், வேட்பாளர்கள் பற்றி விவரங்களை நாம் பகிர்ந்து வருகிறோம். அந்த வகையில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் தற்போதைய கள நிலவரம் பற்றி பார்ப்போம்.
நான்கு முனை போட்டி
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாக கருதப்படும் நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வரும் 19 ஆம் தேதியன்று வாக்குப்பதிவை எதிர்நோக்கும் தமிழகத்தை பொருத்தவரை பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளிலும் அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் மீதியுள்ள 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிக 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ தலா 1 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. மீதமுள்ள 33 தொகுதிகளில் அதிமுக தங்கள் கட்சி வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. பாஜக 19 தொகுதிகளிலும், பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறது.
திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி
வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஓடும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், திருநெல்வேலி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. சுருக்கமாக நெல்லை என அழைக்கப்படும் இத்தொகுதியில் இதுவரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில், அதிமுக 7 முறையும், காங்கிரஸ் 5 முறையும், 3 முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. சுதந்திரா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.