Friendship Day 2024: பெரியார் - ராஜாஜி முதல் மோடி-அமித் ஷா வரை! அரசியலை ஆட்டிப்படைத்த டாப் 5 நட்புகள்!
Friendship Day 2024: அரசியலை பொறுத்தவரை நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று சொல்வார்கள். ஒன்றாக பயணிக்க முடியாமல் போனாலும் மனதளவில் மரியாதை உடன் நட்புடன் பழகிய தலைவர்களும் உண்டு.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பர்கள் தினம் கொண்டாடுப்படுகின்றது.
அரசியலை பொறுத்தவரை நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று சொல்வார்கள். ஏனெனில் காலசூழ்நிலைக்கு ஏற்ப அரசியல் நிலைப்பாடுகள் மாறும் என்பதால் அரசியலில் நிரந்தரமாக ஒன்றாக பயணிப்பவர்கள் குறைவு. அப்படி ஒன்றாக பயணிக்க முடியாமல் போனாலும் மனதளவில் மரியாதை உடன் நட்புடன் பழகிய தலைவர்களும் உண்டு. அந்த காலம் முதல் இந்த காலம் வரை அரசியலில் பெரும் தாக்கத்தை டாப் 5 அரசியல் நட்புக்கள் குறித்து நண்பர்கள் தினமான இன்று பார்க்கலாம்.
பெரியார் - ராஜாஜி
அரசியல் களத்தில் கருத்து முரண்கள் கடல் அளவு இருந்தாலும் தனிப்பட்ட நட்பில் கடுகளவு இடைவெளி கூட வராமல் பார்த்துக் கொண்ட நட்பில் பெரியார் - ராஜாஜி ஆகியோரின் நட்பு மிக முக்கியமானது. ஈரோட்டில் செல்வந்தர் வீட்டு பிள்ளையாக இருந்த பெரியார் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் ராஜாஜி. இருப்பினும் வகுப்புவாரி பிரதிநித்துவம் போன்ற கொள்கைகள் காரணமாக ராஜாஜியை எதிர்த்தே தனது அரசியலை பெரியார் செய்தார். இவர்களுக்குள் கொள்கை ரீதியான கருத்து வேறுபாடுகளும், கடும் விமர்சனங்களும் இருந்தாலும், இவர்களின் நட்பு என்றும் ஆழமாக வேறூன்றி இருந்தது. “எனக்கு ராஜாஜி உண்மையான நம்பிக்கைக்காரராகவும் நண்பராகவும் ஆக வேண்டும் என்பதும் ராஜாஜியின் ஆசை. அதனால், நான் அவர் நட்பில் மூழ்கிவிட்டேன்” என குற்றாலத்தில் ராஜாஜியைச் சந்தித்ததுகுறித்து தந்தை பெரியார் 1936 ஆம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி வெளியான குடிஅரசு இதழில் எழுதி உள்ளார். ராஜாஜி மரணத்தின் போது பெரியார் சிந்திய கண்ணீரே இவர்களின் நட்புக்கு சான்று.