Top 6 Tamil News: ‘இபிஎஸ் உருவபொம்மை எரிப்பு.. விஜய்யை தாக்கிய ஆர்.எஸ்.பாரதி.. திருமா கண்டனம்!
Aug 26, 2024, 09:34 PM IST
‘தமிழ்நாட்டில் கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர்., ஆகிவிட முடியாது; எம்.ஜி.ஆர்.,யின் காலம் என்பது வேறு; இப்போது உள்ள காலம் என்பது வேறு. தற்போது கட்சி ஆரம்பிப்பவர்கள், இரண்டு அமாவாசையை கூட தாண்ட முடியாது’
தமிழ்நாட்டில் இன்று இரவு நிகழ்ந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ. சென்னையில் தொடங்கி, மாநிலத்தின் முக்கிய நகரங்களில் நடந்த நிகழ்வுகளின் எளிய செய்தி தொகுப்பை இங்கு காணலாம்:
1.இபிஎஸ் உருவ பொம்மை எரித்து பாஜக போராட்டம்
கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோயில் அருகே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர். பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்பான விமர்சனத்திற்கு பதிலடியாக, இந்த போராட்டம் நடைபெற்றது. போலீசார் தடுப்பை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.
2. சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு; திருமாவளவன் கண்டனம்
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாளவவன், ‘‘ஏற்கனவே பல்வேறு விதமான வரிகளை சுமத்தி ஏழை,எளிய மக்களை கசக்கிப் பிழியும் மத்திய பாஜக அரசு சுங்கச்சாவடி கட்டணங்களின் மூலமாகவும் பொதுமக்களைத் துன்புறுத்தி வருகிறது. இந்நிலையில் மேலும் கட்டணத்தை உயர்த்துவது அநீதியானது,’’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
3. மதுரை-தாம்பரம் நாளை சிறப்பு ரயில்
மதுரை-தாம்பரம் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து இரவு 8:50 மணிக்கு புறப்படும் ரயிலானது, திண்டுக்கல் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக புதன் கிழமை காலை 6:30 மணிக்கு சென்னை தாம்பரம் வந்தடையும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. விஜய் மீது ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு
தமிழ்நாட்டில் கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர்., ஆகிவிட முடியாது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார். நாகையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், ‘தமிழ்நாட்டில் கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர்., ஆகிவிட முடியாது; எம்.ஜி.ஆர்.,யின் காலம் என்பது வேறு; இப்போது உள்ள காலம் என்பது வேறு. தற்போது கட்சி ஆரம்பிப்பவர்கள், இரண்டு அமாவாசையை கூட தாண்ட முடியாது’ என்று நடிகர் விஜய்யை மறைமுகமாக சாடினார் ஆர்.எஸ்.பாரதி.
5. கள்ளக்குறிச்சி வழக்கு; மேலும் குண்டாஸ்
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து ஏராளமானோர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பலர் மீது குண்டர்தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 பேர் மீது இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
6. அம்மா உணவகத்தில் நுழைந்த பாம்பு
சென்னை கோயம்பேடு அம்மா உணவகத்தில் திடீரென நுழைந்த 5 அடி நீள சாரைப்பாம்பு. உணவு சாப்பிட வந்தவர்கள், உணவக பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த படையினர், போராடி பாம்பை மீட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
தமிழ்நாட்டின் அனைத்து செய்திகளும் எளிதாகவும், விரைவாகவும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்கள் வாயிலாகவும் எங்களை பின்தொடரலாம்.