TOP 10 NEWS: ’வாரிசு அரசியலை சாடும் வானதி முதல் பதிலடி தருவேன் என சொல்லும் உதயநிதி வரை!’ டாப் 10 நியூஸ்!
Sep 29, 2024, 02:07 PM IST
TOP 10 NEWS: புதிய அமைச்சர்கள் இன்று பொறுப்பேற்பு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி, வாரிசு அரசியலை சாடும் வானதி, தமிழக மீனவர்கள் கைது உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ…!
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
1.புதிய அமைச்சர்கள் இன்று பொறுப்பேற்பு
புதியதாக நியமிக்கப்பட்டுள்ள 4அமைச்சர்கள் இன்று மாலை ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்கும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து.
2.செயல்பாடுகள் மூலம் பதிலடி தருவேன்
துணை முதலமைச்சர் ஆக அறிவிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், அண்ணா, கருணாநிதி, பெரியார் நினைவிடங்களில் மரியாதை, விமர்சனங்களுக்கு தனது பணி மூலம் பதிலடி தருவேன் என பேட்டி.
3.வாரிசு அரசியல்தான் திராவிட மாடல்
வாரிசு மற்றும் ஊழல் அரசியலே திராவிட மாடல் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சனம்.
4.பாஜக மீது சேகர்பாபு விமர்சனம்
அடுத்த கால் நூற்றாண்டு காலம் திமுகவையும், மக்கள் நலனையும் தோளில் சுமக்க உள்ளார் உதயநிதி. மக்களிடம் செல்லாக்காசாகி விட்ட பாஜகவின் கூற்றுக்கு செவிசாய்க்க விரும்பவில்லை. தகுதி இல்லாத கட்சி என்பதாலேயே மக்கள் பாஜகவிற்கு தோல்வியை பரிசாக தந்து உள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்.
5.தமிழக மீனவர்கள் 17 பேர் கைது
நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்து உள்ளது. மீனவர்களை விடுவிக்க கோரி மீனவர்கள் குடும்பத்தினர் போராட்டம்.
6.13 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்.
7. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நடவடிக்கை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் என்கிற மொட்டை கிருஷ்ணனை வழக்கறிஞர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவு. தமிழ்நாடு போலீசார் அளித்த புகாரின் அடிப்படையில் பார் கவுன்சில் நடவடிக்கை.
8. திமுகவுக்கு அதிமுக கண்டனம்
மத்திய அரசு உத்தேசித்து உள்ள வஃக்பு வாரிய திருத்த சட்டமசோதா குறித்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு பெரும்பாலான இஸ்லாமியர் நலம் காக்கும் அமைப்புகளை அழைக்காமல் திரு. ஸ்டாலினின் திமுக அரசு புறக்கணித்துள்ளது இஸ்லாமிய மக்களுக்கு செய்துள்ள துரோகமாகும். இந்த அரசின் ஓர வஞ்சனை செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கருத்துக்களை நாடாளுமன்றக் கூட்டுக்குழு கூட்டத்தில் எடுத்துரைக்க வாய்ப்பளிக்காத திரு. ஸ்டாலினின் திமுக அரசிற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் என ஈபிஎஸ் அறிக்கை.
9. அமைச்சரவை மாற்றம் குறித்து மருத்துவர் ராமதாஸ் கருத்து
தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புதல்வர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.இராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக செந்தில் பாலாஜி, முனைவர் கோவி.செழியன், பனைமரத்துப்பட்டி இராஜேந்திரன், ஆவடி நாசர் ஆகியோர் புதிய அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். புதிய வாய்ப்பு பெற்றவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
10. போக்குவரத்துத்துறை மீது அன்புமணி விமர்சனம்
தமிழ்நாட்டில் 2000&க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் உள்ளிட்ட 6247 அரசு ஊர்திகள் பயன்பாட்டில் உள்ளதாகவும், அனுமதிக்கப்பட்ட காலத்தைக் கடந்து காலாவதியாகி விட்ட அந்த ஊர்திகளின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்தால் ஏராளமானோர் வாழ்வாதாரம் இழப்பார்கள் என்பதால், அவற்றை மேலும் ஓராண்டுக்கு இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. சாலைகளில் இயக்கத்த குதியற்ற பேருந்துகளை தொடர்ந்து இயக்க அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து.
டாபிக்ஸ்