75 years of DMK: ‘கொட்டும் மழையில் உதித்த தெற்கு சூரியன்!’ சாமானியர்கள் அரியணை ஏறியது எப்படி! திமுக உருவான வரலாறு!
Sep 14, 2024, 06:05 PM IST
History of DMK: 1956ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற 2ஆவது மாநில மாநாடு இந்திய அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்த காரணமாக இருக்கும் என்பதை அப்போது யாரும் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை. தேர்தல் அரசியலில் திமுக ஈடுபடுவது குறித்த தீர்மானம் மாநாட்டில் முன் வைக்கப்பட்டது
வரும் செப்டம்பர் 17ஆம் தேதி 75ஆண்டுகளை நிறைவு செய்யும் வகையில் திமுக தனது பவளவிழாவை கொண்டாடும் நிலையில் அதன் சுருக்கமான வரலாற்றை பேசுகிறது இந்த தொடர்….!
நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற முப்பரிமாணங்களை கொண்ட நூற்றாண்டு கால திராவிட இயக்க வரலாற்றை திமுக என்ற மூன்றெழுத்தை தவிர்த்துவிட்டு எழுத முடியாது.
கொட்டும் மழையில் தொடங்கப்பட்ட இயக்கம்
1947ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி வடசென்னையில் உள்ள ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. பேரறிஞர் அண்ணா, ஈவெகி சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், என்.வி.நடராஜன், மதியழகன் உள்ளிட்டோர் அதன் ஐம்பெரும் தலைவர்களாக இருந்தனர். வடசென்னை பகுதியில் உள்ள அறிவகம் அதன் தலைமை அலுவலகமாக செயல்பட்டது.
சமூக இயக்கமாக தொடர்ந்த பயணம்
இருப்பினும் தேர்தல் அரசியலில் ஈடுபட்டு அதிகாரத்தை பிடிக்கும் இயக்கமாக திமுக அப்போது உருவாக்கப்படவில்லை. திராவிடர் கழகத்தை போன்றே ஒரு சமூக இயக்கமாக கட்டமைக்கவே அதன் ஆரம்பகால முன்னோடிகளின் திட்டம் ஆக இருந்தது.
திராவிட நாடு, சாதிய பாகுபாட்டை ஒழிப்பது, பகுத்தறிவு சிந்தனையை ஊக்குவிப்பது, பிராமணர் அல்லாத சமூகங்களின் நல்வாழ்வுக்கான போராட்டங்களை முன்னெடுப்பது உள்ளிட்டவை ஆரம்பகால திமுகவின் முன்னோடி கொள்கைகளாக இருந்தது.
இந்தியா விடுதலை அடைந்த பிறகு சந்தித்த 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் திராவிட நாடு கொள்கையை ஏற்றுக் கொள்ளும் வேட்பாளர்களை ஆதரிப்பதாக திமுக அறிவித்தது.
1953ஆம் ஆண்டில் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி முறைக்கு எதிர்ப்பு, டால்மியாபுரம் என்ற பெயரை கல்லக்குடி என்று பெயர் மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக நடத்திய மும்முனை போராட்டம் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது.
தேர்தல் அரசியலில் திமுக
1956ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற 2ஆவது மாநில மாநாடு இந்திய அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்த காரணமாக இருக்கும் என்பதை அப்போது யாரும் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை. தேர்தல் அரசியலில் திமுக ஈடுபடுவது குறித்த தீர்மானம் மாநாட்டில் முன் வைக்கப்பட்ட நிலையில், அது குறித்த வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலானோர் திமுக தேர்தல் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் என்று வாக்கு அளித்ததால் திமுகவின் பயணம் தேர்தல் அரசியலை நோக்கியதாக இருந்தது.
சட்டமன்றத்தில் நுழைந்த திமுக
1957ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 15 தொகுதிகளில் வென்று முதல் முறையாக திமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குள் நுழைந்தனர். காஞ்சிபுரம் தொகுதியில் இருந்து பேரறிஞர் அண்ணா, குளித்தலைத் தொகுதியில் இருந்து கருணாநிதி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். 1958ஆம் ஆண்டில் உதயசூரியன் சின்னம் திமுகவுக்கு தேர்தல் சின்னமாக அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கைவிடப்பட்ட திராவிட நாடு கொள்கை
1962ஆம் ஆண்டில் சீனா இந்தியா மீது படை எடுத்த நிலையில், இந்தியாவில் தனிநாடு கோரும் இயக்கங்களை தடை செய்வதற்கான சட்டத்தை நேரு தலைமையிலான அரசு கொண்டு வந்தது. இது அரசியல் இயக்கமாக வளரும் திமுகவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்ட நிலையில், அக்கட்சியின் ஜீவாதார கொள்கைகளில் ஒன்றாக இருந்த ‘தனி திராவிட நாடு’ கொள்கையை கைவிடுவதாகவும், ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே உள்ளதாகவும் பேரறிஞர் அண்ணா அறிவித்தார்.
தோல்வி அடைந்த அண்ணா
அதே ஆண்டு நடைபெற்ற தேர்தல் 50 தொகுதிகளில் வென்று திமுகவினர் தனது பலத்தை பெருக்கியது. இருப்பினும் பேரறிஞர் அண்ணா காஞ்சிபுரம் தொகுதியில் தோல்வி அடைந்தது அக்கட்சியினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆட்சியை பிடித்த திமுக
1965ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் பெறும் திருப்பு முனையை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியது. அப்போது நிலவிய அரிசி பஞ்சம் ஆளும் காங்கிரஸ் கட்சி மீது மக்கள் அதிருப்தி அடைய காரணம் ஆக அமைந்தது.
1967ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அண்ணா லைமையில் நடந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரசை தோற்கடித்து திமுக வெற்றி பெற்றது. இந்திய அரசியல் வரலாற்றில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஒரு மாநிலக் கட்சி முத்ல்முறையாக ஆட்சி அமைத்த வரலாற்றையும் திமுக படைத்தது.
அறிஞர் அண்ணா 1969ஆம் ஆண்டு வரை மட்டுமே முதலமைச்சராக இருந்தாலும் அவர் ஆற்றிய பணிகள் இன்று வரை நினைவுக்கூறப்படுகின்றது.
மொழிக் கொள்கை
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் எதிரொலியாக தமிழக பள்ளிகளில் தமிழ், ஆங்கிலத்தை முதன்மை மொழிகளாக கொண்டு பாடங்களை நடத்தும் இருமொழிக் கொள்கை சட்டத்தை அமல் ஆக்கியது.
மானிய விலையில் அரிசி
ஏழை மக்களுக்கு மானிய விலையில் அரிசி வழங்கும் திட்டத்தை சென்னை மற்றும் கோவையில் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு என்ற பெயர் சூட்டல்
“மெட்ராஸ் ஸ்டேட்” என்று அழைக்கப்பட்ட நிலப்பரப்பிற்கு ”தமிழ்நாடு” என்று பெயர் சூட்டியது.
அண்ணா மறைவுக்கு பின்னர் நடந்த திமுக வரலாற்றை அடுத்த தொடரில் பார்க்கலாம்….!