TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி ஆறு!
Mar 25, 2024, 07:08 PM IST
TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகளை தொடராக வெளியிடுகிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்.. எனவே, தொடர்ந்து படியுங்கள்.. தேர்வில் வெல்லுங்கள்!
TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகளை தொடராக வெளியிடுகிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்.. எனவே, தொடர்ந்து படியுங்கள்.. தேர்வில் வெல்லுங்கள்!
இந்நிலையில் அரசியலமைப்புப் பகுதியில் சராசரியாக 11 மதிப்பெண்கள் வரை கேட்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, அரசியலமைப்புப் பகுதி என்பது மிகவும் எளிமையான பகுதி என்பதால் இன்றும் அதில் இருந்து இந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4க்காக தெரிந்துகொள்ளவேண்டிய பகுதிகளை சிறு சிறு குறிப்புகளாகப் பார்ப்போம்.
- தேசியப் பாடலான வந்தே மாதரத்தை இயற்றியவர், பங்கிம் சந்திர சட்டர்ஜி ஆவார்.
- இந்தியாவின் தேசிய கீதம் ஜன கண மன எனத் தொடங்குகிறது. இப்பாடல் முதன்முதலாக கொல்கத்தாவில் பாடப்பட்டது.
- இந்திய தேசியக் கொடியை ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த பிங்காலி வெங்கையா என்பவர் வடிவமைத்தார். விடுதலை இந்தியாவின் முதல் தேசியக்கொடி, தமிழ்நாட்டிலுள்ள குடியாத்தத்தில் நெய்யப்பட்டது. இந்தக் கொடியை 1947ஆகஸ்ட் 15ஆம் தேதி பண்டித ஜவஹர்லால் நேரு செங்கோட்டையில் ஏற்றினார். இக்கொடியானது சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
- தேசிய கீதத்தை இயற்றியவர், ரவீந்திரநாத் தாகூர் ஆவார். இந்த தேசிய கீதத்தைப் பாடுவதற்கு எடுத்துக்கொள்ளவேண்டிய கால அளவு 52 நொடிகள் ஆகும்.
- பாசறைக்குத் திரும்புதல் என்றால் என்ன?: ஒவ்வொரு வருடமும் ஜனவரி 29ஆம் தேதி, ‘பாசறைக்குத் திரும்புதல்’என்ற விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தரைப்படை, கடற்படை, விமானப் படையைச் சார்ந்த இசைக்குழுவினர் இந்த நிகழ்ச்சிகளை நடத்துவர். குடியரசுத் தலைவர், இந்த நிகழ்வில் விருந்தினராகப் பங்கேற்பார். அதன்பின், குடியரசு தினவிழாவுக்கு வெளியில் வந்த முப்படைகள், தங்கள் இருப்பிடங்களுக்குக் கொண்டு செல்லப்படும். இதன் ஒருபகுதியாக, மாலை 6 மணிக்கு, ஜனாதிபதி மாளிகை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.
- பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா என்பவர் தான், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கைப்பட எழுதினார். அதுவும், இத்தாலி பாணியில் எழுதப்பட்டது.
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உண்மைப் பிரதிகள், நாடாளுமன்ற நூலகத்தில் ‘ஹீலியம் வாயு’ நிரப்பப்பட்ட பேழையில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. இந்தப் பிரதிகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உள்ளது.
- அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் பி.ஆர்.அம்பேத்கர், என். கோபால சாமி, கே.எம்.முனுஷி, சையத் முஹமது சதுல்லா, பி.எல்.மிட்டர், என்.மாதவராவ், டி.டி.கிருஷ்ணமாச்சாரி,டி.பி.கேதான் ஆகிய சட்ட வல்லுநர்கள் இடம்பெற்றிருந்தனர். நமது அரசியல் சட்டம் உருவானபோது 395 உறுப்புகள், 22 பகுதிகள் மற்றும் 8 அட்டவணைகள் ஆகியவை இருந்தன. 2020ஆம் ஆண்டு வரை, 104 முறை திருத்தப்பட்டுள்ளது.
- 1789ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சியின்போது, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன முக்கிய முழக்கமாக இருந்தன. இந்திய அரசியலமைப்பின் முகவுரையில், அவற்றிற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
- மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என அழைக்கப்படுவதாக ஆப்ரகாம் லிங்கன் தெரிவித்துள்ளார்.
- மக்களாட்சியின் பிறப்பிடம் கிரேக்கம் ஆகும்.
- மக்களாட்சி - Democracy - Demos மற்றும் Cratia எனும் கிரேக்கச் சொற்களில் இருந்து பெறப்பட்டதாகும். டெமாகிரஸி என்றால், ‘மக்கள் அதிகாரம்’ என அழைக்கப்படுகிறது.
- இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் 1920ஆம் ஆண்டு நடந்தது. இம்பீரியல் கவுன்சில் என்னும் மத்திய சட்டசபைக்கும் மாகாண சட்ட சபைக்கும் தேவையான உறுப்பினர்களை, தேர்ந்தெடுக்க பிரிட்டிஷ் இந்தியாவில் 1920ஆம் ஆண்டில், ‘முதல் பொதுத் தேர்தல்’ நடத்தப்பட்டது.
- இந்திய அரசியலமைப்பு, நவம்பர் 26,1949ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, வரும் ஜனவரி 26, 1950ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. எனவே, ஜனவரி மாதம் 26ஆம் நாள், 1950 ஆம் ஆண்டு இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.
டாபிக்ஸ்