Actor Sivakumar: ’விசிக வேட்பாளருக்கு வெளிப்படை ஆதரவு!’ நடிகர் சூர்யாவின் தந்தை சிவக்குமார் அதிரடி முடிவு!
”ஜெய்பீம் திரைப்படம் வெளிவந்தபோது வன்னியர் சமூகத்தை தவறாக சித்தரித்ததாக கூறி நடிகர் சூர்யாவை கண்டித்து பாமக கண்டன அறிக்கை வெளியிட்டதுடன், சூர்யாவை கண்டித்து போராட்டங்களையும் பாமகவினர் நடத்தி இருந்தனர்”

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாருக்கு, நடிகர் சிவக்குமார் வெளிப்படையான ஆதரவு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கி மார்ச் 27 ஆம் தேதி முடிவடைந்தது. மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
திமுக-விசிக கூட்டணி
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இது மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த முறை போட்டியிடுகிறது.