தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ’நெருங்கும் புயல்! கடலூரில் நாளை விடுமுறை! ஐசியூவில் ஈவிகேஸ்!’ டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: ’நெருங்கும் புயல்! கடலூரில் நாளை விடுமுறை! ஐசியூவில் ஈவிகேஸ்!’ டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil

Nov 28, 2024, 07:25 PM IST

google News
பெகல் புயல் எச்சரிக்கை, தமிழ்நாட்டில் ரெட் அலார்ட், ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி, கோயில் யானைகள் முன் புகைப்படம் எடுக்க தடை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
பெகல் புயல் எச்சரிக்கை, தமிழ்நாட்டில் ரெட் அலார்ட், ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி, கோயில் யானைகள் முன் புகைப்படம் எடுக்க தடை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

பெகல் புயல் எச்சரிக்கை, தமிழ்நாட்டில் ரெட் அலார்ட், ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி, கோயில் யானைகள் முன் புகைப்படம் எடுக்க தடை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

1.நாளை ரெட் அலார்ட்!

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் நாளை (நவ.29) அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகி உள்ள புயல் ஆனவது வரும் நவம்பர் 30ஆம் தேதி கரையை கடக்கும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. 

2.கடலூரில் நாளை விடுமுறை 

கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 29) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

3.கோயில் யானைகளுடன் புகைப்படம் எடுக்க தடை!

கோயில் யானைகளை புகைப்படம் எடுப்பது, அவற்றுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வது போன்ற செயல்பாடுகளை தவிர்க்க கோயில் நிர்வாகங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தி உள்ளது. சமீபத்தில் திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி பாகன் உட்பட 2 பேர் உயிரிழந்த நிலையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. 

4.ஈவிகேஎஸ் இளங்கோவனை நலம் விசாரித்த முதல்வர்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். நுரையீரல் சளி காரணமாக ஏற்பட்ட மூச்சுத் திணறலால் தீவிர சிகிச்சை பிரிவில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

5.போர் நினைவு சதுக்கத்தில் ஜனாதிபதி அஞ்சலி.

நீலகிரி, குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெறும் முப்படை அதிகாரிகளிடையே உரையாற்ற வருகை தந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, போர் நினைவு சதுக்கத்தில் அஞ்சலி செலுத்தினார்.

6.பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வினா

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி சலுகைகளை வழங்கியதற்காக நான்கு தரப்பினரிடமிருந்து கையூட்டாக பெறப்பட்ட ரூ.11.70 லட்சம் பணத்துடன் கையூட்டு தடுப்புப் பிரிவினரால் கையும், களவுமாக பிடிக்கப்பட்ட ஊட்டி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷாவை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு பதிலாக அவரை திருநெல்வேலி மாநகராட்சியின் உதவி ஆணையராக நியமித்து தமிழக அரசு ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக வெகுமதி வழங்குவது கண்டிக்கத்தக்கது.

7.ஜனவரியில் குரூப்-4 பணியிடங்களுக்கு கலந்தாய்வு

குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு ஜனவரி மாதம் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது. அரசுப் பணிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வு ஜூன் 9 இல் நடத்தப்பட்டது. குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு முடிவு அக்டோபர் 28 ஆம் தேதி வெளியானது. சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்ததும் ஜனவரி மாதம் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

8.திறனாய்வுத் தேர்வு அறிவிப்பு 

அரசுப் பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான "தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு வரும் ஜனவரி 25ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 1000 மாணாக்கர்கள் (500மாணவர்கள், 500 மாணவியர்கள்) தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகையாக மாதம் 1000 வழக்கப்படும்.

9.பாம்பன் ரயில் பால தரத்தை உறுதி செய்க

பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரத்தை முழுமையாக உறுதி செய்த பின்னரே திறக்க வேண்டும் என ஒன்றிய ரயில்வே துறை அமைச்சருக்கு நவாஸ்கனி எம்.பி. கடிதம் எழுதி உள்ளார். 

10. இழப்பீடு வழங்கிய அமைச்சர்

மாமல்லபுரம் அடுத்த பண்டிதமேடு பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்த 5 பேருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிவாரணத் தொகைக்கான காசோலையை (தலா 2 லட்சம்) அவர்களது குடும்பத்தாரிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி