தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு பாதுகாப்பே இல்லை! ஆம்ஸ்ட்ராங் மனைவியை சந்தித்த பின் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேட்டி
Jul 17, 2024, 04:20 PM IST
TN BSP chief Armstrong murder: தமிழகத்தில் தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. பல தலித் தலைவர்களும் இங்கு இருக்க வேண்டும் என்பது எனது கோரிக்கையும் கூட. தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என முதல்வரிடம் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் நடைபெறும் தலித் படுகொலைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே பொறுப்பு, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்து உள்ளார்.
சென்னையில் மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, அவரது மனைவி பொற்கொடியை சந்தித்து ஆறுதல் கூறினார்.
சிபிஐ விசாரணை வேண்டும்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பின்னால் யாரோ கொலைக்கு திட்டமிட்டுள்ளனர். எனவே, சிபிஐ விசாரணையை அறிவிக்க வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக்கொள்கிறேன். சிபிஐ விசாரணையில், முக்கிய குற்றவாளிகளை நிச்சயம் பிடிப்போம்.
ஆம்ஸ்ட்ராங்க் குறித்த தகவலை வெளியில் சொன்னது யார்?
ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியை நான் சந்தித்தேன். மேலும் பல தகவல்களை அவர் எனக்கு அளித்துள்ளார். ஒவ்வொரு முறையும் அவருக்கு மெய்க்காப்பாளர் இருந்த போதும், அன்று மெய்க்காப்பாளர் இல்லாமல் தனியே இருந்தார். கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் தனது புதிய வீட்டிற்குச் சென்ற அவர், அப்போது துப்பாக்கி இல்லாமல் இருந்தார். எனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேரை போலீசார் விசாரிக்க வேண்டும். இவர்களை போலீசார் கைது செய்தது சரிதான், ஆனால் அம்ஸ்ட்ராங்கிடம் ஆயுதம் ஏதும் இல்லை என தகவல் கொடுத்தது யார்? இந்த விசாரணையை போலீசார் எடுக்க வேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் ஆயுதம் ஏந்தவில்லை
மேலும், அவர் ஆயுதம் ஏந்தவில்லை என்று அவரது மெய்க்காப்பாளர் குழுவைச் சேர்ந்த யாரோ தகவல் கொடுத்திருக்க வேண்டும். அப்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த தனது புதிய வீட்டிற்குச் சென்றார். எந்த மெய்க்காப்பாளரும் அவருடன் இல்லை, அவர் ஆயுதம் இல்லாமல் இருந்தார். அவரது மனைவி என்னிடம் இந்த மிகவும் வருத்தமான மற்றும் தீவிரமான விஷயத்தை கூறினார்.
சிபிஐ விசாரணையை உறுதி செய்ய வேண்டும்
நான் உங்களுடன் இருக்கிறேன், எனது கட்சியும் உங்களுடன் உள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி, வேண்டுகோள் விடுக்கிறேன். நான் அமித் ஷாவை சந்திப்பேன், இது மிகவும் தீவிரமான விஷயம். இந்த கொலை வழக்கை இந்திய அரசு விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில் சிபிஐ விசாரணையை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி முறையிடுவேன். இதுவே எனது கோரிக்கை.
தமிழ்நாட்டில் தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை
தமிழகத்தில் தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. பல தலித் தலைவர்களும் இங்கு இருக்க வேண்டும் என்பது எனது கோரிக்கையும் கூட. தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என முதல்வரிடம் கேட்டுக் கொள்கிறேன். இதுவும் என்னுடைய பரிந்துரைதான். இந்த வழக்கில் முதல்வர் முடிவெடுக்க வேண்டும். சென்னை மாநகர காவல் ஆணையரை இடமாற்றம் செய்ய தமிழக முதல்வர் முடிவெடுத்துள்ளார். இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று இந்த புதிய கமிஷனரிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என கூறி உள்ளார்.